சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?

சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் அமெரிக்க தனது கோர முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இந்த முடிவை விரும்பவில்லையென்றாலும் அமெரிக்க ஜனாதிபதியாய் இருப்பவர், அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர், எடுக்கும் ஒரு முடிவு அந்த நாட்டினர் எடுத்த முடிவாகத்தான் கருத முடியும்.

ஈராக் நாட்டின் ஜனாதிபதியாய் இருபத்திநாலு ஆண்டுகள் இருந்தவர் சதாம் உசேன். ஓபெக் என்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பில் அங்கத்தினராக இருந்துகொண்டு அமெரிக்காவிற்குப் பணியாமல் இருந்ததற்கான தண்டனையைத்தான் தற்போது அவர் அடைந்திருக்கிறhர்.

ஈராக் குவைத்தில் ஊடுருவியதற்கே அமெரிக்காவின் தூண்டுதல்தான் காரணம் என்ற ஒரு மறைமுகக் குற்றச்சாட்டு உண்டு. ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவினுடதாக்கவும், இஸ்ரேலிற்கு அருகிலிருந்த பலமான எதிரியை ஒழிப்பதற்கும் அமெரிக்கா இப்படி ஒரு நாடகத்தை ஏற்படுத்தியது என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பு. எதிரியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டதன்பேரில் சதாமை வெல்லமுடியாமல் போனது.

அப்போதைய அமெரிக்கத்திட்டமாக (2001-ல), அரசியல் நோக்கர்கள் முன்வைத்தது இதைத்தான்

1. ஈராக்கை கையகப்படுத்தி சதாமைக் கொலைசெய்துவிட்டு அமெரிக்க இராணுவ ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டிலோ.. அல்லது ஒரு பொம்மை அரசின் கையிலோ கொடுத்து வைப்பது.

2. ஈராக்கை இப்படி நிர்மூலமாக்குவதன் மூலம் ஏனைய அரபு நாடுகளை பயமுறுத்தி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு தலைவணங்க வைப்பது.

3. பிறகு சிரியா மேல் போர்தொடுத்து அதை பிரான்ஸ்நாட்டுக் காலனியாக்குவது, அதற்கு விலையாக பிரான்ஸ் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது.

4. சிரியாவின் ஆதரவு ஹெஸ்பொல்லாவிற்கு இல்லாமல் போகும் சூழ்நிலையில் ஜோர்டானையும் லெபனானையும் இஸ்ரேல் மிரட்டி வைப்பது. பாலஸ்தீனை ஒன்றும் இல்லாமல் செய்வது அல்லது இஸ்ரேலின் காலனியாக்குவது.

5. ஈராக் காரியம் முடிந்தவுடன் ஈரானைத் தாக்கி அதை நிர்மூலமாக்குவது. சன்னி மற்றும ஷியா முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் கொன்று ஒழிக்க ஆன அத்தனை காரியங்களையும் செய்வது.

6. சவுதிஅரேபியா அரச குடும்பத்தை மிரட்டி தனது செயல்களுக்கு ஆமாம் சாமி போட வைப்பது. மறுக்கும் பட்சத்தில் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வளம் மிகுந்த கிழக்கு சவுதி அரேபியாவை பிரித்து வெறும் அரேபியாவாக்கி அதற்கு அமெரிக்கப் பொம்மை அரசரை பதவியேற்க வைப்பது.

தற்போது ஐந்து வருட இடைவெளியில் நடந்திருப்பவற்றை தொடர்புபடுத்திப் பாருங்கள்.

ஆனால், திட்டம் தொடர்ந்தது. பத்து வருடங்கள் ஈராக்கிய மக்களை பட்டினிபோட்டு கொன்றதுமில்லாமல், அந்நாட்டின் பொருளாதாரத்தை உள்கட்டமைப்பை முடக்கி வைத்திருந்து, செப்டம்பர் தாக்குதலை மையப்படுத்தி கடைசியில் வலுவிழந்திருந்த ஈராக்கின் மேல் போர்தொடுத்த ஓர் சாத்தான் (உபயம்: வெனிசுலா அதிபர் சாவேஸ்) ஜார்ஜ் புஷ். சதாமின் கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. அதை இவ்வளவு அவசரமாக நிறைவேற்றியதன் மூலம் ஜார்ஜ் புஷ்ஷின் கோரமுகம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டிருந்த குற்றவாளிகளெல்லாம் சிறையில் வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக்கிய மக்களைக் கொன்றதாகக் கூறி ஒரு முன்னாள் ஜனாதிபதியை புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின்படி அமெரிக்க அரசின் நேரடித் தூண்டுதலின் பேரில் தூக்கிலிட்டார்களே..

அது எதற்குத் தெரியுமா..

அரபு தேசத்தில் உள்ள அத்தனை தேசத்து அரச குடும்பங்களையும் பயமுறுத்தி வைக்கத்தான்.

அதாவது...

1. பல நூறு ட்ரில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் அரபுநாடுகளின் மன்னர் குடும்பத்தினர், அந்தப் பணத்தை இப்போதைக்கு அமெரிக்காவிலிருந்து எடுக்கக்கூடாது அல்லது ஈரோவாக மாற்றக் கூடாது.

2. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் அல்லது ஏறக்குறைய இலவசமாக எண்ணெய் கிடைக்க வேண்டும்.

3. ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களிடையே ஒரு நிரந்தரப் பகைமையை பெரிய அளவில் வளர்த்துவிட வேண்டியது. அதன் மூலம் ஒரு நிரந்தரமற்ற பயமிகுந்த ஒரு சூழலை (FUD) ஏற்படுத்துவது. இஸ்ரேலுக்கு எந்த தேசாந்திர எதிரியும் இல்லாமல் செய்வது.

4. அமெரிக்காவின் சொல்லுக்கு மாற்றுப் பேசும் எந்த அரபுதேசத்து அரசகுடும்பத்தினருக்கும் இதுதான் கதி என்று காண்பிப்பது.

ஒரு நாட்டின் அதிபர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டைக் காப்பதற்காக எடுக்கும் எந்த முடிவையும் பின் வரும் அரசுகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தீர்ப்பு வழங்குமானால், உலகின் அத்தனை தலைவர்களும் தூக்குமேடைக்குப் போக வேண்டியவர்களே.. இதை முதலில் உணரவேண்டும்.

அமெரிக்காவிற்கு இன்றைக்கு சதாம் எதிரியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு சதாம் செய்த உதவிகள் ஏராளம். மன்மோகன் சிங் அரசு ஒரு சிங்க அரசாக இந்தத் தண்டனைக்கு எதிராக கொஞ்சம் உரக்கவே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

1991-ல் சதாமின் பெயரை தமது பிள்ளைகளுக்கு பெயராக சூட்டிய பெற்றோர்களும், இன்றைக்கு 15-16 வயதிருக்கும் அந்தப் பிள்ளைகளும் மட்டுமின்றி கோடிக்கணக்கான முஸ்லிம்களும் இன்றைக்கு சதாமை ஒரு தியாகியாக நினைக்கிறார்களோ இல்லையோ.. அமெரிக்காவையும், ஜார்ஜ் புஷ்ஷையும் மனதிற்குள் ஆற்ற முடியாத வடுவாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இது தொடர்பான அவசியம் படிக்கவேண்டிய சுட்டிகள்:

1. RUPE-INDIA

2. SAAG

4 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

I didnt realise that ere wld be someone with so much feelings..and i want to know whether the things u have said in this entry is really true...if it is why do US target the Arab countries and not any other countries?

said...

இலக்கியா.. வருகைக்கு நன்றி,

நான் கொடுத்திருக்கும் சுட்டிகளைப் போய்ப் படித்தீர்களானால் உங்களுக்கு உண்மைகள் புரியும்.

said...

//ஒரு நாட்டின் அதிபர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டைக் காப்பதற்காக எடுக்கும் எந்த முடிவையும் பின் வரும் அரசுகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தீர்ப்பு வழங்குமானால், உலகின் அத்தனை தலைவர்களும் தூக்குமேடைக்குப் போக வேண்டியவர்களே.. இதை முதலில் உணரவேண்டும்.//
நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அதாவது, தன் நாட்டை காப்பாற்ற எடுக்கும் இதைப் போன்ற முடிவுகள். ஆனால், உங்கள் கூற்று சதாம் 148 பேரை கொன்றது தவறே இல்லை, சரி தான் என்று சொல்வது போல இருக்கிறாது.

said...

//நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அதாவது, தன் நாட்டை காப்பாற்ற எடுக்கும் இதைப் போன்ற முடிவுகள். ஆனால், உங்கள் கூற்று சதாம் 148 பேரை கொன்றது தவறே இல்லை, சரி தான் என்று சொல்வது போல இருக்கிறாது.//

சதாம் என்ற தனி நபர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக 148 பேரைக் கொன்றதாக அமெரிக்க உருவகப்படுத்துகிறது.

ஒரு நாட்டின் தலைமையை கொலை செய்ய ஒரு "தீவிரவாதக்கூட்டம்" முயற்சி செய்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் அப்போதைய ஈராக்கின் அதிபர்/அரசு செய்திருக்கிறார்/து.

இலங்கையின் தற்போதைய அரசு என்ன செய்கிறதோ,,,

"வார் ஆன் டெர்ரர்" என்று சொமாலியாவில் அப்பாவி மக்களைக் கொல்வது என்ன வகையோ,,

வாசிரிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்று பாகிஸ்தான் தன் இன மக்களையே கொன்றொழிப்பது என்ன வகையோ,

அதே வகை இது.

தனக்கு வேண்டாத தனிப்பட்ட குழுக்களுக்கு தரப்படும் பெயர் "தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்". ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் "போராளிகள்".

தனக்கு வேண்டாத நாடுகள் செய்யும் செயல்களுக்குப் பெயர் "அரச பயங்கரவாதம்."

இந்த மாதிரி தெளிவாக "பகுத்தறிவதற்கு"த்தான் புஷ் இப்படிச் சொன்னார். You are either our side or our Enemy side.

நீங்க யார் பக்கம்?