ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 6

புருலியா ஆயுதமழை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் முக்கியமாக இருவர். பீட்டர் பிளீச் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றும் கிம் டேவி எனப்படும் மற்றொரு நபர். பீட்டர் பிளீச் எவ்வாறு இந்த கிம் டேவியுடன் தொடர்புகொண்டு கிம் டேவியின் வலைக்குள் சிக்கி கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் ஆயுதத்தூவலைச் செய்தார் என்று பார்ப்போம் (அப்படித்தான் பிரிட்டிஷ் உளவுத்துறை சொல்கிறது).

முதலில் பீட்டர் பிளீச்.

பீட்டர் வான் கால்கெஸ்டீன் பிளீச் (Peter von Kalkstein-Bleach), பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறையில் கார்ப்பொரல் பதவியில் 20 வருடங்கள் பணியாற்றிய பின், பணம்கொட்டும், அதே சமயம் மிகச் சாதுரியம் தேவைப்படும், ஆயுதக் கடத்தல் தொழில் செய்வது என்று முடிவு செய்திருந்தார். இந்தத்தொழில் ஏகப்பட்ட பேப்பர் வேலைகள் இருக்கும் மற்றபடி ஆயுதம் வாங்குவதோ அதைக் கொண்டுபோய் இறக்குவதோ ஒரு விஷயமே கிடையாது என்று நினைத்திருந்தார். இந்த நினைப்பு எவ்வளவு தவறhனது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தத் தொழிலுக்காக பிள்ளையார் சுழி போட்டு ஏரோசர்வ் என்ற கம்பெனியை பிரிட்டிஷ் இராணுவ அமைச்சிடம் முறையாக அனுமதி பெற்று பதிவு செய்திருந்தார்.

ஆகஸ்ட் 1995 வாக்கில் பிளீச் ஒரு தொழில் முறைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோபன்ஹேகன் சென்றிருந்தார். தமது முனிச் நகரைச் சேர்ந்த நண்பரொருவரைப் சந்திக்க நேர்ந்தது. ஒரு முக்கியமான விஷயத்திற்காக கூட்டிப்போவதாகச் சொல்லி அவரை பண்ணை வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், மற்றும் அவரது இரு நண்பர்கள், ஒரு டென்மார்க் நாட்டுக்காரர் மேலும் ஒரு அறிமுகப்படுத்தி வைக்காத நிழல் நபர். அந்த நிழல் நபர் பெரும்பாலும் எதுவும் பேசவில்லை. சிகரட் வியாபாரம் பற்றி வெகுநேரம் பேசியபின், அந்த நிழல்நபரைத் தனியே கலந்தாலோசித்துவிட்டு பிளீச்சிடம் அந்த கோபன்ஹேகன் நபர் விஷயத்திற்கு வந்தார். 2500 ஏகே47 ரக துப்பாக்கிகளையும் 1.5 மில்லியன் துப்பாக்கிக் குண்டுகளையும் ஒரு நபருக்கு அனுப்ப வேண்டும் என்று நேரடியாகச் சொன்னார். ஆயுதக் கடத்தல் விவகாரத்தில் பொதுவாக இது யாருக்குப் போகிறது என்று விசாரிக்கப்படுவது வழக்கமில்லை. மேலும் இந்திய நகரான கல்கத்தாவிற்குப் போவதால் அது இந்திய அரசிற்காகக் கூட இருக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அந்த தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிராத நிழல் நபர், பிளீச் இந்த விஷயத்திற்கு ஒத்துக் கொண்டவுடன், ஒரு பெரிய வரைபடத்தை விரித்து மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை விரலால் வட்டமிட்டு இங்குதான் இது செல்ல வேண்டும் என்றபோதுதான் அவருக்கு சுரீரென்று உரைத்தது. இது தீவிரவாதக் கும்பலுக்குச் செல்லுகிறது என்று. உடனே மனதிற்குள் இதை பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் தெரிவித்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், வந்தவரை காசு என்றும், நினைத்துக் கொண்டார். அந்த நிழல் நபர் தொடர்ந்தார். தனது அமைதி விரும்பும் மக்களை மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு கொடுமைப் படுத்துவதாகவும் கொன்று குவிப்பதாகவும் அதற்காகவே இந்த ஆயுதங்கள் செல்வதாகவும் சொன்னார். பிளீச் தனது வியாபாரத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த டெலிவரி ஒன்று பாராசூட் மூலமாகவோ அல்லது இரகசியமாக தரையிறங்கியோதான் செய்யமுடியும் என்றும், கடைசிவரை இந்த பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு விமானியைத் தவிர, வேறு யாருக்கும் டெலிவரி செய்வது இந்த இடம் என்று ஒருபோதும் தெரியக்கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.

கடமை சுத்தமாக லண்டன் திரும்பிய பிளீச் பிரிட்டிஷ் இராணுவ அமைச்சின் DESO என்ற அமைப்பைத் தொடர்புகொண்டு ஒன்று விடாமல் வரி பிசகாமல் ஒப்பித்தார். அப்போதைய அதிகாரியான ஆல்கின்ஸ் என்பவர் (இவரே அப்போதைய இந்தியாவிற்கான விவகாரங்களைக் கவனித்தவரும் ஆவார்) பிளீச்சிடம் தொடரந்து அதில் ஈடுபடும்படியாகவும் மேலும் தகவல்களை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும்படியும் ஆலோசனை கூறினார். தாம் டென்மார்க் மற்றும் இந்திய அரசுகளிடம் இதைப் பற்றி தெரிவித்து விடுவதாகவும். மேலும் அந்த திட்டப்படி ஆயுதங்கள் போடப்பட்டால் அதை எடுத்துச் செல்பவர் வரை பிடித்து விடுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் அவரைத் தொடரச் சொல்லியிருந்தனர். நம்பிக்கையுடன் திரும்பிய பிளீச் 470,000 டாலர்கள் என்று கொடேஷன் கொடுக்கிறார். சாதாரண தொழில்முறைப் பயணமாக பங்களாதேஷ் சென்றிருந்த பிளீச்சிற்கு பங்களாதேஷிற்கு ஒரு லெட்டர் ஆப் கிரெடிட் பேக்ஸில் வந்தது. அதில் 470,000 டெபாஸிட் செய்ததற்கான விபரங்களிருந்தன். கீழே கிம் டேவி என்று கையெழுத்திட்டிருந்தது. இது தான் அந்த நிழல் நபரின் பெயர் போலிருக்கிறது என்று பிளீச் நினைத்துக் கொண்டார்.

லண்டன் திரும்பிய பிளீச் தற்போது மீண்டும் உளவுத்துறையைச் சந்தித்து அவர்களிடம் கூடுதல் தகவல்களைத் தெரிவித்தார். தற்போது அந்த அதிகாரிகளில் ஒருவர் பிளீச்சை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார். அதிர்ச்சியடைந்த பிளீச், தான் இதில் ஈடுபட்டிருப்பது பணம் சம்பாதிக்க மட்டுமே. எனவே தான் பணத்தைப் பெற்றுக் கொண்டபின் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் தெரிகிறது. உளவுத்துறை இதை மறுக்க, பிளீச் இதை ஆமோதிக்க, உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

ஆக உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகும் பிளீச் இதில் ஈடுபட்டார். ஆனாலும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் இது சம்பந்தப்பட்ட செய்திகளை இந்திய உளவுத்துறைக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நவம்பர் 1995 வரை, அதாவது ஆயுதம் போடப்படும் ஒருமாதம் முன்பு வரை, அது இந்திய அரசின் காதுகளுக்கே போகவில்லை.

6 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

Read the latest part of the Purulia arms-drop series.

The topics are very interesting.
My interests seem to converge with the objectives of this blog. Waiting to see more diverse topics in your blog.

Pedharayudu

said...
This comment has been removed by the author.
said...

பெத்தராயுடு... வருகைக்கு நன்றி.

எனக்கு வேறு விஷயங்களைப் பற்றியும் எழுத நிறைய ஆர்வமுண்டு.. ஆனால் போதிய அவகாசம் இல்லாமலிருக்கிறது.

கைவசம் நிறைய யோசனைகள் உள்ளன. இந்துத்துவத்தில் உருவமற்ற வழிபாட்டுமுறைகளைப் பற்றி (இந்தியன் இஸ்லாம்?), இந்தியாவின் அடுத்த பதினைந்தாண்டுகளுக்கான முன்னோட்டமாக பிஸினஸ்டுடே வகைப்படுத்தியிருப்பதைப் பற்றி, மிக அதிக வாய்ப்புள்ள இந்தியாவிற்கான தொழில்களைப் பற்றி, ஆசியப் பனிப்போர் என்ற எனது தொடரில் நான் சொல்லிய சில விஷயங்கள் தற்போது நடந்தேறி வருவது பற்றி... இப்படி ஏராளமான விஷயங்கள் உள்ளன.

தமிழில் டைப் செய்வது கஷ்டமில்லை..ஆனால் அதை யுனிகோடாக மாற்றி இணையத்தில் ஏற்றுவதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிடுகிறது. பார்க்கலாம்..

said...

திருவடியான்,

நான் விரும்பிப்படிக்கும் தொடர் உங்களுடையது.

//கைவசம் நிறைய யோசனைகள் உள்ளன. இந்துத்துவத்தில் உருவமற்ற வழிபாட்டுமுறைகளைப் பற்றி (இந்தியன் இஸ்லாம்?), இந்தியாவின் அடுத்த பதினைந்தாண்டுகளுக்கான முன்னோட்டமாக பிஸினஸ்டுடே வகைப்படுத்தியிருப்பதைப் பற்றி, மிக அதிக வாய்ப்புள்ள இந்தியாவிற்கான தொழில்களைப் பற்றி, ஆசியப் பனிப்போர் என்ற எனது தொடரில் நான் சொல்லிய சில விஷயங்கள் தற்போது நடந்தேறி வருவது பற்றி... இப்படி ஏராளமான விஷயங்கள் உள்ளன. //

நேரங்கிடைக்கும்போது எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

//தமிழில் டைப் செய்வது கஷ்டமில்லை..ஆனால் அதை யுனிகோடாக மாற்றி இணையத்தில் ஏற்றுவதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிடுகிறது. பார்க்கலாம்..//

என்ன எழுத்துருவில் எழுதுகிறீர்கள்?
யூனிகோடில் மாற்றுவதற்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே நேரமெடுக்கும் என்பது என்னுடைய சொந்த அனுபவம்.

உங்களுக்கு இந்த விதயத்தில் உதவ முடியும் என்று நினைக்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் போடுகிறீர்களா? என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்.

mathygrps at gmail dot com

-மதி

said...

மதி.. மிக்க நன்றி.

இதைப்பற்றி தங்களுக்கு தனியாக மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

திருவடியான்

said...

மதி மற்றும் VoW,

தங்களின் உதவிக்கு நன்றி. Firefox-ல் TamilKey என்ற extension-ஐ நிறுவியதால் எந்த வகை கூடுதல் மென்பொருளின் உதவியும் இல்லாமல் விரைவாக பதிவிட முடிகிறது.

திருவடியான்