ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 7

பிற்பாடு பிளீச்சின் டேனி்ஷ் நண்பரும் அவரும், துபாய் போய் பின் அங்கிருந்து டாக்கா சென்றனர். பின்பு அங்கிருந்து கிம் டேவியைச் சந்திக்க பாங்காக் போனார்கள். போகும் வழியில் கிம் டேவியைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் அந்த டேனிஷ் நண்பர். இதே விஷயத்தை முடிக்க டேனிஷ் பிஸினஸ்மேன் ஒருவர் 600,000 டாலர் பேசி 150,000 டாலர் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் ஆனால் தனது பராக்கிரமத்தால் அந்த காண்ட்ராக்டை பிளீச்சிற்குப் பெற்றுத்தந்ததாகவும் பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கிம் டேவி ஹாங்காங்கில் தங்கக் கடத்தலிலும் எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தலிலும் பெரிய கிங் என்றும் பெருமைபாடிக்கொண்டிருந்தார். பேச்சோடு பேச்சாக இந்த ஆபரேஷன் டேவியின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் என்றும் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொன்னார்.

பாங்காக்கில் ஒரு இரவு விருந்தில் கிம் டேவி, டேவியின் வக்கீல், டேவியின் தொழில் பார்ட்னர், பிளீச், அவரது டேனிஷ் நண்பர், மற்றும் ராண்டி என்று தன்னை அழைத்துக்கொண்ட இந்தியர் ஒருவரும் கலந்து கொண்டனர். கிம் தனது திட்டத்தைப் பற்றி விவாதிக்கலானார். மேற்கு வங்கம் வரை கப்பலில் கொண்டு சென்று அங்கிருந்து புருலியாவிற்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லலாமே என்று சொன்னார். அது மிகவும் ரிஸ்க்கான காரியம் என்றும் ஒரு விமானத்தை தற்காலிகமாக விலைக்கு வாங்கி அதைக் கொண்டு அந்த ஆயுதங்களை ஆகாய மார்க்கமாகவே டெலிவரி செய்து விட்டு பிறகு வந்த விலைக்கு அந்த விமானத்தை விற்று விடலாம் என்றும் பிளீச் யோசனை சொல்ல அது ஏற்கப்பட்டது. மேலும் டேவி அந்த விமானத்தை விற்காமல் டாக்காவிலேயே நிறுத்திவைத்துக் கொண்டு வேறு பல சாதாரண வியாபார விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று சொன்னார்.

இந்த ஆலோசனையின்படி டேவி 250,000 டாலர் கொடுத்து ஒரு ஆன்டனோவ் 26 (AH26) ரக விமானம் ஒன்றை வாங்கி ஏஎச்266 என்று நாமகரணம் சூட்டப்பட்டு ஹாங்காங்கில் டேவியால் பதிவு செய்யப்பட்ட கரோல் ஏர் சர்வீஸஸ் என்ற கம்பெனிக்கு அது மாற்றப்பட்டது. பிற்பாடு அதே விமானம் துருக்கியிலும் கைகோஸ் தீவுகளிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த விமானத்தைக் காண்ட்ராக்டில் ஓட்டுவதற்கு விமானச் சிப்பந்திகளாக லாட்விய நாட்டு ஐவர் குழு ஒன்று 30,000 டாலர்களுக்கு முன் வந்தது. அவர்களுக்குச் சொல்லப்பட்டதெல்லாம் இந்தச் சரக்கு விமானத்தை மூன்று மாதகாலங்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு ஓட்டிச் செல்ல ஒரு ஒப்பந்தம். ஆயுதக்கடத்தலெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக அப்போது தெரியாது. காண்ட்ராக்ட் பேசி முடிக்கப்பட்டவுடன் ரிகா என்ற லாட்விய நாட்டு நகரமொன்றின் விமானத் தளத்தில் அந்த விமானம் டெலிவரி செய்யப்பட்டு ஐவர் குழுவின் தலைவரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது.

லண்டன் திரும்பிய பின் மீண்டும் சிரத்தையாக பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் மேற்கொண்டு தகவல்களை அளித்துவிட்டு பிடிஐ (Border Technologies and Innovations) என்ற கம்பெனியை நாடினார், பிளீச். அந்தக் கம்பெனி பல நாடுகளின் இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் செய்வதில் அனுபவம் பெற்றிருந்தது. பிளீச் பங்களாதேஷ் இராணுவ அமைச்சின் முத்திரையுடன் கூடிய ஒரு தபாலை பிடிஐ நி்றுவனத்திடம் அளித்து, இது முறையான ஒரு வியாபாரம்போலக் காட்டியிருந்தார். இதைப் பெறுவதற்காகத்தான் அவர் முன்னம் டாக்கா போய்வந்திருக்க வேண்டும். பிடிஐ நிறுவனம் பல்கேரிய நிறுவனம் ஒன்றிடம் ஆர்டர் அளித்திருந்தது. பிடிஐ நிறுவனம் கொடுத்த பட்டியலின் படி அனைத்தையும் தந்துவிட்டு, பாராசூட் மட்டும் தன்னிடம் இல்லை என்று கைவிரித்து விட்டது. அதுவே ஒரு வகையில் நல்லதாகப் போனது, டேவிக்கு. ஏனென்றால் லாட்விய விமானக்குழுவிற்கு கள்ளிப் பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் போனது.

10 டிசம்பர் 1995. பல்கேரியாவின் பர்காஸ் நகரில் 'சரக்குகளை' பெறுவதற்காக ஆண்டனோவ் 26 தரையிறங்கியது. இதற்கு சற்று முன்பாக பர்காஸிற்கு பிளீச் கிளம்பும் முன் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஒருவர் GATWICK விமானநிலையத்தில் சந்தித்து அவரது பயணத்தைத் தொடரும்படியும் தமது அமைப்பு இதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சரியான சமயத்தில் தலையிட்டு இதைத் தடுத்துவிடுவோம் என்றும் கூறியதாக் பிளீச் தெரிவிக்கிறார். பிளீச் அந்த விமானத்தில் சரக்கை ஏற்றிவிட்டு லண்டன் திரும்பும் நோக்கத்தோடு பர்காஸ் சென்றார். ஆனால் நடந்ததோ வேறு. அங்கு திடீர் விஜயம் செய்த டேவி, பிளீச்சை தன்னுடன் விமானத்தில் பயணிக்கும்படி சொன்னார். இந்த விமானப் பயணம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்த பிளீச் இந்தப் பயணம் முடியும் வரை கூடவே இருக்க வேண்டும் என்று டேவி வற்புறுத்தினார். பின்னர் அது மிரட்டலாக உருமாறியது. மறுத்த பிளீச்சை டேவி 'குடும்பத்தையே தொலைத்துவிடுவேன்' என்று மிரட்ட ஆரம்பிக்க வேறு வழியின்றி பிளீச் அதே விமானத்தில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.


Technical Equipments - Central Ordinance Depot, Rajendrapur Cantoment, Bangaladesh
என்று எழுதப்பட்டிருந்த கள்ளிப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் பர்காஸிலிருந்து கராச்சி நோக்கிப் பறந்தது. அதுவரை இந்தக் கள்ளிப்பெட்டிகள் இராணுவத்திற்கான தளவாடங்களை ரிப்பேர் செய்வது சம்பந்தமான உபகரணங்கள் என்றுதான் விமானிகள் நம்பிக்கொண்டிருந்தனர். கராச்சியில் பாராசூட்டுகள் அந்தக் கள்ளிப்பெட்டியில் இணைக்கப்படும் போது விமானிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பயம், கள்ளிப் பெட்டிகள் தரையிறங்கும் வரை நீடித்தது. 17 டிசம்பர் கராச்சியிலிருந்து ரங்கூன் நோக்கிப் பறந்த அந்த விமானம் மேற்கு வங்காளம் வாரணாசிக்கருகில் வரும்போது போதிய எரிபொருள் இல்லாமல் தகராறு செய்ய, வாரணாசி விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டார்கள். பிளீச்சிற்கு ஆச்சரியமோ ஆச்சரியம். என்ன இந்த இந்திய அதிகாரிகள் யாரும் வந்து விமானத்தைச் சோதனை செய்யவுமில்லை, கைது செய்யவுமில்லை என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் பிரிட்டிஷ் உளவுத்துறை இந்திய அரசிற்கு இந்நேரம் சொல்லி அவர்கள் இந்த விமானத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

எரிபொருள் நிரப்பிய விமானம் ரங்கூன் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ஆனால் மேற்கு வங்கத்தின் கயா நகருக்குமேல் பறக்கத் தொடங்கும் போது துப்பாக்கி முனையில் விமானிகளை மிரட்டி தாழப்பறக்கும் படி செய்து பாராசூட் மூலம் கள்ளிப் பெட்டிகளை இறக்க முனைந்தார் டேவி. விமானிகள் தவறான செய்கைக்கு உடன்படுகிறோமே என்ற பயத்தால் முரண்டு பிடித்ததாலும், தென்ஆப்பிரிக்காவில் வாங்கி கராச்சியில் டெலிவரி எடுத்திருந்த மூன்றாந்தர பாராசூட்கள் சரியாக விரியாததாலும் குறி தவறி ஆயுதங்கள் விழத்துவங்கின. வியர்த்து வழியத்துவங்கியிருந்த விமானிகளை ஆசுவாசப்படுத்தி ரங்கூன் நோக்கி சென்றால், அங்கும் இறங்க முடியவில்லை. போதிய விளக்கு வசதிகள் இல்லாததால் இறங்க சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட வேறு வழியின்றி அந்த இரவு நேரத்தில் கல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டது. துப்பாக்கி முனையிலிருந்த பிளீச் "போலீஸ், இப்போதாவது நீ வரக்கூடாதா?" என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக யாரும் வராமல் போக, அந்த ஆயுதக் கடத்தல் விமானம் தாய்லாந்தின் புக்கெட் நகர் நோக்கிப் பறந்தது.

21 டிசம்பர் 1995. தாய்லாந்திலிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கிய விமானம் கல்கத்தா வழியாக கராச்சி நோக்கி் பறக்க, கல்கத்தா வானிலை சரியில்லாத காரணத்தால் சென்னைக்கு வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு கராச்சி நோக்கிப் பறக்கத் தொடங்கியது. இன்னும் இரண்டு மணிநேரங்களில் கராச்சியில் இறங்கிவிடக் கூடிய தூரத்தில் இருக்கும் போது மும்பை விமான நிலையக் கட்டுபாட்டறையிலிருந்து வந்த ஒரு எச்சரிக்கை அந்த விமானத்தை திரும்ப மும்பைக்கு வரவைத்தது. மும்பை சாகர் விமான நிலையத்தில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது அந்த விமானம். இந்திய விசாரணை அதிகாரிகள் வருவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆனது. துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டிவிட்டு யாரிடமோ தனது போனில் பேசியபின், அதிகாரிகள் வருவதற்கு முன் கீழிறங்கிய கிம் டேவி விமான நிலைய அரைகுறை வெளிச்சந்திலிருந்து நடந்துபோய் இருட்டுக்குள் கரைந்து போனார்.

ஐந்து லாட்விய விமானச் சிப்பந்திகளும் பிளீச்சும் 22 டிசம்பர் 1995 அன்று கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இதில் சில வழக்கமான காமெடிகள் எல்லாம் இருந்தது. அதை இங்கு விளக்கி நம் பெருமையை நாமே பறைசாற்றிக் கொள்ளக் கூடாது அல்லவா. ஆறுபேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராண்டி என்றழைக்கப்படும் சத்யேந்தர் நாராயண் சிங்கின் தம்பியாகிய வினய் குமார் சிங் என்ற இந்தியருக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த வினய் குமார் சிங் மேற்படி சரக்குகளைப் பெற காத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அனைத்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பினரும் பிற்பாடு இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். ஆனால் குற்றம் சரிவர நிருபிக்கப்படாமல் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உண்மையில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பு பொய்யாக இந்த வலைக்குள் சிக்கியிருந்தது என்பதைபின்னர் கண்டுபிடித்தனர்.

ஆயுதக்கடத்தலில் பணம் சம்பாரிக்கலாம் என்று வந்த பிளீச் இந்தியச் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வெளியே வர அவர் பகீரதப் பிரயத்தனம் பண்ணி கடைசியல் வெளியில் வந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இதுவரை மேற்படி சொன்னதெல்லாம் பிளீச் வாக்குமூலமாகச் சொல்லப்பட்டு பிரிட்டிஷ் உளவுத்துறையால் ஆமோதிக்கப்பட்ட கதை.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன...?

எப்போதும் ஒரு நாணயத்திற்கு இருபக்கம் உள்ளது அல்லவா... அந்த மறுபக்கம் என்ன?

ஆனந்தமார்க்கம் என்ற அமைப்பிற்கு ஆயுதங்கள் தரப்படுவதாக பிளீச் மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஏன் பொய் சொல்லப்பட்டது.

மேலும்...

சாகர் விமானநிலையத்தில் மாயமாகி இன்றுவரை கண்ணில் படாத கிம் டேவி என்ற சூத்திரதாரியையும், அவனின் பிண்ணனி என்ன என்பதையும் சற்று விளக்கமாக அடுத்த பகுதியில் காணுவோம்.

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

நன்றாக விறுவிறுப்பாக சென்ற செய்திகளை இப்படி மர்மத்துடன் திடீரென்று முடிப்பது சரி இல்லை ஐயா.

தொடர்ந்து அடிக்கடி எழுதி வரவும். உங்கள் கட்டுரைகளால் தமிழுக்கு ஒரு புதிய முகம் கிடைத்திருக்கிறது என சொல்லாம். இலக்கியம், கலை, திரைச்செய்திகள், ஆத்திகம், நாத்திகம் போன்ற புளித்துப்போன மாவை தினமும் சுவைத்துவரும் தமிழ் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல சுவையுள்ள புது சரக்கு.

தமிழுக்கு பெருமை.

நன்றி.

said...

மாசிலா,, வாழ்த்துக்களுக்கு நன்றி...

தொடர் இன்னும் முடியவில்லை. இன்னும் பலபேரைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறதே...

தொடரும் ஆதரவிற்கு நன்றி,

திருவடியான்