பொங்கல் வாழ்த்துக்களும் சில சிந்தனைகளும்

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

இன்று பொங்கல் திருநாள்.

பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கட்டுக்கட்டாக வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்பிய ஞாபகம் ஏனோ வந்தது.

அதிகாலைக் குளிரில் குளிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே போய் ராசுப்பயல் என்னை வலுக்காட்டி தள்ளிவிட, நடுங்கிக்கொண்டே குளத்தில் போய்க்குளித்து, புதுத்துணியுடுத்தி, காலையிலேயே விறகடுப்பின் புகையின் கண்ணெரிச்சலுக்கிடையில், சூரியனை வானில் தேடி, பொங்கலோ பொங்கல் கூவி, கடவுளுக்குப்படைத்து, இனிப்பான புதுஅரிசியின் வாசனையுடன் இருக்கும் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டு, பிறகு வீடுவீடாக பொங்கலைக் கொடுத்துவர என் அம்மா, இது இது இன்னாருக்கு என்று சொல்லித்தர வீடு வீடாய்ப் போய்க் கொடுத்துவருவேன். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது தருவார்கள். பழம், காய்கறி, காசு, இனிப்பு என்று, ஒரே வசூல்தான் அன்றைக்கு. அன்றைக்குப் பார்த்து காலையில் இந்தச் சூரியன் பத்துமணி வரை தலையைக் காட்டாது. ஒரே மப்பும் மந்தாரமுமாய் இருக்கும், வீதியெங்கும் புகை. புதுத்துணியுடுத்திய பெண்கள் அன்று மட்டும் அதிகமாய் அழகாய்த் தெரிவதும் அவர்களை சடையைப் பிடித்து வம்பிழுப்பதும் தனிக்கதை.

இன்றைக்கு சிங்கப்பூரில் ஒரு உள்ளரங்கத்திலோ அல்லது கோயிலிலோ (தமிழர் திருநாள் இங்கு இந்துக்களின் பண்டிகையாய்ப் போனது) பொங்கல் கொண்டாடப்படும். தத்தம் பிள்ளைகளும் தாமும் பளபளக்கும் பட்டுடைகளில், மெர்சிடஸிலோ அல்லது லெக்ஸஸிலோ வரும் தமிழர்கள் கோயிலில் பக்திசிரத்தையாய் கும்பிட்டுவிட்டு பிள்ளைகளை பொங்கல் பொங்குவதைக் காட்டச் செல்வர். அதன்பின், மாடுகள் எல்லாம் ஒரு கொட்டகையில் வரிசையாகக் கட்டப்பட்டு அங்கு பால்கறக்கும் நேரம் முதலானவை எழுதப்பட்டிருக்கும். (இன்னமும் அதற்கு தனியாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது சந்தோசம்.) மாடுகள் இந்த நிகழ்ச்சிக்காகவே ஜோஹோரிலோ அல்லது லிம்-ச்சு-காங்கிலோ உள்ள ஒரு பண்ணையில் இருந்து தற்காலிகமாக வாடகைக்கு எடுத்துவரப்படும். மாடுகள் மட்டுமின்றி சமூக விலங்குகள் என அழைக்கப்படும் ஆடு, மாடு, எருமை, கோழி, சேவல், நாய்கள், கிளிகள் போன்றவற்றிற்கும் சிங்கப்பூர் பிள்ளைகளுக்கும் வெகு தூரம். (நாய் மற்றும் கிளி ஆகியன வளர்க்க அரசிடம் பணம் கட்டி சில நடைமுறைகளுக்குட்பட்டு வீட்டில் வளர்க்கலாம்.) எனவே மாட்டுப்பொங்கல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றையக் குழந்தைகளுக்கு மாட்டைக் காட்டுவதற்கும் அதில் எப்படி அவர்கள் தினம் குடிக்கும் பால் வருகிறது என்று காண்பிப்பதற்கும் இந்த மாட்டுக் கண்காட்சி உபயோகப் படுகிறது. மாடுகள் லிட்டில் இந்தியா சாலைகளில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது இந்த முறை.

===================

என் மகள் கேட்டாள், அரிசி எப்படி விளைகிறது என்று. அவளுக்கு அது புல் வகையைச் சேர்ந்தது என்று தெரிந்திருக்கிறது. மற்றபடி ஒவ்வொரு புல்லாக வளர்த்து அரிசி செய்வார்களா என்று கேட்க, எனக்கு அப்போது தான் உறைத்தது. மடைபாய்ச்சுவதிலிருந்து, உழுது, பாத்திகட்டி, நாட்டுநற்று, களையெடுத்து, உரம்வீசி, காவலுக்குச் சென்று, கதிரறுத்து, கதிரடித்து, மரக்காலில் அளந்து, மூட்டைகட்டி, காயவைத்து, குதிரில் இட்டு, அவியல்போட்டு ஆறவைத்து, ஆலைக்குத் தூக்கி, அங்கு அரைத்து, உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக, குருணை தனியாகக் கட்டிப் பின் வீட்டுக்குக் கொண்டு வந்து, பானைக்குள் அளந்து கொட்டி முடிக்கும் வரை செய்திருந்த எனக்கு என் 6 வயது மகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மலைப்பாய் இருந்தது. எதையோ தேடப்போய் எதையோ இழந்துவிட்டோமோ என்று ஒருகணம் உலுக்கியது. சமூக பொருளாதார மாற்றங்கள் கலாச்சாரத்திற்குள் எப்படி மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்று உணர்வதற்கு அது தருணமாய் இருந்தது.

=========================

காடுகரையை எல்லாம் விற்றுவிட்டு இன்று இரண்டு ருபாய்க்கு ரேசனில் அரிசிவாங்கிக் கொண்டிருக்கிறான் விவசாயி. இலவசமாக மின்சாரம் வருமா, இலவசமாக கிணறு தோண்டித்தருவார்களா, இலவசமாக உழுது தருவார்களா, இலவசமாக உரம் தருவார்களா, இலவசமாக களை எடுத்துத் தருவார்களா, இலவசமாக கதிரறுத்துத் தருவார்களா என்றெல்லாம் இலவச எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்க, இரண்டு ருபாயில் அரிசியையே வழங்கி ஏகப்பட்ட வாக்குறுதிகளை மிச்சப்படுத்தியிருக்கும் கலைஞர் அவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது, ஆனால் இனி விவசாயி என்பவன் ஒருவன் இருக்காமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அத்தனையும் இருக்கிறது, வியட்நாமிலோ அல்லது தென் கொரியாவிலோ அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம். அவர்கள் அரிசியை இரண்டு ருபாய்க்கும் குறைத்து அரசிற்கு விற்க விரும்பினால் வாங்கித்தானே ஆக வேண்டும். அதுதானே உலக வர்த்தகமயமாக்கல். அதே சமயம் இது வேறு வகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வேலைக்கு ஆட்கள் இன்று கிராமத்தில் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலைக்குப் போனால் குறைந்தது நூறு ருபாய் கூலியாய்க் கிடைக்கிறது. 25 கிலோ அரிசி வாங்கினால் ஒரு மாதத்திற்கு போதும். காய்கறி வாங்க அவ்வப்போது ஒரு நாள் வேலை பார்த்தால் போதும். எதற்கு வேலை பார்ப்பது. குதிரில் நெல் இருந்தால் போதும் டீக்கடைக்கு அரசியல் பேச போய்விடுவானே தமிழன். வேலையாவது மண்ணாங்கட்டியாவது.

==============================

காடுதிருத்தி கழனியெல்லாம் பாடுபட்டு விளைச்சலை வீட்டுக்கு கொண்டுவந்து பகலவனுக்குப் படைத்து நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். இதில் மதமும் இல்லை, சாதியும் இல்லை. தமிழராய்ப் பிறந்தோர் எல்லோரும் கொண்டாடி மகிழ வேண்டிய பெருநாள், பொங்கலை ஆக்கி பாத்தியா ஒதும் இஸ்லாமியக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், காகிதத்தட்டுக்களில் பொங்கலைப் பகிர்ந்துண்ணத் தரும் கிறித்துவக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், ஆனால் இன்றைக்கு பொங்கல் என்ற தமிழர் திருவிழா, தீபாவளி என்ற பளபளக்கும், நொடியில் கரைந்துபோகும் வடநாட்டு திருவிழாவின் வெளிச்சத்திற்கு முன் தாழ்ந்து போனது, பாலகங்காதர திலகர் இதைப் பிரபலப்படுத்தும் வரை இது அஷ்டமி நவமி போன்றதொரு மற்றொரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது,

பொங்கலைப்பற்றி எழுதும்போது இது இங்குமட்டும் தான் வழக்கமா என்ற வழக்கமான ஒரு கேள்வி எனக்குள் எழ, கூகிளப்பனைக் கேட்டால் உலகெங்கும் கொண்டாடுப்படுகிற வழக்கம் என்ற புதுத்தகவல் (எனக்கு) கிடைத்தது,

Thanks Giving Day என்று வடஅமெரிக்காவிலும், லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும், Moon Festival என்று சீனர்களிடத்திலும், Tet Trung Thu என்று வியட்நாமிலும், Succoth என்று யூதர்களிடத்திலும், Kwansa மற்றும் Yam என்று ஆப்பிரிக்கர்களிடேயும், Chusok என்று கொரியர்களிடேயும், இது போக பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது, அமெரிக்காவிலும் கனடாவிலும் இது மதம் சாராத பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், லண்டனில் இது சர்ச் சார்ந்த பண்டிகையாக கடந்த ஒரிரு நூற்றாண்டுகளில் மாற்றப்பட்டிருக்கிறது.

=============================

இன்றைக்குப் பொங்கல் கொண்டாட்டமென்றால் தமிழ்கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகர்களும் நாயகிகளும் சன்டிவியில் தோன்றி வரும் காட்சிகளை வீட்டில் அமர்ந்து ரசிப்பதும், பொங்கலுக்கு வெளியாகும் புதுப்படங்களைப் பார்ப்பதிலும் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க தமிழர், வாழ்க அவர்தம் புதிய கலாச்சாரம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

7 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

test message

said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

அற்புதமான பதிவு திருவடியான். தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

அரைபிளேடு (என்னங்க பேரு இது..), கருப்பு.. நன்றி.. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்.

said...

உங்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

Thank you very much Mr.Thiruvadiyan,

Since I do not have tamil software to send this message in tamil script.

Your article is very clear about this tamil society,where it's heading towards and how its culture all devastated by this globalaisation and the by the domination of the NORTHERN CULTURE
(AARIYAN CULTURE).
As a son of a farmer and some of my family members are also doing cultivation,I realised that today most of those people are nowadays very frustrated with this occupation.we work hard and produce rice but middle agents are getting more profits than us.

sooner or later in INDIA most of the farmers will give up their land to some forgien companies and they will do the same bussiness by using our farmers manpower&skills .
taht time they will determine the price as they wish and even that time also our stubid educated people will buy without any guilty

I see some of the comments posted on your web page i really pity and wonder how ignorant and not willing to understand/accept their mistakes.

Mr.Thiruvadiyan please don't be demaralised for those comments.As a farmer son i really appreciate you to go ahead. we are some way consoled that somepeople like you to give voice on behalf us inthis internet age,

Thank you
sundar

said...

வாங்க சுந்தர், வந்தனம்...

முதலில் எனது பதிவில் நீங்கள் குறிப்பிட்டபடி யாரும் பின்னூட்டம் இடவில்லை. என்றாலும் நன்றி..

திருவடியான்.
கேம்ப்: கோலாலம்பூர், மலேசியா