வடகொரிய அணு உலை மூடுவிழா

கடந்த வருடம் வடகொரியா வெடித்த அணுகுண்டுக்குப் பின் ஏற்பட்ட விவகாரங்களில் மிக முக்கியமானது, ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை. சீனா மத்தியஸ்தம் பண்ண முன் வந்து நடத்திய இந்தப் பேச்சு வார்த்தையில் அமெரிக்கா வேறு வழியின்றி தனது ரதகஜபதாதிகளுடன் (தென் கொரிய மற்றும் ஜப்பான்)கலந்து கொண்டது. சீனாவும் ரஷ்யாவை இதில் உட்படுத்திக் கொண்டது.

இந்த மத்தியஸ்தம் சீனாவின் ஆளுமைத்தனத்தை அமெரிக்காவிற்கு உணர்த்தும் விதமாகவே அமைந்தது சீனாவின் இராஜதந்திரத்தையும் சாதுரியத்தையும் காட்டுகிறது.

எப்போதுமே ஐநா சபை வளாகத்திலோ அல்லது அமெரிக்கத் தோழ நாட்டிலோதான் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவது அமெரிக்க வழக்கம். அதை உடைத்து, சீனாவின் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சீனாவின் அறிவுறுத்தலின் படியே பேச்சுவார்த்தை அம்சங்கள் முன் வைக்கப்பட்டன. சீனாவின் தலைமைக்குக் கட்டுப்பட்ட வடகொரியா தனது யோங்ப்யான் அணுஉலைகளை மூடி சீல் வைத்து ஐநா அணுஆயுதக் கண்காணிப்பாளர்கள் ஒப்புதலும் கொடுத்துவிட்டார்கள். இது சீனாவிற்கு முதல் வெற்றி. தன்னால் அணு ஆயுதப் பரவலில் அமெரிக்காவை விட சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நி௫பித்திக்கிறது. அதுவும் கத்தியின்றி, இரத்தமின்றி வெறும் பேச்சு வார்த்தையிலேயே அணுஆயுதப்பரவலைத் தடுக்க முடிவதும், டன் டன்னாக வெடி வெடித்து பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று ஈராக்கில் ஆப்பில் சிக்கிய குரங்காக அமெரிக்கா சித்திரவதைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இது சீனாவிற்கு வெற்றி தான்.

நேற்று நடைபெற்ற ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்வைக்கின்றன. ஆனால் அதற்கான சரியான முகாந்திரங்கள் இதில் சொல்லப்படாமல் வெறும் ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஊகங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையின் சான்றுகள் இதோ

1. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக வடகொரிய தன்னிடமுள்ள அணுஆயுதத் திட்டங்களை முழுமையாக வெளியிட வேண்டும். மேலும் புதிய திட்டங்கள் எதுவும் இருந்தால் இதில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடகொரியா இதைக் கொடுப்பதற்கு எந்த காலக் கெடுவையும் தரவில்லை என்பது குற்றச்சாட்டு. சீனா, முன்பு பேசியபடி, மீண்டும் செப்டம்பரில் இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லியிருக்கிறது. வேறு எந்தக் கருத்தும் சீனாவிடம் இருந்து வரவில்லை. இது வெறும் ஊகமே தவிர, வடகொரியா வெளிப்படையாக காலக்கெடு தர மறுக்கவில்லை.

2. தன்னிடமுள்ள அணுஆயுதங்களையும், பயன்படுத்தாமல் இருக்கின்ற புளுடோனியத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வடகொரிய அத்தனை ஆயுதங்களையும் முழுமையாகத் தரப் போவதில்லை என்ற ஊகம் பத்திரிகைகளில் பரப்பப்படுகிறது. இதைப்பற்றிய பேச்சு வாரத்தைகள் செப்டம்பரில்தான் நடக்கப் போகிறது என்ற நிலையில், ஒரு தகராறுக்கான சூழலை உருவாக்குவதாவே தோன்றுகிறது.

3. வழக்கத்தில் இல்லாமல், புதிதாக அமெரிக்கத் தரப்பு பேச்சுவார்த்தையாளர் கிறிஸ்டோபர் ஹில், வடகொரியா மற்றுமொரு புளுடோனியம் செறிவூட்டும் ஆலை வைத்திருப்பதாவும் அது கணக்கில் வரவே இல்லை என்றும் ஆதாரம் எதையும் காண்பிக்காமல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். வட கொரியா இதை மறுத்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய பேச்சு வார்த்தையில் வடகொரியச் சிறையிலிருக்கும் ஜப்பானியர்களை விடுவித்தால்தான் எரிபொருள் தரமுடியும் என்ற திடீர் நிபந்தனைக்கு வடகொரிய ஒப்புதல் அளிக்காததால், பேச்சு வார்த்தையில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பரில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் இந்தச் சூழலை மாற்றும் என்று நம்ப அதிகம் வாய்ப்பிருக்கிறது.

மற்றுமொரு போரை நடத்தும் சூழலில் அமெரிக்கத் தலைமையோ அமெரிக்கப் பொருளாதராமோ வழிவிடாத இந்த நிலையில், ஈரானின் அணுப் பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரிய பேச்சு வார்த்தை அணுகுமுறை முன்னுதாரணமாகக் காட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி ஒருவேளை சூழ்நிலை வந்தால் அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தப் போவது ரஷ்யாவோ அல்லது சீனாவாகவோ இருக்கும்.

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: