ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 8
நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் பால்கிரேவ் டேவி என்கிற ஆர்ச்சார்யா தாதா நிர்வானந்தா அவதூத் என்கிற பீட்டர் ஜான்சனைப் பற்றிப் பார்க்கலாமா?
இதுவரை விமான நிலையங்களில் பதிவானதாக அறியப்பட்ட வகையில் மொத்தம் 46 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தார் கிம் டேவி. மும்பை விமான நிலையத்தில் காணாமல் போனபோது வைத்திருந்த பாஸ்போர்ட் நியூஸிலாண்ட் நாட்டைச் சேர்ந்தது. கிம் டேவிக்கு ஆங்கிலம், இந்தி, பெங்காளி, உட்பட பல மொழிகளைப் பேசத் தெரியும்.
முதன் முதலில், கோபன்ஹேகனில் வங்கிப் பாதுகாப்பு வாகனத்தைக் கொள்ளையடித்த வழக்கில் பிடிபட்ட கிம் டேவி, போலீஸிடம் தப்பித்த போது பாதுகாப்பு வளையங்களை எளிதாக உடைக்கும் 'திரில்' பெற்றார். பிற்பாடு ஸ்வீடனில் இதே போன்ற ஒரு கொள்ளையை நகைக்கடை ஒன்றில் நடத்தி தப்பித்தார். பின் துரத்திய போலீஸால் கிம் டேவி போலி பாஸ்போர்ட்டை அடையாளமாகக் காட்டி வாடகைக்கு எடுத்த காரைத்தான் கைப்பற்ற முடிந்தது. பிடிபட்ட கூட்டாளி ஒருவன் சொன்ன வாக்குமூலம் போலீஸை அதிர்ச்சி அடையச் செய்தது. அது என்ன என்றால், ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை வளர்ப்பதற்காகவே இந்தக் கொள்ளை நடப்பதாகவும், மற்றவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனந்த மார்க்கம் இதை மறுத்தது. மேலும் பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக ஊடகங்களில் வழக்கும் தொடரப்பட்டது.
இதற்கிடையில் புருலியா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு சமயத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், பிளீச்சின் நண்பர் என்று சொல்லிக்கொண்ட எம்பி சர்.டெட்டி டெய்லர் என்பவர், டேவி நைரோபியில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவு அதிகாரிகளுடன் காணப்பட்டதாக தெரிவித்தார். சூடானின் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வேலைகளில் டேவி ஈடுபட்டிருந்தாகவும், அதன் காரணமாகவே அவரை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறைகள் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டினார்,
ஜான் கர்ராங் என்ற சூடானின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி (SPLA) எனப்படும் தென் சூடானின் கிறித்துவ தீவிரவாத அமைப்பின் (அப்பாடா.. இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்துப் போகட்டும்)கமாண்டரின் அரவணைப்பில் ஹோட்டல் சரினா மற்றும் ஸபாரி கிளப் ஆகிய ஹோட்டல்களில் வெகுகாலம் தங்கியிருந்ததாக அறியப்படுகிறது. மார்க்ஸிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய அரசுகளை எதிர்த்து பல வருடங்களாக கார்டோம் நகரில் போரிட்டு வருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த SPLA அமைப்பிற்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்க இயலாத அந்த வல்லரசு கிம் டேவியைப் பயன்படுத்தி ஆயுத சப்ளை செய்யச் சொன்னது.
நாளடைவில் கிம் டேவிக்கு இந்த திருடன் போலீஸ் விளையாட்டு பிடிக்காமல் போனது. அப்படியென்றால் பணம் கொட்டும் மற்ற பிஸினஸ் எது என்று ஆராயத் தொடங்கினார். தங்கம் மற்றும் வைரம் தோண்டும் தொழிலில் திடீரென ஆர்வம் அதிகமானது.
ஹாங்காங்கில் ஹோவர்ஸ்டாக் இன்டர்நேஷனல் ட்ரேடிங் என்ற கம்பெனி ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஸப்ரா அசோசியேட்ஸ் என்ற புவியியல் நிறுவனத்தை அமர்த்தி தங்கம் கிடைக்குமா என்று தெற்குச் சூடானில் கபோய்டா (KAPOETA) என்ற இடத்தில் தேடச்சொன்னது. ஸப்ரா அசோசியேட்ஸ் தெற்கு சூடானில் மேற்படி கிறித்துவத் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து இடங்களில் 12 மில்லியன் அவுன்ஸ் தங்கம் கிடைக்கக்கூடிய பகுதிகளைக் இனம் கண்டது. அப்போதைய தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 350 டாலர் என்று வைத்துக் கொண்டால் கூட 4.2 பில்லியன் டாலர் பெறுமான சொத்து அது. SPLA அமைப்பிற்கு வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு அவுன்ஸிற்கும் ராயல்டி தந்து விடவேண்டும் என்பது ஒப்பந்தம்.
தங்கம் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சியில் ஆழ்ந்த கிம் டேவி, உடனேயே தங்கம் வெட்டியெடுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். தங்கத்தைப் பற்றிய வியாபார நுணுக்கங்கள், அதன் "தந்து முந்து"கள் தெரிந்திராத கிம் டேவி, தங்கத்தை வெட்டி எடுத்து சுத்தம் செய்து மார்க்கெட்டில் கொண்டு வந்து இறக்க இறக்க, சட சடவென தங்கம் விலை குறைந்தது. பதறிப்போன லண்டன் தங்க வர்த்தகர்கள் 'எவண்டா இவன்' என்று கண்டுபிடித்து, தங்களுக்குத் தெரிந்த உத்திகளைப் பயன்படுத்தி தெற்குச் சூடானில் கிம்டேவி தங்கம் தோண்டுவதை நிறுத்திவிட்டார்கள்.
பணம் சம்பாரித்த கை நிற்குமா?
மியான்மரில் ரூபி மற்றும் சபையர் என்கிற விலைமதிப்பு மிக்க கற்களைத் தோண்டி எடுப்பதில் ஆர்வம் போனது.
கிம் டேவிக்கு முறையான அரசுகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தை விட வன்முறையாளர்களிடமும், ஆயுதந்தாங்கி போராடுவோர்களிடமும், உளவுத்துறையினரிடமுமே நெருக்கம் அதிகம். ஆகவே இந்த மாதிரியான தொழிலுக்கும் அவர் அந்தமாதிரியான அமைப்புகளையே தேர்ந்தெடுத்தார். அப்படி ஒரு அமைப்புதான் K.I.A எனப்படும் கச்சின் இன்டிபெண்டன்ஸ் ஆர்மி. இந்தியா மற்றும் சைனாவை எல்லையாகக் கொண்ட மியான்மர் என அறியப்படும் பர்மாவின் ஆளும் இராணுவ அரசிடம் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்பு அது. கச்சின் பகுதியில் தங்கம் உட்பட விலையுயர்ந்த கற்கள் அதிகமாக கிடைக்கிறது. முடிச்சுப் போட்டுப் பார்த்த கிம் டேவி உடனேயே அந்த அமைப்பின் தலைவரான மலிசு ஷாவ் மாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். மலிசு அப்போது தான் ஆளும் இராணுவ அரசிடம் ஒரு உச்சகட்டப் போரை நடத்தி இருந்தார். இந்த போருக்கு மியான்மரின் இராணுவ அரசிற்கு சைனாவின் ஆயுத உதவி வேறு. உடனே அந்த தீவிரவாத அமைப்பிற்கு சைனாவை எதிர்க்கும் முகமாக, வேறு சில நாடுகள் ஆயுதம் தர முன் வந்தன. நேரம் சரியாக இருந்தது. உளவு அமைப்புகளின் கண்களில் மண் தூவுவதற்காக ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை முன் வைத்து இந்த ஆயுத பரிவர்த்தனை நாடகம் நடந்தேறியது. பின்னணியில் வேறு வல்லரசுகள் இருந்ததற்கான நிரூபிக்கப்படாத ஆதாரங்கள் இருந்தன. யார் யார் என்று சொல்வது சாலச் சிறந்ததல்ல.
சரி. கச்சினில் தரவேண்டிய ஆயுதம் எப்படி சரியாக ஆனந்த மார்க்கத்தின் தலைமையகம் இருக்கும் ஆனந்த்நகர் அருகில் (அப்படித்தான் சிபிஐ சொல்கிறது) கொண்டுபோய் போடப்பட்டது. இது திட்டமிட்ட நாடகமா? அல்லது தவறுதலாகவே போடப்பட்டதா என்பது தான் கேள்வி. இந்தக் கேள்விக்கு மறைந்து வாழும் கிம் டேவி தான் பதில் சொல்ல வேண்டும், உளவுத்துறைகளாலும் பீட்டர் பிளீச் மூலமும் அறியப்பட்ட வகையில் இது தவறுதலாகவே போடப்பட்டதாக அறிய முடிகிறது.
முதலில் டாக்காவில் இறங்கி பின் அங்கிருந்து கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் பறந்துபோய் ஆயுதங்களை பாராசூட் மூலம் இறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் விமானங்கள் பறப்பது எளிதல்ல என்பதால் K.I.A விற்கு அந்தப் பகுதி சரியான மறைவிடமாக இருந்து வந்தது. டாக்காவிலிருந்து பறந்தால் கூரான மலைப்பகுதிகளுக்குள் தாழ்வாகச் செல்ல முடியும் என்பது கணக்கு. இதற்காக டாக்காவில் விமானம் தரையிறங்கும் அனுமதி வாங்கும் வேலையில் இருந்த கிம் டேவியின் கூட்டாளியால் ஏனோ அந்த அனுமதியை கடைசியில் வாங்க முடியாமல் போனது. எனவே டாக்காவில் இறங்காமலே பறந்துபோய் கச்சினில் ஆயுதங்களை இறக்குவதாக கிம் டேவி தீர்மானித்துக் கொண்டார். இந்தமாதிரியான ஆட்கள் பொதுவாக எவ்விதமான ஆபத்து வந்தாலும் மிகவும் நிதானமாக இருப்பார்கள். பதட்டமடைவது என்பது அவர்களுக்கு இருக்கவே இருக்காது.
விமானம் பறக்கும் வேகத்தை வைத்தும் பறக்க ஆரம்பித்த நேரத்தை வைத்தும் இத்தனையாவது நிமிடங்களில் ஆயுதம் போட்டாக வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்ட கிம் டேவி, துப்பாக்கி முனையில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே விமானிகளுக்கு ஆணையிட்டுக் கொண்டு வர, விமானிகள் அதற்கு பணியாமல் முரண்பட, ஏற்பட்ட குளறுபடிகளில் கச்சினில் விழ வேண்டிய ஆயுதங்கள் புருலியா மாவட்ட கிராமங்களில் போய்ச் சேர்ந்தது என்பதாக அறிய முடிகிறது.
இந்த விஷயத்தில் விடையளிக்க இயலாத பல மர்மங்கள் புதைந்திருக்கின்றன. அவிழ்க்க இயலாத அல்லது சம்பந்தப்பட்ட அரசுகள் அவிழ்க்க விரும்பாத எத்தனையோ மர்ம முடிச்சுகளுள் இவைகளும் அடங்கும்.
டென்மார்க்கில் கிம் டேவியைக் கண்டு பிடித்த சிபிஐ-யால் அப்போது குற்றவாளிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் இல்லாததால் இந்தியாவிற்கு கைது செய்து கொண்டுவராமல் போனது. இண்டர்போல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை இன்டர்போல் ஒரு சிவப்புமூலைக் கடிதம் வெளியிடப்பட்டதுடன் நிற்கிறது. இன்றுவரை கிம் டேவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது இன்டர்போல்.
ரண்டி என அறியப்படும் சத்யநாராயண்சிங் மற்றும் அவரது தம்பியான வினய் சிங்கிற்கும் இந்த ஆயுதக் கடத்தலில் என்ன வகையிலான தொடர்பு என்பது சரியாக விளக்கப்படவில்லை.
பிரிட்டிஷ் உளவுத்துறை இந்தியஅரசிற்கு சரியான நேரத்தில் சொன்னதா, இல்லையா? இல்லையென்றால் என்ன காரணம்?
இந்திய மண்ணில் பலமுறை இறங்கிச் சென்றிருக்கிறதே அந்த விமானம். அந்தக் காலகட்டங்களில் ஒருமுறைகூட சோதனையிடப்படாமல் போனதன் காரணம் என்ன?
ஹாங்காங்கைச் சேர்ந்த தங்கக் கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஜெர்மனியில் பிறந்து கன்சாசில் வசித்து வந்த, அமெரிக்க குடிமகனான ப்ரோரென் என்பவரை, சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு வந்த போது இதே புருலியா விவகாரத்தில் இந்திய அரசு கைது செய்தது. இவர்தான் ஆயுதம் போட்ட ஆண்டனோவ் விமானம் வாங்குவதற்கான பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. அவர் ஷ்னீடர் மார்டின் கான்ராட் என்ற பெயரில் பயணம் செய்திருந்தார். இந்திய உளவுத்துறையின் விசாரணையில் அவரின் வேறு சில பெயர்களும் தெரியவந்தன.
அவரிடம் உங்களின் உண்மையான பெயர் என்ன என்று கேட்ட போது, அவர் சொன்ன பெயர் என்ன தெரியுமா?
ஹனுமான்.
'ஆண்ட'வனுக்குத் தான் வெளிச்சம்.
இனி..
ஆயுதம் என்பது இரகசியமாக வீட்டின் கொல்லைப்புறத்தில் தயாரிக்கப்படுவது அல்ல. அவை ஒரு தொழிற்சாலையிலேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் அரசிற்குத் தெரியாமல் இந்த ஆயுதங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிட முடியாது. அப்படியானால், இப்படி ஆயுதங்கள் கடைத்தெருவில் விற்கப்படும் அளவிற்கு (பெஷாவரில் ஆயுதம் விற்பதற்கனவே ஒரு பஜார் இருந்தது. அதைப் பற்றிய படங்களை ஒருமுறை இந்தியா டுடேயில் பார்த்ததாக நினைவு) கொண்டுவந்ததற்கு ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகளும் ஒரு காரணம். ஆயுதம் உற்பத்தி செய்யப்படும் நாடுகளையும் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஐநா சபையின் ஆயுதக்கட்டுபாடு தீர்மானங்களையும் இனி வரும் தொடர்களில் காணலாம்.
(பின் குறிப்பு)
ஆயுதக்கடத்தல் என்று வரும்போது அது அழகு பார்ப்பதற்காக வாங்கப்படுவதல்ல என்பது திண்ணம். அருகாமையிலேயே நமது சகோதரர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு எப்படி ஆயுதம் வந்து சேர்கிறது என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. அதில் ஏகப்பட்ட சாகச சம்பவங்கள் அடக்கம். சாண்டில்யனின் கடல்புறாவின் பாதிப்பினை கேபி டிபார்ட்மெண்ட்டுக்குள் காணக் கிடைக்கலாம். அதைப்பற்றி இப்போதைக்கு எழுதுவதாக இல்லை என்று உத்தேசித்திருக்கிறேன்.