சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்

ஈராக் பிரச்னைக்கு இன்னும் எந்த முடிவும் தெரியாத இந்த நேரத்தில், அமெரிக்கா சவுதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு (இஸ்ரேல் எகிப்து உட்பட) ஆயுத பரிவர்த்தனை உதவி செய்ய முன்வந்திருக்கிறது. அதிக பட்ச உதவியாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இஸ்ரேலிற்குப் போகிறது. சவுதிக்கு 20 பில்லியன், எகிப்திற்கு 13 பில்லியன்.

ஆமாம், இப்போது இந்த நாடுகளின் பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் வந்துள்ளது?

அமெரிக்கா தன் தலையை இனி வரும் மத்தியக் கிழக்குப் போர்களுக்குள் கொடுக்காமல், அதே சமயம் அதன் விருப்பப்படியே ஒரு அச்சுறுத்தல் மிக்க அமைதியற்ற பிராந்தியமாக மாற்றித் தொடர்ந்து வைத்துக் கொள்ள இந்த ஆயுத விற்பனை உதவப் போகிறது. அதன் முக்கிய நோக்கங்கள் இரண்டு:

(1) ஈரானை எப்போதும் போர் பற்றிய ஆயத்தத்துடனும் பயத்துடனும் வைத்துக் கொள்வது

(2)சன்னி மற்றும் ஷியா முஸ்லிம் இனத்தாரிடையே நிரந்தரமான ஒரு சண்டையைத் தூண்டிவிட்டு ஏற்படும் இனக்கலவரத்தை மையமாக வைத்து, முஸ்லிம்களுக்கிடையேயான போரை உருவாக்கி, பின் பாதிக்கப்பட்ட அதன் ஆதரவு நாடுகளுக்கு உதவுவது.

இதனால் அமெரிக்காவிற்கு ஏற்படப்போகும் பலன்கள் என்ன?

1. ஈராக் நிலவரங்களால் பெரிதும் பலனடைந்திருப்பவை மத்தியக் கிழக்கு நாடுகள், ஈரான் உட்பட. அந்த நாடுகள் எண்ணெய் விலை உயர்வால் சேர்ந்துபோன பணத்தை மூட்டைகட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றைத் திரும்பப் பெற ஒரு வழி, இந்த ஆயுதவிற்பனை. அமெரிக்கப் பொருளாதாரம் ஆயுத விற்பனையை ஒரு அளவிற்கு நம்பியுள்ளது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், இஸ்ரேலிற்கு 30 பில்லியன் பெறுமான ஆயுதங்கள் இராணுவத் தளவாட உதவியாக வழங்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சவுதிக்கு விற்பனை, ஆனால் இஸ்ரேலிற்கு உதவி.

2. மத்தியக் கிழக்குப் பகுதி பெரும்பாலான நேரங்களில் பதட்டமான பகுதியாகவே இருக்கும். அதன் பொருட்டு, ஒவ்வொரு குண்டு வெடிக்கும் போதும் எண்ணை விலை ஏறும். அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்பவர்கள் தனிமைப்படுத்தப் படுவர் (ஈரான் மற்றும் வெனிசூலா). அமெரிக்க பொருளாதாரத்தின் வேகவீழ்ச்சி இந்த எண்ணெய்ப் பொருளாதாரத்தின் வழியாக தாமதமாக்கப்படும்.

3. ஈரான் மேல் போர் தொடரப்போவது பெரும்பாலும் அமெரிக்காவாக இருக்காது. அது பிற்பாடு உதவிக்கு வரும். எந்த நாடு அந்த போரை முட்டாள்தனமாகத் தொடங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சவுதிஅரேபியாவாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

4. அமெரிக்கா மற்றுமொரு போரைத் தொடங்காது என்று தாராளாமாக அமெரிக்கப் பொதுமக்(கு)களுக்கு அறிவித்து விட்டு நல்லபிள்ளை பெயர் வாங்கிக் கொள்ளலாம்.

மத்தியக் கிழக்கில் ஆரம்பிக்கும் இந்த விவகாரம் எகிப்து வரை போகப் போகிறது, குர்திஸ் இன மக்கள் வடிவத்தில். அதற்காகவே எகிப்துக்கும் 'உதவி'யளிக்கப்படுகிறது. குர்திஸ்தான் மக்கள் ஏற்கனவே போதுமான அமெரிக்க 'உதவி' பெற்றுத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு ஆயுத விற்பனையை நம்பியே இருக்கும் போது, உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை நிர்மூலமாக்கி அதிலுள்ள எத்தனையோ மக்களைக் கொன்றுபோடுவது அவர்களைப் பொறுத்தவரை தொழில் தர்மமாகிறது.

அதற்குப் பலிகடா, இப்போதைக்கு மத்தியக் கிழக்கு - அடுத்த பத்து வருடங்களுக்கு.

நான் சென்ற திருத்தலங்கள்

நான் இதுவரை சென்ற திருத்தலங்களைத் திடீரென்று ஒரு ப்ளாக்கர் நினைவுகூறும்படி செய்துவிட்டார். அதன் விளைவே இந்தப் பதிவு. சில கோயில்களின் அம்மன்கள்/சாமிகளின் பெயர், சில தர்காக்களின் பெயர் மற்றும் சில சர்ச்சுகளின் பெயர்கள் மறந்து விட்டது. இது ஏதோ டுர் போன லிஸ்ட் மாதிரி தெரிந்தால் நான் பொறுப்பில்லை. ஏனென்றால், இதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா இடத்திற்கும் உள்ளே, அதாவது, கோயிலென்றால் கர்ப்பகிரகத்திற்குள்ளும், தர்காவென்றால் சமாதிக்கருகிலும் சென்றிருக்கிறேன்.

1. அறந்தாங்கி வீரகாமாளியம்மன் கோயில்
2. ஆவுடையார்கோயில் என்னும் திருப்பெருந்துறை ஆலயம் (எனக்கு மிகவும் பிடித்துப்போன கோயில் இது)
3. திருப்புல்லாணியில் உள்ள இராமர் கோயில்
4. சேதுக்கரையில் உள்ள அனுமார்கோயில்
5. கீழக்கரையில் உள்ள கோயில்
6. ஏர்வாடியில் உள்ள தர்கா
7. இராமேஸ்வரம் கோயில்
8. திருச்செந்தூர் முருகன் கோயில்
9. நெல்லையப்பர் கோயில்
10. அறந்தாங்கி சிவன் கோயில்
11. அறந்தாங்கி வடகரை முருகன் கோயில்
12. மீமிசலில் உள்ள சிவன்கோயில்
13. கோட்டைப்பட்டிணம் தர்கா
14. தொண்டியில் உள்ள சீனியப்பா தர்கா
15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில்
16. முத்துப்பேட்டை தர்கா
17. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில்
18. வண்டியூர் மாரியம்மன் கோயில்
19. திருச்சி புனித சூசையப்பர் கோயில்
20. திருச்சி மேலப்புதூர் சர்ச்
21. திருப்பராய்த்துறை
22. ஸ்ரீரங்கம் கோயில்
23. திருவானைக்காவல் கோயில்
24. திருப்பதி வெங்கடாச்சலபதி கோயில்
25. மும்பை மஹாலட்சுமி மந்திர்
26. மும்பை ஹாஜி அலி தர்கா
27. அஜமீர் தர்கா
28. டெல்லி ஜூம்மா மசூதி
29. ஸ்ரீரங்கப்பட்டிணம் கோயில்
30. மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்
31. திருச்சூர் பூரத்திருவிழாக் கோயில்
32. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்
33. நாகூர் தர்கா
34. வேளாங்கண்ணி சர்ச்
35. சென்னை வடபழனிக் கோயில்
36. சென்னை ஐயப்பன் கோயில் (ஐயப்பன் இன்னும் என்னை சபரிமலைக்கு அழைக்க வில்லை)
37. சமயுரம் மாரியம்மன் கோயில்
38. அறந்தாங்கி மாரியம்மன் கோயில்
39. அறந்தாங்கி முனிக்கோயில்
40. திருச்சி நத்தர்வலி தர்கா
41. பிரான்மலை தர்கா
42. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
43. கன்னியாகுமரியம்மன் கோயில்
44. சுசீந்திரம் கோயில்
45. தக்கலை தர்கா
46. கங்கைகொண்ட சோழபுரம் கோயில்
47. சிறுவாச்சூர் கோயில்
48. சாந்தோம் சர்ச்
49. பழனி முருகன் கோயில்
50. சிதம்பரம் நடராஜர் கோயில்
51. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்
52. திருவையாறு தியாகேஸ்வரர்கோயில்
53. பூண்டி மாதா கோயில்
54. திருப்பரங்குன்றம் கோயில்
55. திருப்பரங்குன்றம் தர்கா
56. களக்காடு கோயில்
57. உத்திரகோசமங்கை. இங்கு மரகத்திலான நடராஜர் சிலை உள்ளது (ராமநாதபுரம் அருகே உள்ளது).

வெளிநாடு

1. சிங்கப்பூர் மாரியம்மன் கோயில்
2. சி்ங்கப்பூர் பெருமாள்கோயில்
3. சிங்கப்பூர் சூலியா மசூதி
4. சிங்கப்பூர் சினகாக் (Synagogue - யூத மதத்தினரின் வழிபாட்டுத்தலம்)
5. ப்ராக் (prague, czech republic) சினகாக்
6. மலேசியாவின் பத்துக்குகை முருகன் கோயில்
7. ஐப்பானில் ஷிண்டோ கோயில் (டோக்கியோ)
8. ஒசாகாவில் உள்ள ஷிண்டோ கோயில்
9. ஒசாகாவில் உள்ள புத்தக் கோயில்
10. நாராவில் உள்ள புத்தக் கோயில் (ஜப்பான்)
11. கியாட்டோவில் உள்ள புத்தக்கோயில் (ஜப்பான்)
12. சிங்கப்பூரில் உள்ள சீனக்கோயில்கள் (பெயர்லாம் தெரியலீங்க)
13. கண்டி கதிர்காமன் கோயில்

வடகொரிய அணு உலை மூடுவிழா

கடந்த வருடம் வடகொரியா வெடித்த அணுகுண்டுக்குப் பின் ஏற்பட்ட விவகாரங்களில் மிக முக்கியமானது, ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை. சீனா மத்தியஸ்தம் பண்ண முன் வந்து நடத்திய இந்தப் பேச்சு வார்த்தையில் அமெரிக்கா வேறு வழியின்றி தனது ரதகஜபதாதிகளுடன் (தென் கொரிய மற்றும் ஜப்பான்)கலந்து கொண்டது. சீனாவும் ரஷ்யாவை இதில் உட்படுத்திக் கொண்டது.

இந்த மத்தியஸ்தம் சீனாவின் ஆளுமைத்தனத்தை அமெரிக்காவிற்கு உணர்த்தும் விதமாகவே அமைந்தது சீனாவின் இராஜதந்திரத்தையும் சாதுரியத்தையும் காட்டுகிறது.

எப்போதுமே ஐநா சபை வளாகத்திலோ அல்லது அமெரிக்கத் தோழ நாட்டிலோதான் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவது அமெரிக்க வழக்கம். அதை உடைத்து, சீனாவின் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சீனாவின் அறிவுறுத்தலின் படியே பேச்சுவார்த்தை அம்சங்கள் முன் வைக்கப்பட்டன. சீனாவின் தலைமைக்குக் கட்டுப்பட்ட வடகொரியா தனது யோங்ப்யான் அணுஉலைகளை மூடி சீல் வைத்து ஐநா அணுஆயுதக் கண்காணிப்பாளர்கள் ஒப்புதலும் கொடுத்துவிட்டார்கள். இது சீனாவிற்கு முதல் வெற்றி. தன்னால் அணு ஆயுதப் பரவலில் அமெரிக்காவை விட சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நி௫பித்திக்கிறது. அதுவும் கத்தியின்றி, இரத்தமின்றி வெறும் பேச்சு வார்த்தையிலேயே அணுஆயுதப்பரவலைத் தடுக்க முடிவதும், டன் டன்னாக வெடி வெடித்து பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று ஈராக்கில் ஆப்பில் சிக்கிய குரங்காக அமெரிக்கா சித்திரவதைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இது சீனாவிற்கு வெற்றி தான்.

நேற்று நடைபெற்ற ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்வைக்கின்றன. ஆனால் அதற்கான சரியான முகாந்திரங்கள் இதில் சொல்லப்படாமல் வெறும் ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஊகங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையின் சான்றுகள் இதோ

1. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக வடகொரிய தன்னிடமுள்ள அணுஆயுதத் திட்டங்களை முழுமையாக வெளியிட வேண்டும். மேலும் புதிய திட்டங்கள் எதுவும் இருந்தால் இதில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடகொரியா இதைக் கொடுப்பதற்கு எந்த காலக் கெடுவையும் தரவில்லை என்பது குற்றச்சாட்டு. சீனா, முன்பு பேசியபடி, மீண்டும் செப்டம்பரில் இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லியிருக்கிறது. வேறு எந்தக் கருத்தும் சீனாவிடம் இருந்து வரவில்லை. இது வெறும் ஊகமே தவிர, வடகொரியா வெளிப்படையாக காலக்கெடு தர மறுக்கவில்லை.

2. தன்னிடமுள்ள அணுஆயுதங்களையும், பயன்படுத்தாமல் இருக்கின்ற புளுடோனியத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வடகொரிய அத்தனை ஆயுதங்களையும் முழுமையாகத் தரப் போவதில்லை என்ற ஊகம் பத்திரிகைகளில் பரப்பப்படுகிறது. இதைப்பற்றிய பேச்சு வாரத்தைகள் செப்டம்பரில்தான் நடக்கப் போகிறது என்ற நிலையில், ஒரு தகராறுக்கான சூழலை உருவாக்குவதாவே தோன்றுகிறது.

3. வழக்கத்தில் இல்லாமல், புதிதாக அமெரிக்கத் தரப்பு பேச்சுவார்த்தையாளர் கிறிஸ்டோபர் ஹில், வடகொரியா மற்றுமொரு புளுடோனியம் செறிவூட்டும் ஆலை வைத்திருப்பதாவும் அது கணக்கில் வரவே இல்லை என்றும் ஆதாரம் எதையும் காண்பிக்காமல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். வட கொரியா இதை மறுத்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய பேச்சு வார்த்தையில் வடகொரியச் சிறையிலிருக்கும் ஜப்பானியர்களை விடுவித்தால்தான் எரிபொருள் தரமுடியும் என்ற திடீர் நிபந்தனைக்கு வடகொரிய ஒப்புதல் அளிக்காததால், பேச்சு வார்த்தையில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பரில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் இந்தச் சூழலை மாற்றும் என்று நம்ப அதிகம் வாய்ப்பிருக்கிறது.

மற்றுமொரு போரை நடத்தும் சூழலில் அமெரிக்கத் தலைமையோ அமெரிக்கப் பொருளாதராமோ வழிவிடாத இந்த நிலையில், ஈரானின் அணுப் பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரிய பேச்சு வார்த்தை அணுகுமுறை முன்னுதாரணமாகக் காட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி ஒருவேளை சூழ்நிலை வந்தால் அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தப் போவது ரஷ்யாவோ அல்லது சீனாவாகவோ இருக்கும்.

Update - லண்டன் கார் குண்டுகள்

எனது முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தபடி வினோதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

1. இது வரையில் அல்காயிதாவுடனான தொடர்பை நிருபிக்க இயலவில்லை (நான் அல்காயிதாவிற்காக வக்கலாத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். தவறான செய்திகள் ஊடகங்கள் மூலம் உடனடியாக எந்த மறுதலிப்பிற்கும் உள்ளாகாமல் பரப்பப்படுகின்ற விதத்திற்கு எதிராகவே ஒழிய வேறு ஒன்றுமில்லை).

2. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்களுக்கும் கிளாஸ்கோ நகரில் நடந்த செரோக்கி ஜீப் எரிப்பு சம்பவத்திற்கும் இன்னும் தொடர்பு காண இயலவில்லை.

3. ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய டாக்டர் ஹனீப், முக்கிய சூத்திரதாரி் என கருதப்படும் ஆஷா என்கிற ஜோர்டானியர், கஃபீல் அஹமது என்பவரிடம் ஹனீப் கொடுத்துவைத்திருந்த அவரின் ரெகுலர் லண்டன் மொபைல் ஃபோன் சிம் கார்டைப் பயன்படுத்தியதால், ஹனீப் மாட்டியிருக்கிறார். ஒரு மொபைல் போன் வாங்கும் போது காண்ட்ராக்டில் வாங்குவது வழக்கம். அந்த சிம் கார்டை இடையில் நிறுத்தினால் பெனால்ட்டி கட்ட வேண்டி வரும். எனவே, வேறு ஊருக்கு புலம் பெயரும்போது, யாரிடமாவது அதைக் கொடுத்து மாதாமாதம் பணம் கட்டி விடுங்கள் என்று சொல்லிவிடுவது புலம்பெயர்வோர் வழக்கம். அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஹனீப் இந்தக் குற்றச் சாட்டிற்குள் உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்தக் முகாந்திரமும் இன்னேரம் வரை இனம் காணப் படவில்லை.

ஆஸ்திரேலிய விரிவுரையாளர் ஒருவர் சிங்கப்பூர் வானொலியொன்றில் இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, முன்பைய காலங்களை விட தற்சமயம் தொழில் நுட்ப வசதிகளினால் மிக பெரிதாக வலை (dragnet) விரிக்க முடிகிறது, அதனால் ஏகப்பட்ட சம்பந்தமில்லாத அப்பாவிகளும் இவ்வலைக்குள் சிக்குவது அன்றாடமாகி விட்டது. ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் இது போன்று இருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று அவர் கருத்துரைத்திருந்தார்.

-மேலும் வரும்...

லண்டன் கார் குண்டுகள்.. நாடகமா?

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு மெர்ஸிடஸ்கள் லண்டன் வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இவ்வேளையில், புதிய பிரதமரான கார்டன் பிரெளன் எந்த வித பதட்டமுமில்லாமல் எல்லாரும் அமைதியாய் இருக்குமாறு வேண்டிக்கொண்டிருப்பது அவரின் மேலான நம்பிக்கையை அதிரித்திருக்கிறது..

கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே கிளாக்ஸோ விமான நிலைய வாசலில் இதேபோன்ற மற்றொரு கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் அதிகபட்ச காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வெடிகுண்டுக் கார்கள் எல்லாம் திட்டமிட்டு முறையாகத் தயார் செய்திருந்தும் ஏனோ வெடிக்க வைக்கும் கருவிகள் மட்டும் வெடிக்காமல் போயிருக்கின்றன. இது போலீஸாருக்கு மிக்க ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. மேலும், இதே காரணங்களால் கிளாக்ஸோ விமானநிலையத்தில் உள்ளவர்களும் தம்மேல் எரிபொருளைக் கொட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றனர்.

வழக்கமான அல்காயிதா கதைகள் இங்கும் ஊகிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அதிகாரிகள் இதைப் பற்றி எதுவும் சொல்லாத நிலையில் வழக்கம்போல அமெரிக்க அதிகாரிகள் முந்திரிக்கொட்டைத்தனமாக இது அல்காயிதாவின் வேலை என்றும், ஈராக்கில் கையாளப்படும் அதே முறைபோன்றுள்ளது என்றும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்னவோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது.

ஏன் இப்படிக் கருத வேண்டியிருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிரிட்டனின் de-facto அமெரிக்கன் ஏஜென்ட் திரு. டோனி பிளேர் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகி திரு. கார்டன் ப்ரெளனுக்கு வழி விட்டார். அப்போதே ப்ரெளன் யார், ஈராக் விவகாரத்தில் எந்த அளவிற்கு பிரிட்டனின் ஆதரவு இருக்கும் என்பதைப் பற்றி வாஷிங்டன் வட்டாரங்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டன. ப்ரெளனின் சகாக்களிடமிருந்து அவர் பிரிட்டனின் ஈராக் ஈடுபாட்டைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவில்லை என்று அறியப்படுகிறது. இதைப்பற்றி பிரிட்டன் விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அதிகாரிகள் தனியாக பென்டகனிடம் ப்ரெளன் பதவியேற்ற நூறு நாட்களுக்கும் ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகளை மீட்டுக் கொள்ளும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அறிக்கையளித்திருக்கிறார்கள. ஈராக்கில் தனியாக மாட்டிக்கொள்ளும் அபாயத்தை நோக்கியிருந்த பெண்டகன் அதிகாரிகளுக்கு ப்ரெளனுக்கு பிரிட்டிஷ் படைகளின் அத்தியாவசியத்தை வலுவான காரணங்களுடன் சுட்டிக் காட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது, உங்களுக்கு சில முடிச்சுகளின் சூட்சுமம் தெரிந்திருக்குமே. விசாரண முடிவுகள் வியக்கத்தக்க அறிக்கைகளுக்க வழிவகுக்க அதிக சாத்தியம் இருக்கிறது. காத்திருப்போம்.

இதன் தொடர்பான சுட்டி

http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/05/20/wirq20.xml