உயரப் பறக்கும் எண்ணெய் விலை- 2



முன் பதிவில், எண்ணெய் உற்பத்தியோ எண்ணெய்ப் பயன்பாடோ சமீபத்திய விலையேற்றத்திற்குக் காரணமாக இருக்க முடியாது என்பதை, இன்டர்நேஷனல் எனர்ஜி அத்தாரிட்டி இணையத்தளத்தின் புள்ளிவிவரங்களைக் கொண்டு கண்டு கொண்டோம். ஆனால் விலையேற்றம் இருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு உலகளாவியது. டீஸல் குடிக்கும் முரட்டுக் கார்களை காரேஜிலேயே நிறுத்திவிட்டு, அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை அமெரிக்கர்கள் நாட ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க அரசு ஓபெக் அமைப்பை நிர்ப்பந்தித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டுகிறது. ஓபெக் அமைப்பு தனது கூட்டத்திற்குப் பின், உற்பத்தி குறையவில்லை, தேவைகளும் அதிகரிக்கவில்லை, எனவே, நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொன்னபின், அமெரிக்கா ஓழுங்கு முறையாணையங்களின் பார்வை (Commodities Futures Trading Corporation) தற்போது, பங்குச் சந்தை விற்பன்னர்களை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. CFTC ஆறு மாதங்களுக்குத் தொடரும்படியான ஆழமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில்தான் சூட்சுமம் உள்ளது. ஆய்வறிக்கை வெளியிடாமலேயே மறைக்கப் படலாம். ஆனால், ஆய்வறிக்கை வரும் சமயத்தில் எண்ணெய் விலை குறைய நேர்ந்தாலும், சமீபத்திய விலை உயர்வால் மக்கள் அடைந்திருக்கும் பொருளாதார பாதிப்புகள் பழைய நிலைக்குப் போகப் போவதில்லை. சராசரி விலையேற்றம் பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை.

ஒரு பீப்பாய் குருட் ஆயில் உற்பத்தி செய்ய 4 முதல் 7 அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே செலவாகிறது. இதர செலவினங்கள் என்று மேலும் 5 டாலர்களை சேர்த்துக் கொண்டால் கூட (புதிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்தல், பராமரிப்பு) அது 12 டாலர்களைத் தாண்டுவதில்லை. ஆனால், உலகச் சந்தையில் அதன் விலை 140 அமெரிக்க டாலர்கள். (ஆதாரம் http://www.eia.doe.gov/neic/infosheets/crudeproduction.html)

அமெரிக்காவின் NYMEX மற்றும் லண்டனின் ICE ஆகிய சந்தைகளில் commodities futures விற்கிறார்கள். ஒரு ப்யூச்சர் காண்ட்ராக்ட் வாங்க குறைந்த பட்சம் 6 சதவீதம் பணம் இருந்தால் போதும். அதாவது 140 டாலர் தற்போதைய மதிப்புடைய எண்ணெய் விலை ப்யூச்சரை அடுத்த இருமாதங்களுக்குள் 160 டாலர் என்று நிர்ணயித்து தற்போது வாங்க 6 சதவீதம் அதாவது 10.80 டாலர் இருந்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலையை 160 டாலருக்கு உயர்த்த முடியும். 10.80 டாலருக்கு இரண்டு மாத வட்டி கணக்கிட்டால், 0.05 டாலர் ஆகும். ஆக 5 சென்ட் செலவில் 20 டாலர் சம்பாரிக்கும் ரகசியம் தான் எண்ணெய் விலை உயர்வு. இது கம்மோடிட்டி ப்யூச்சர்ஸ் நிலை. இதில் அதிகம் ஈடுபடுவது, அதீத வீட்டுக் கடன் சுமையில் சிக்கியிருக்கும் அமெரிக்க வங்கிகள், தம்மை மீட்டுக் கொள்ள தற்போது எடுத்திருக்கும் ஒரு ஆயுதம், இந்த எண்ணெய் விலை உயர்வு. கடந்த இரண்டு வருடங்களில் இப்படி ப்யூச்சர்களில் வியாபாரமாக்கப்படும் எண்ணெயின் அளவு ஏறக்குறைய முக்கால் பில்லியன் பீப்பாய்களுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் புரிந்து கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்குள் எண்ணெயின் மீது ப்யூச்சர் மார்க்கட்டில் செய்யப்பட்டிருந்த வெறும் 13 பில்லியன் டாலர் இன்றைக்கு 260 பில்லியன் டாலர் என்று உயர்ந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய விஷயம், உலக உற்பத்தியில் வெறும் 40 சதவீதத் தேவையை மட்டுமே ஓபெக் உற்பத்திசெய்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். ரஷ்யா, பிரேஸில், கனடா மற்றும் ஏனைய நாடுகள் ஓபெக் அமைப்பில் இல்லை, அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியிலும் இல்லை. எனவே, ஓபெக்கைச் சுட்டியும், மத்திய கிழக்கில் ஏதாவது ஒரு நாட்டில் வெடிக்கும் குண்டைச் சுட்டியும் விலையேற்றுவதற்கு எந்தத் தொடர்புமில்லை.

இது போக, திடீரென்று எண்ணெய் ஏற்றிச் செல்லும் டாங்கர்களுக்குக் கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எல்லா எண்ணெய் டாங்கர்களும் வாடகைக்கு எடுக்கப் பட்டு விட்டன. வழக்கமாக எண்ணெய் ஏற்றுபவர்களுக்கு டாங்கர்கள் கிடைக்காதால், டாங்கர் வாடகை உயர்ந்துள்ளது. என்னவென்று உற்றுக் கவனித்தால், மார்க்கெட்டில் எண்ணெயை விலைக்கு வாங்கி நடுக்கடலில் நிப்பாட்டி வைத்திருக்கிறார்கள். எண்ணெய் விலை உயர்ந்தபின் விற்பதற்காக. இந்த வகையிலும் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப் படுகிறது.

தற்போது இந்த ஓபெக்-மத்தியகிழக்கு அமைதி-ஈரானியத் தாக்குதல் என்பதெல்லாம், விலையேற்றத்திற்குச் சொல்லப்படும் சப்பைக் கட்டுகள். உண்மையில் வீழும் டாலரும், மோசமான நிலையில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரமும், இந்த செயற்கை விலையேற்றத்திற்குக் காரண்ம்.

இந்தச் செயற்கை விலையேற்றத்தினால் விளையும் விளைவுகள் யாதெனின்

1. ஒரு பொருளை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவு அதிகரிப்பதால், இனிமேல் அவரவர் அவரவர் நாட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். சீனாவும் இந்தியாவும் இதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மக்கட் தொகை குறைந்த நாடுகள் நிறையச் செலவு செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கலாம்.

2. விமானப் போக்குவரத்து குறையும். விமானப் பயணச் செலவு அதிகரிக்கும்.

3. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், இனி இன்டர்நெட் மூலமாக, Virtual Office, ஆக வேலை செய்வார்கள். அதாவது, வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்வது. வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் மீட்டிங்குகளில் கலந்து கொள்வது போன்ற செயற்பாடுகள் அதிகரிக்கும்.

4. பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தும் விதமாக நாடுகள், தாங்கள் வழங்கும் எரிபொருள் மானியங்களை சுத்தமாக நிறுத்த வேண்டியிருக்கும். அதே சமயம் அதன் பேரில் விதிக்கப்படும் வரிகளை நீக்கச் சொல்லிப் போராட்டங்கள் நடக்கும். இழக்கபோகும் வரிவருமானத்தை நினைத்து அரசுகள் தயங்க, அரசுகளுக்குத் தலைவலிகள் தொடரும்.

5. ஈரான் மேல் தாக்குதல் நடத்த உத்திகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன (இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்). ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தத் தீவிரம் தணியும் என்று முன்பு கணிக்கபட்டது பொய்க்கும் என்பதாக தற்போதைய நிலவரங்கள் கட்டியங்கூறுகின்றன.

6. எண்ணெய்க்காக இந்தியாவும் சீனாவும் அமெரிக்க பாணியில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தங்கள் காலனிகளாகவோ, அபிமானமிக்க நாடுகளாகவோ ஆக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். எண்ணெய் விலையை அமெரிக்க டாலரில் நிர்ணயிப்பது மட்டுமே அமெரிக்காவின் பிரதான வேண்டுகோளாக இருக்கும். சீனா அதைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம். இதனால், அமெரிக்கா சீனாவைச் சீண்டும் காலம் வரும். ஏற்கனவே, நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலமாக அதற்கு விதையூன்றியாகி விட்டது.

7. எண்ணெய்க்கு மாற்று எரிபொருள், அல்லது, முற்றிலும் மாறுபட்ட எரிபொருள்கள் இனி வலம் வரலாம். அத்தகைய முயற்சிகள் ஜப்பானிலிருந்தோ, சீனாவிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ தான் வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இதற்கு முன் வெளிவந்த அத்தகைய முயற்சிகள் எல்லாம் எண்ணெய்க் கம்பெனிக் கூட்டத்தாரால் மூடி விழுங்கப் பட்டது என்பது நினைவிருக்கலாம்.


சரி, இந்த விலையேற்றத்தின் உச்சம் என்ன? நான் கேட்டறிந்தவரையில், பீப்பாய் எண்ணெயின் விலை 200 டாலர்களை கிறிஸ்துமஸுக்குள் தொட்டுவிட்டு, அதற்குப் பின் தணிய ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் திரும்பாதவை. பாதிக்கப் படப் போவது சாமான்யன்கள் தான்...

(தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்களால் உடனடியாக இதை எழுத முடியாமல் போனது. ஈமெயில் மூலம் வந்து குவிந்த விசாரிப்புகளின் வழிதான் எனது பதிவை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி)