ஆபரேஷன் பொய் -2

ஏற்கனவே நான் எழுதிய இந்த வலைப்பூவை படிக்கவும். http://thiruvadiyan.blogspot.com/2006/08/blog-post_12.html

பிரிட்டிஷ் போலிஸ் 25 பேரை 10 விமானங்களைத் தகர்க்கத்திட்டமிட்டதாக கைது செய்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் பாகிஸ்தான் தொடர்புடையவர்கள். இந்த உளவுத் தகவலை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு அளித்த பெருமை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-யைச் சேரும்.


இதில் எது கவனிக்க வேண்டிய விஷயம் எனில்... கைது செய்யப்பட்டோர் மொத்தம் 25 பேர்.. இதில் மாஸ்டர் மைன்ட் எனப்படும் ரவ்ஃப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான். சரி... ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தி கிடைத்தாகி விட்டது. இஸ்லாம் என்ற மதம் மற்றுமொரு முறை தீவிரவாதமதம் என்றும் இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டாகி விட்டது.

தற்போதைய நிலை என்ன..?

மாஸ்டர் மைன்ட் என வருணிக்கப்பட்ட ரஷித் ரவ்ஃப் பற்றிய விசாரணையில் இதுவரை எந்த உருப்படியான தகவலும் சிக்கவில்லை. ஒரே ஒரு குற்றம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது ஓவர் ஸ்டே. பாகிஸ்தான் அமைப்புகள் ரஷித் ரவ்ஃப் என்ற பெயரையே தற்போது மறந்து விட்டன. இது இப்படியென்றால், பிரிட்டிஷ் போலிஸ் நிலையோ இன்னும் மோசம்....

கைது செய்யப்பட்ட 25 பேரும் முஸ்லிம் என்ற பரபரப்புக்குப் பின் ஒரிரு நாட்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். மீதம் 22 பேரில் 11 பேர் மட்டுமே கோர்ட்டுவரை அழைத்துச் செல்லப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டனர். அதிலும் 8 பேர் மட்டுமே நேரடியாக குற்றத்தில் ஈடுபடுவதற்கான "வாய்ப்பு" இருந்ததாக குற்றப்பத்திரிக்கை சொல்லுகிறது. மீதம் மூவரில் இருவர் இப்படி ஒரு விஷயம் நடைபெறப்போவதாகத் தெரிந்திருந்தும் அரசுக்குச் சொல்லவில்லை என்ற குற்றமும், ஒரு சிறுவன் (17 வயது) தீவிரவாதம் சம்பந்தமான சில பத்திரிக்கைத் துணுக்குகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விவரம் அறிந்த வட்டாரங்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய குறைந்தது விமானம் ஒன்றுக்கு இருவர் வீதமும், அவர்களுக்கு போக்குவரத்து உட்பட இதர உதவி செய்ய ஒரு குழு ஒன்றிற்கு மூவர் விதம் மொத்தம் ஐம்பது பேராவது இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருப்பது மொத்தம் 8 பேர்தான்.. அதுவும் ஊகத்தின் அடிப்படையில்தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்...

அதெப்படி 8பேர் போய் பத்து விமானங்களைத் தகர்க்க முடியும்...?

ஆக மொத்தம் அமெரிக்க பிரிட்டிஷ் உளவுத்துறைகளின் திசைதிருப்பல் விவகாரத்திற்கு பாகிஸ்தான் துணைபோய் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தராதரத்திற்கு பாகிஸ்தான் சென்றிருக்கிறது என்பது நமக்கு கவலையளிக்கிறது. (நாளைக்கு இந்தியாவிற்கு எதிராக உள்ள எந்தச் சதியிலும் பாகிஸ்தான் ஏன் என்ற கேள்வி கேட்காமல் தம் மக்களையே காவு கொடுக்கத் தயங்காது.)

இது மட்டுமா, மும்பாய் வந்த நார்த்வெஸ்ட் விமானத்தை டட்ச் போர் விமானங்கள் வழிமறித்து ஜெர்மனியில் அவசரமாகத் தரையிறக்கி 12 இந்திய முஸ்லிம்களைக் கைது செய்தது. அவர்கள் செய்த ஒரே தவறான காரியம், தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகளிலிருந்து (பிரிட்டிஷ் விமானத் தகர்ப்பு முயற்சி என்ற நாடகத்திற்குப் பின், பாவம் அனைவரும், வெளித்தெரியக்கூடிய பிளாஸ்டிக் பைகளில்தான் பாஸ்போர்ட், செல்போன் போன்றவற்றை வைத்துக்கொள்ளவேண்டும்) அடிக்கடி செல்போனை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அரண்டுபோயிருக்கும் அமெரிக்க மார்ஷல்கள் இருண்டுபோய்த் தெரிந்த இந்தியர்களைக்கண்டதும் பேய் என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டது. உடனே அவர்களை டெரரிஸ்ட் என்று விமானிக்குத் தகவல் தந்து... பின் கைது செய்யப்பட்டு தற்போது மன்னிப்பு கேட்டு விடுவிக்கப்பட்டது வேறு கதை.

பிரிட்டிஷ் போலிஸ் ஏற்கனவே செய்த பொய்ப்பிரச்சாரத்திற்கு வலுவூட்ட இந்த சிறு நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.
ஏன் இந்திய அரசு இதற்கு கடும் கண்டணம் தெரிவிக்க வில்லை என்றுதான் தெரியவில்லை. உலகெங்கும் போய் இந்தியர்கள் அண்ணியச் செலவாணி அனுப்ப வேண்டும். ஆனால் நமது அரசியல் வாதிகள் இந்தியர்களை மற்றவர்கள் இப்படி அநீதிக்கு உள்ளாக்கும் போது கண்டிக்காமல் இருப்பது சரியா..?

சரி விஷயத்திற்கு வருவோம்...

இந்த ஆபரேஷன் போஜிங்காவை ஏன் பிரிட்டிஷ் அரசு அமெரிக்க உதவியுடன் எதற்காக நடத்த வேண்டும். இதுபோல் எத்தனை நாடகங்கள் காத்திருக்கின்றன..?

முன்பு மாதிரியெல்லாம் இப்போது இல்லை... ஊடகங்கள் அதிகரித்து விட்டன. உண்மை எப்படியோ.. யார் மூலமோ வெளிவந்து விடுகிறது....

தனித்தமிழ்நாடும் திமுகவும்

தனித்தமிழ்நாடு கேட்டுப் போராட தயங்கமாட்டோம் என்று மதிமுக செயலாளர் ஒருவர் மேடையில் முழங்கியிருப்பது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சி ரகத்தைச் சேர்ந்த செய்தியாக இருக்கக்கூடும்.

ஆனால் 1965லேயே திரு.அண்ணாதுரை அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்டு போராட்டம் நடத்தியது பலருக்குத் தெரிந்திருக்காது. அந்தப் போராட்டத்தில் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களும் பங்குபெற்றிருந்தார் என்பதும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஈழத்தந்தை செல்வா அவர்களும் ஏறக்குறைய அந்த காலகட்டத்தில்தான் தமிழர்களுக்கென உரிமைவேண்டும் என்று போராட ஆரம்பித்திருந்த நேரம் அது.

அதே நேரத்தில்தான் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவக் கொள்கை மாற்றியெழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அதாவது பனிப்போர் காலமான அந்நேரத்தில் அமெரிக்க இராணுவம் உலகில் எந்த இடத்திற்கும் நான்கு மணிநேரத்திற்குள் சென்றுவிட முடிந்தது. இந்தியப் பெருங்கடல் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஏனெனில் டீகோ கார்சியா தவிர வேறு எங்கும் அமெரிக்காவிற்கு தளம் கிடையாது. (டீகோ கார்சியா என்ற அமெரிக்க இராணுவத்தளம் ஏறக்குறைய 8000 மைல்களுக்கப்பால் உள்ளது. http://maps.google.com/maps?q=-7.313055556,72.41083333(DIEGO%20GARCIA%20NSF)&z=5&t=k) டீகோ கார்சியாவிலிருந்து இந்தியத்துணைக்கண்டத்திற்கு போர் விமானங்கள் பறந்து வர அப்போது 8 மணி நேரத்திற்கும் மேலாகும். விமானந்தாங்கிக் கப்பல் வர அதற்கும் மேலாகும்.

அந்த இராணுவச் செயல்திட்டத்தின் கீழ், குறைந்த நேரத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கக்கூடிய வகையில் அமையக்கூடிய, அமெரிக்க இராணுவக் கப்பற்தளம் அமைக்க இடம் தேடினால், பாகிஸ்தானின் (1971 வரை பங்களாதேஷ் உருவாகவில்லை) சிட்டகாங், அல்லது கராச்சி மற்றும் இலங்கையின் திரிகோணமலை தான் இருந்தது. அப்போதைய அரசுக்கு உடனடியாக இதைத் தடுக்கவேண்டிய நிர்ப்பந்தம். வரலாறு அறிந்தவர்கள் புள்ளிகளைக் கோலமாக்கி விபரம் அறிந்து கொள்வார்களாக.

எனக்கு ஒரு உறுதிப்படுத்தபபடாத சந்தேகமும் உண்டு, ஈழப்பிரச்சினை, தனித்தமிழ்நாடு, திரிகோணமலை கப்பற்படைத்தளம் ஆகியவற்றிற்கு ஒன்றுக்கொன்று தொடர்புகள் உண்டோ என்று. பெரியஇடத்து விவகாரம் ரொம்பத் தோண்டக்கூடாது பாருங்கள்.

தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைத்து ஆட்சியேற்ற அண்ணாவின் அரசு, இந்திரா அம்மையாரின் "ஆலோசனைக்கு"ப்பிறகு ஒரு அம்சமான அறிக்கையை வெளியிட்டது. தனித்தமிழ்நாடு கோரிக்கை கிடப்பில் போடப்படுகிறது என்று. இதில் அதற்கு அண்ணா எடுத்துரைத்த உவமைதான் மிக முக்கியம். தனித்தமிழ்நாடு என்பது நமது காதில் அணிந்திருக்கும் தங்கத் தோடு போன்றது. அதை எறிந்து விட வேண்டும் என்று சொல்லவில்லை. காதில் புண் இருந்தால் தற்காலிகமாக கழட்டிவைத்துவிட்டு பிறகு தேவைப்படும்போது எடுத்து அணிவதில்லையா... அதுபோல் தற்போது காதுப்புண் ஆறும் வரை தனித்தமிழ்நாடு என்ற தோட்டைக் கழட்டி வைப்போம் என்று தனது சகாக்களுக்கு அவர் ஆறுதல் உரைத்தார். இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அண்ணாவின் காது புண்படும்படி அப்படி என்ன சொன்னார் என்பது தற்போது அமரராகிவிட்ட இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.

பிற்பாடு அந்தத் தோடு என்னாவனது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.

திருமா அவர்கள் மேலைநாட்டுச் "சுற்றுப்பயணம்" எல்லாம் செய்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் தலையீடு ஈழத்தில் இருக்க வேண்டிய அவசியமான இச்சூழலில் தனித்தமிழ்நாடு கோரிக்கை தமிழக அரசியல் மேடைகளில் தோன்றியிருப்பது நல்லதற்கல்ல.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் தனித்தமிழ்நாடு பற்றி நன்கு அறிந்த ஒருவர் இன்றைய முதல்வர் பதவியில் இருப்பது தான்.

முதல்வர் கண்டும் காணாமல் போகப்போவதில்லை என்பதை தமிழக அரசு மணிமாறனை கைது செய்து உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும் ஈழப்பிரச்னை என்பது வேறு, விடுதலைப்புலிகளின் ஆதரவு வேறு என்று பிரித்துப்பார்க்கத் துவங்கியிருப்பதும் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது.

மத்திய அரசு கவனிக்குமா?

ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் - PART 1

ஒரு வேளை தனி ஈழம் பெறுவது இன்னும் ஒரு வருடத்திற்குள் சாத்தியமானால் என்ன நடக்கும் என்ற ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறேன்.

தனி ஈழம் ஏற்பட்டால் பொருளாதார ரீதியாக யார் உதவப்போகிறார்கள்.. இந்தியா, சீனா அல்லது அமெரிக்கா இந்த மூன்று நாட்டில் ஒரு நாடுதான் அந்தப் பொருளாதாரத்தை ஏற்படுத்தித் தரமுடியும்.

அமெரிக்க மற்றும் சீனா உதவியையோ அருகாமையையோ இந்தியா ஏற்க முடியாது. எனவே இந்தியாவே எல்லா வகையிலும் உதவும். எல்லா வகையில் என்றால் பொருளாதார, இராணுவ, கட்டமைப்பு வகையிலான அனைத்து உதவிகளையும் சேர்த்துத்தான்.. இந்தியாவுடன் உள்ள தற்போதைய மன வேறுபாட்டை புலிகள் எப்படிக் களையப்போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி... மற்றபடி அவர்கள் அமெரிக்காவையோ சீனாவையோ தேர்ந்தெடுத்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவோ சீனாவோ இந்தியா வேண்டுமா அல்லது புலிகள் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிவந்தால் அவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பர் என்பது சொல்லிப் புரிய வேண்டிய வி்ஷயமொன்றுமில்லை.


இரண்டாவதாக, அப்படி ஒரு தனி நாடு ஏற்படின் என்ன வளம் அங்குள்ளது. அதை எப்படி மேம்படுத்தவது என்றால் சிங்கப்பூரை உதாரணமாகக் கொண்டு கப்பல் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தை மேல் நிறுவலாம். அதற்கு வலிமையான இராணுவமும் அமைதியான சூழலும் ஏற்படுத்தித் தரவேண்டியது முக்கியம். அப்படி ஒரு சிறந்த துறைமுகம் திரிகோணமலையில் அமையுமானால்.. தற்சமயம் சிங்கப்பூருக்கும் கிளாங்கு துறைமுகத்திற்கும் செல்லும் வர்த்தகம் மற்றும் கப்பல் ரிப்பேர் தொழில் பாதிப்படையக்கூடும். ஆகையால் மேற்படி நாடுகளுக்கும் இதில் ஆர்வம் கிடையாது என்பதை விடஅதற்கு இடைஞ்சல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவதாக, புலம்பெயர்ந்து போன ஈழத்தமிழர்கள் திரும்பி வருவார்களா..? அவர்களின் பிள்ளைகள் ஈழத்திற்கு வந்து வேலை செய்வார்களா என்பது பெருங்கொண்ட கேள்வி...ஏனெனில் ஒரு தலைமுறை ஆகிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகளுக்கு மேலைநாட்டு வழக்கத்தில் பழக்கமாகி விட்டார்கள். அவர்களுக்க ஈழப்போராட்டத்தைப் பற்றி அந்த அளவுக்கு ஈடுபாடு இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பாவிடின் இந்தியாவிலிருந்து தமிழர்களை புலம்பெயர அழைக்கலாம், அதற்கு இந்திய அரசு இடமளிக்குமா என்பது மேல்மட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு.

சரி, இதெல்லாம் ஒன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் தனி ஈழம் சாத்தியமானால் தான். அது இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் நீட்டிக்குமேயானால், என்ன ஆகும் என்பது கற்பனைக் கெட்டாத ஒரு விஷயமே.


(தொடரும்...)

லெபனான் தாக்குதல்: யாருக்கு வெற்றி ?

நடந்து முடிந்த(!) லெபனான் தாக்குதலில் இரு அணியினருமே வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஹெஸ்பொல்லா மற்றும் அரபு நாட்டினர் அவர்கள் வெற்றி பெற்றதாகக் கொக்கரித்துக் கொண்டுள்ளனர். சன்னி அரபுகள் ஒரு புல்லைக் கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் ஜெயிப்பவர்களுடன் சேரத்தெரிந்தவர்களாக அவர்களும் ஆரவாரிக்கின்றனர்.

எது எப்படியோ ஹெஸ்பொல்லாவிற்கு இனி அதிகம் பணம் வரக்கூடும். நீங்கள் பார்த்ததில்லையா நாயகன் படத்தில்... மக்களை கொடுமைப்படுத்தும் இன்ஸ்பெக்டரைக் கொல்லும் கதாநாயகனை மக்கள் அளவுக்கதிகமாக ஆதரிப்பதில்லையா... அதுபோல... அரபுகள் இனி ஹெஸபொல்லாவிற்கென தனி அக்கவுண்ட் தொடங்கக்கூடும். அமெரிக்கா வளர்த்து வைத்திருக்கும் கள்ள ஆயுதச்சந்தையில் நவீன ஆயுதங்கள் வாங்க அந்தப் பணம் உதவக்கூடும்.

அமெரிக்கா ஒருகாலத்தில் அளித்த ஆயுதங்களை உருமாற்றி அவர்கள் மேலேயே ஏவிய கூத்து இப்போது நடந்து கொண்டிருக்கிறது. உலகம் உருண்டையல்லவா... அதுதான், அமெரிக்க ஆயுதங்கள் அமெரிக்கர்களையோ அமெரிக்கத் தோழ நாடுகளையோ தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இஸ்ரேல் மறுபக்கம் தானே வெற்றி பெற்றதாக கூவிக்கொண்டுள்ளது. ஒவ்வொரு இஸ்ரேலிய வீரன் கொல்லப்பட்டதற்கும் 10 அரபுகளைத் தான் கொன்றதாக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல நீண்ட தொலைவில் தாக்கும் ஏவுகணைகளை ஏவும் ஹெஸ்பொல்லாவின் சக்தியை தான் முற்றிலும் ஒழித்துவிட்டதாக அது பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. வேறுவகையில் பார்த்தால், லெபனான் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பொருளாதாராத்தில் மிகவும் பின்தங்கப் போகிறது. காரணம் பணம் வந்து கொண்டிருந்த சுற்றுலா மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

அது மட்டுமல்ல. இன்றைக்கு ஐநா அளவில் சண்டை நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்தச் சண்டை உண்மையாக நிற்கப் போவதில்லை. இருக்கும் இரண்டு வீரர்களை திரும்பப்பெறும் வரையில் அங்கிருந்து இஸ்ரேல் இராணுவம் நகரப்போவதில்லை. அதே சமயம், இஸ்ரேல் இராணுவம் வெளியேறும் வரை தான் சும்மா இருக்கப் போவதில்லை என்று ஹெஸ்பொல்லாவும் கூறி வருகின்றன. எனவே, வெளிப்பூச்சுக்கு கொஞ்ச காலம் சண்டை நிறுத்தம் அனுஷ்டிக்கப் படக்கூடும்.

சரி உண்மையில் இதில் பாதிக்கப்பட்டோர் லெபனானின் அப்பாவி பொதுமக்களும் இஸ்ரேலின் அப்பாவி பொதுமக்களும் தான். நிஜத்தில் இரு ஜனங்களுமே அப்பாவி கிடையாதுதான். ஆனால், குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

கையாலாகாத லெபனான் அரசுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். ஒருபக்கம் அமெரிக்காவுக்கு ஆதரவு (நம்ப முடியவில்லையா... பனிப்போர் காலங்களில் CIA வின் மிக முக்கியமான செயற்கேந்திரம் பெய்ருட் ஆக இருந்து வந்தது. அமெரிக்க உளவுத்துறைகளின் பல்வேறு பிரிவுகளுக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியாமல் அங்கே ஆதரவாளர்கள் அங்குண்டு). மறுபக்கம் ஹெஸ்பொல்லாவிற்கு மறைமுக ஆதரவு. மேலும் உட்சபட்சமாக, தெற்கு லெபனானில் ஹெஸபொல்லாவினர் முறையான தேர்தலில் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் அரசை இஸ்ரேலர்கள் சிலர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னவென்று தெரியுமா? பாலஸ்தீன இயக்கத்தில் ஊடுருவியிருக்கின்ற அளவுக்கு ஹெஸ்பொல்லாவில் மொஸாட்டின் ஊடுருவல் இல்லையென்று. அதுவே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ.... தற்போது BBCயும் CNNனும் வேறு செய்திகள் சொல்லலாம்.

அது சரி.. நான் கற்பனை செய்து பார்க்கிறேன்... நாம் எப்போது காஷ்மீர-ஹெஸ்பொல்லாக்களைத் தாக்குவது. அதாங்க பக்கத்து நாட்டில் ஒளிந்துகொண்டு நம் நாட்டில் தீவிரவாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்களே... இஸ்ரேல் மட்டும் தனது படையைக்கொண்டு லெபனானைத் தாக்கும் போது யார் வந்து தடுத்தார்கள். ஐநா சபையில் சாவகாசமாக விவாதம் வைத்து பிறகு ஒரு தீர்மானம் போடுவார்கள். அப்போது கேட்டுக் கொண்டால் போயிற்று... அது மட்டுமா அந்த ஷரத்து பிடிக்கவில்லை, இந்த ஷரத்தை மாற்று என்று சொல்லி காலம் ஓட்டிவிடலாம்.

என்ன,... இன்று கொடியேற்றியதைப் பார்க்கப் போனீர்களா... அல்லது சன் டிவியின் முன் உட்கார்ந்திருந்தீர்களா..?

மத்தியக் கிழக்கும் மத்திம அமெரிக்காவும்

இன்றைக்கு மத்தியக் கிழக்கில் நடந்து வரும் சண்டையை நிறுத்த ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியும் வழக்கம்போல் இஸ்ரேல் அவற்றை துச்சமாக மதித்து தொடரந்து தனது தரைப்படையை ஊடுருவச் செய்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை ஐநா தனது சட்டைப்பைக்குள் இருக்கும் சட்டாம்பிள்ளை.

இந்தச் சண்டை உண்மையில் இஸ்ரேலுக்கு வெற்றியா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நிச்சயமாகத் தோல்விதான். முப்பது நாட்களுக்கு மேல் மழையாகக் குண்டுகளைக் கொட்டியும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில்தானே இஸ்ரேலிய மற்றும் ஹெஸ்பொல்லா வீரர்களும் பலியாயுள்ளனர். மத்திய கிழக்கின் பலமிக்க இராணுவத்திற்கு சமமாகப் போரிடக்கூடிய ஒரு அமைப்பாக ஹெஸ்பொல்லா அமைப்பு மாறிப்போய் உள்ளது ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

ஹெஸ்பொல்லா இவ்வாறு தாக்குப்பிடிக்கக்கூடிய நிலையை அடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் சில காரணங்களை நாம் பார்க்கலாம்.

1. ஹெஸ்பொல்லா அமைப்பினர் ராடார் பொருத்திய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலிய அதிநவீண போர்ப்படகைத் தகர்த்துள்ளனர். இவ்வளவு அதிநவீண ஏவுகணை வகைகளை இவர்களுக்கு அளிப்பது யார். எப்படி இப்படி ஒரு நவீனத்துவத்தை இவர்கள் பெற்றனர்?

2. சமீப காலமாக அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையின்படி சன்னி பிரிவினருக்கு எதிராக ஷியா பிரிவினரை வளர்ப்பதுடன் அவர்களுக்கிடையே நிரந்தரப் பகையைத் தொடர்ந்து மூட்டி ஒருவரை ஒருவர் கொன்று அழிக்க ஆன உதவிகளைச் செய்வது. இந்தக் கொள்கை ஏன் லெபனான் விஷயத்தில் நடக்கவில்லை. அதாவாது ஷியா-ஹெஸ்பொல்லா அடிவாங்குவதை சன்னி-சவுதி அரசோ சோர்டான் அரசோ மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் வேடிக்கை பார்க்கும் என்று ஏமாந்தது.

3. இதற்கு உச்சகட்டமாக இஸ்ரேலைத் தாக்கிய ஏவுகணைகள் அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் தயாரானவைதான் என்பது. இதை இஸ்ரேல் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால் அமெரிக்கத் தொழில்நுட்பம் வழங்கப்பட்ட அந்த அமெரிக்கத் தோழன் நாடு எது?

TOW வகையைச் சேர்ந்த அந்த ஏவுகணைதான் நிறைய டாங்குகளையும் கடற்படை படகையும் குறிதவறhமல் தாக்கி அழித்திருக்கிறது. இதை யார் கொடுத்திருப்பார்கள். ஈரான் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் முன்பொரு காலத்தில் ஹெஸ்பொல்லாவிடம் சிறைப்பட்ட தனது மக்களை விடுவிக்கப் பேரம் பேசி ஈரானுக்கு அப்படி TOW ஆயுதங்களை அன்று அளித்ததே அமெரிக்காதானாம். அதுவும் தொலைவிலிருந்து கொணர இயலாமால் இஸ்ரேலின் உதவிகோரப்பட, மேற்படி ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாகவே ஈரான் போய் இறங்கியதாம். இதை ஈரான் ஈராக்குடனான போரில் பயன்படுத்தி அழித்து முடித்து விட்டது என்று அன்றைய இஸ்ரேலிய உளவுத்துறை உறுதிசெய்து கொண்டவுடன்தான் பெருமூச்சு விட்டதாம். ஆனால் எப்படி அதே ஏவுகணை ஈரானிலிருந்து ஹெஸ்பொல்லாவிற்கு வந்திருக்க முடியும்?

என்ன இஸ்ரேலியர்கள் மட்டும்தான் புத்திசாலிகளா என்ன, ஈரானியர்கள் அதை ரிவர்ஸ் இன்ஞினியரிங் என்னும் முறைப்படி அவர்களே அதை அவர்கள் நாட்டிலே உருவாக்கியிருக்கக்கூடும் என்று வலுவாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் போனாம்போக்கில் கூறிவிட்டுப் போகமுடியாது. ஏனெனில் விஷயம் அப்படி. அதைப் பற்றிய லிங்க் வேண்டுவோர் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

இன்றைக்கு ஐநா சபை தீர்மானம் போட்டிருக்கிறது. வழக்கம்போல் அதை இஸ்ரேல் மதிக்கப் போவதில்லை. இஸ்ரேலைத் தட்டிக் கேட்க இன்றைய நிலையில் எந்த ஐநா உறுப்பினர்க்கும் விருப்பமோ தைரியமோ கிடையாது.

ஊடகங்களைத்திருப்ப இருக்கவே இருக்கிறது ஆபரேஷன் போயிங்கா 2006.

வாழ்க அமெரிக்க ஜனநாயகம்,

ஆபரேஷன் பொய்?

லண்டனில் முறியடிக்கப் பட்டதாகக் கூறப்பட்ட ஆபரேஷன் போயிங்கா 2006 பற்றி பல சந்தேகங்கள் ஊடகங்களில் எழுப்பபட்டுள்ளன. உண்மையில் அப்படி ஒரு ஆபரேஷன் நடக்க இருந்ததா அல்லது இஸ்ரேல்-அமெரிக்கா-பிரிட்டனின் கேள்விக்குரிய லெபனான் தாக்குதலைப் பற்றிய விமர்சனங்களிலிருந்து உலகின் கவனத்தைத் திருப்புவதற்காகவா?


மேல் விவரம் அறிந்து கொள்ள

http://www.saag.org/%5Cpapers20%5Cpaper1909.html

இது மற்றுமொரு ஈராக் அணு ஆயுத தேடல் போன்றதொரு மாபெரும் பொய்யாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.

-திருவடியான்

ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் - முன்னுரை

இந்தத் தலைப்பு பலரது கவனத்தை ஈர்க்கக்கூடும் என்று எனக்குத் தெரியும். முதலில் இதைப்பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாரக்கலாம்.

தமிழகத்தில் இந்தியனாகப் பிறந்து, தேசப்பற்றுடன் வளர்ந்து, இந்திய அடையாள அட்டையுடன் புலம் பெயர்ந்து வாழும் நான், ஈழப் போராட்டம் 1983-ல் ஆக்ரோஷமாக வெடித்தபோது இலட்சக் கணக்கான மாணவர்கள் பள்ளி வகுப்பறையை விட்டு ரோட்டில் இறங்கி தமது ஆதரவைத் தெரிவித்து மத்தியிலிருந்த அரசைத் திரும்பிப் பார்க்க வைத்தார்களே, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் என்ற முறையியல் எனக்குத் தகுதியிருக்கிறது.

விழியில் நீருடன், கையில் குழந்தையுடன், மனதில் பயத்துடன், போக்கிடமின்றி, மலங்க விழித்துக் கொண்டிருந்த எம்குலச் சோதரிகளுக்கு ஆதரவளித்்து, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் அந்த விருந்தோம்பலை உபசரித்து வந்த இலட்சோபலட்சம் தமிழ்க்குடிமகன்களில் ஒருவனாக எனக்குத் தகுதியிருக்கிறது.

சரிதான், ஒரு வழியாக தகுதியைப் பற்றிச் சொல்லியாயிற்று.

இன்னும் நிறையச் சொல்ல வேண்டும், தாய் வழிச் சொந்தம் தந்தை வழிச் சொந்தம், என்று இன்னும் சொல்லிக் கொண்டே போனால், நீங்கள் அடுத்த வலைக்குடிலுக்குச் சென்று விடமாட்டீர்கள்?

அதனால் போதும்.

சரி பீடிகை பலமாக இருக்கிறதே, என்னதான் எழுதுவார் என்று நினைக்கிறீர்கள்.

ஈழப்போராட்டம் வெளிப்படையாக ஆரம்பித்து இருபத்து மூன்று ஆண்டுகளாகி விட்ட இக்காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை ஆகிவிட்டது. அப்போது சூடாக இருந்த இரத்தமெல்லாம் இப்போது சுண்டிப்போய் விட்டது. இப்போது இருக்கிற சூடான இளரத்தங்களுக்கு அன்று அனுபவித்த வேதனைகளோ, துயரமோ தெரியவில்லை.

தலைமுறைகளைப் பற்றிப் பேசுவதால் வெள்ளியணிந்த வீரராக்கும் என்று நினையாதீர்கள்.

இந்தத் தொடரின் வழி அன்றடைந்த துயரைப் பற்றி ஒரு தமிழ்நாட்டுத் தமிழனின் பார்வையில், இன்றைக்கும் தொடரும் ஈழப்போராட்டத்தைப்பற்றி ஒரு நினைவு கூறலாகத்தான் இது இருக்கப் போகிறது.

இலங்கையின் இனக்கலவரம் அதனைத் தொடர்ந்த அடக்குமுறை, வெடித்த போராட்டம், ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை அதற்கு ஒரு பார்வை இருக்கலாம். அதே சமயம் அப்போராட்டத்தை ஆதரித்து, போற்றி, வளர்த்து, பின் வளர்த்த கடா மார்பில் பாயந்த மன வலியால் வெறுத்துப்போன இந்தியத் தமிழனின் பார்வையில் அதைக் காண்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா. அந்த வகையான பார்வையில் இந்தத் தொடர் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கப் போகிறது.

விமர்சனத்திற்குப் பயந்தவர்கள் எழுத வரக்கூடாது என்பது ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை நமக்கு காட்டக்கூடிய பாடமாகும். ஆகவே விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் நிச்சயமாக ஏற்கப்படும்.

அடுத்த வலைக்குடில் பதிவில் மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்
திருவடியான்.
thiruvadiyan_gmail_com