ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் - முன்னுரை
இந்தத் தலைப்பு பலரது கவனத்தை ஈர்க்கக்கூடும் என்று எனக்குத் தெரியும். முதலில் இதைப்பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாரக்கலாம்.
தமிழகத்தில் இந்தியனாகப் பிறந்து, தேசப்பற்றுடன் வளர்ந்து, இந்திய அடையாள அட்டையுடன் புலம் பெயர்ந்து வாழும் நான், ஈழப் போராட்டம் 1983-ல் ஆக்ரோஷமாக வெடித்தபோது இலட்சக் கணக்கான மாணவர்கள் பள்ளி வகுப்பறையை விட்டு ரோட்டில் இறங்கி தமது ஆதரவைத் தெரிவித்து மத்தியிலிருந்த அரசைத் திரும்பிப் பார்க்க வைத்தார்களே, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் என்ற முறையியல் எனக்குத் தகுதியிருக்கிறது.
விழியில் நீருடன், கையில் குழந்தையுடன், மனதில் பயத்துடன், போக்கிடமின்றி, மலங்க விழித்துக் கொண்டிருந்த எம்குலச் சோதரிகளுக்கு ஆதரவளித்்து, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் அந்த விருந்தோம்பலை உபசரித்து வந்த இலட்சோபலட்சம் தமிழ்க்குடிமகன்களில் ஒருவனாக எனக்குத் தகுதியிருக்கிறது.
சரிதான், ஒரு வழியாக தகுதியைப் பற்றிச் சொல்லியாயிற்று.
இன்னும் நிறையச் சொல்ல வேண்டும், தாய் வழிச் சொந்தம் தந்தை வழிச் சொந்தம், என்று இன்னும் சொல்லிக் கொண்டே போனால், நீங்கள் அடுத்த வலைக்குடிலுக்குச் சென்று விடமாட்டீர்கள்?
அதனால் போதும்.
சரி பீடிகை பலமாக இருக்கிறதே, என்னதான் எழுதுவார் என்று நினைக்கிறீர்கள்.
ஈழப்போராட்டம் வெளிப்படையாக ஆரம்பித்து இருபத்து மூன்று ஆண்டுகளாகி விட்ட இக்காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை ஆகிவிட்டது. அப்போது சூடாக இருந்த இரத்தமெல்லாம் இப்போது சுண்டிப்போய் விட்டது. இப்போது இருக்கிற சூடான இளரத்தங்களுக்கு அன்று அனுபவித்த வேதனைகளோ, துயரமோ தெரியவில்லை.
தலைமுறைகளைப் பற்றிப் பேசுவதால் வெள்ளியணிந்த வீரராக்கும் என்று நினையாதீர்கள்.
இந்தத் தொடரின் வழி அன்றடைந்த துயரைப் பற்றி ஒரு தமிழ்நாட்டுத் தமிழனின் பார்வையில், இன்றைக்கும் தொடரும் ஈழப்போராட்டத்தைப்பற்றி ஒரு நினைவு கூறலாகத்தான் இது இருக்கப் போகிறது.
இலங்கையின் இனக்கலவரம் அதனைத் தொடர்ந்த அடக்குமுறை, வெடித்த போராட்டம், ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை அதற்கு ஒரு பார்வை இருக்கலாம். அதே சமயம் அப்போராட்டத்தை ஆதரித்து, போற்றி, வளர்த்து, பின் வளர்த்த கடா மார்பில் பாயந்த மன வலியால் வெறுத்துப்போன இந்தியத் தமிழனின் பார்வையில் அதைக் காண்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா. அந்த வகையான பார்வையில் இந்தத் தொடர் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கப் போகிறது.
விமர்சனத்திற்குப் பயந்தவர்கள் எழுத வரக்கூடாது என்பது ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை நமக்கு காட்டக்கூடிய பாடமாகும். ஆகவே விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் நிச்சயமாக ஏற்கப்படும்.
அடுத்த வலைக்குடில் பதிவில் மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
திருவடியான்.
thiruvadiyan_gmail_com
0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
Post a Comment