ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் - PART 1

ஒரு வேளை தனி ஈழம் பெறுவது இன்னும் ஒரு வருடத்திற்குள் சாத்தியமானால் என்ன நடக்கும் என்ற ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறேன்.

தனி ஈழம் ஏற்பட்டால் பொருளாதார ரீதியாக யார் உதவப்போகிறார்கள்.. இந்தியா, சீனா அல்லது அமெரிக்கா இந்த மூன்று நாட்டில் ஒரு நாடுதான் அந்தப் பொருளாதாரத்தை ஏற்படுத்தித் தரமுடியும்.

அமெரிக்க மற்றும் சீனா உதவியையோ அருகாமையையோ இந்தியா ஏற்க முடியாது. எனவே இந்தியாவே எல்லா வகையிலும் உதவும். எல்லா வகையில் என்றால் பொருளாதார, இராணுவ, கட்டமைப்பு வகையிலான அனைத்து உதவிகளையும் சேர்த்துத்தான்.. இந்தியாவுடன் உள்ள தற்போதைய மன வேறுபாட்டை புலிகள் எப்படிக் களையப்போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி... மற்றபடி அவர்கள் அமெரிக்காவையோ சீனாவையோ தேர்ந்தெடுத்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவோ சீனாவோ இந்தியா வேண்டுமா அல்லது புலிகள் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிவந்தால் அவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பர் என்பது சொல்லிப் புரிய வேண்டிய வி்ஷயமொன்றுமில்லை.


இரண்டாவதாக, அப்படி ஒரு தனி நாடு ஏற்படின் என்ன வளம் அங்குள்ளது. அதை எப்படி மேம்படுத்தவது என்றால் சிங்கப்பூரை உதாரணமாகக் கொண்டு கப்பல் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தை மேல் நிறுவலாம். அதற்கு வலிமையான இராணுவமும் அமைதியான சூழலும் ஏற்படுத்தித் தரவேண்டியது முக்கியம். அப்படி ஒரு சிறந்த துறைமுகம் திரிகோணமலையில் அமையுமானால்.. தற்சமயம் சிங்கப்பூருக்கும் கிளாங்கு துறைமுகத்திற்கும் செல்லும் வர்த்தகம் மற்றும் கப்பல் ரிப்பேர் தொழில் பாதிப்படையக்கூடும். ஆகையால் மேற்படி நாடுகளுக்கும் இதில் ஆர்வம் கிடையாது என்பதை விடஅதற்கு இடைஞ்சல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவதாக, புலம்பெயர்ந்து போன ஈழத்தமிழர்கள் திரும்பி வருவார்களா..? அவர்களின் பிள்ளைகள் ஈழத்திற்கு வந்து வேலை செய்வார்களா என்பது பெருங்கொண்ட கேள்வி...ஏனெனில் ஒரு தலைமுறை ஆகிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகளுக்கு மேலைநாட்டு வழக்கத்தில் பழக்கமாகி விட்டார்கள். அவர்களுக்க ஈழப்போராட்டத்தைப் பற்றி அந்த அளவுக்கு ஈடுபாடு இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பாவிடின் இந்தியாவிலிருந்து தமிழர்களை புலம்பெயர அழைக்கலாம், அதற்கு இந்திய அரசு இடமளிக்குமா என்பது மேல்மட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு.

சரி, இதெல்லாம் ஒன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் தனி ஈழம் சாத்தியமானால் தான். அது இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் நீட்டிக்குமேயானால், என்ன ஆகும் என்பது கற்பனைக் கெட்டாத ஒரு விஷயமே.


(தொடரும்...)

5 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

கப்பல் வர்த்தகத்தை ஏற்கனவே புலிகள் மிக நன்கு வளர்த்தெடுத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் புலிகளின் பினாமிகள் ஏராளமாக முதலீடு செய்திருக்கிறார்கள். நாடு கட்டுவதற்கு தேவையான அடிப்படை மூலதனமும் பொருளாதார பலமும் இன்னொரு நாடு உதவத்தேவையில்லாதளவுக்கு தமிழீழத்திடம் இருக்கிறது.
மீன்பிடி மற்றுமொரு பொருளாதார மூலம். மின்சாரத்துக்கு முதல்கட்டமாக காற்றையே நம்பியிருக்கிறோம். அடுத்த கட்டமாக கடல் நீரோட்டங்களை பயன்படுத்துவது பற்றி சிந்திக்கலாம்.

எமக்கு தேவையான உணவை எம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

புலம்பெயர்தமிழர்கள் இங்கு வருவார்கள். உடனடியாக இல்லை. தமிழீழம் பிறந்ததும் மூலதனத்தை போட முன்வருவார்கள். பிறகு படிப்படியாக வந்து சேரக்கூடும். வராவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழீழத்துக்கு உதவப்போகும் நாடுகள் பட்டியலில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்கும் நாடாக இந்தியா இல்லாமலிருந்தால் சந்தோஷம்.
தென்னாபிரிக்கா வலுவான ஆதரவு நாடு.

தமிழீழத்தில் புரட்சிகர அரசியல், பொருளாதார மாற்றங்கள் வருமானால் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவு நிறைய இருக்கும். நேபாளம் மாவோவாதிகளால் கைப்பற்றப்பட்டால், எமக்கு மிக நல்ல நேச நாடு கிடைக்கும்.

Anonymous said...

யப்பா!!!
எங்கயெல்லாம் போய்ச் சிந்திக்கிறீர்கள்.
ஒரு வருடமென்பதெல்லாம் அதீத ஆசை ;-(
எதிர்கொள்ளப்போகும் முதன்மைச் சிக்கல் மின்சாரம்தான்.
காற்றாலை உற்பத்தி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமென்று எதிர்பார்க்கலாம். ஆனால் மிகப்பெரியளவில் தொழிற்றுறை விரிவுபடும்போது போதாது என்று தோன்றுகிறது. சிங்களவருக்கு மின்சாரம் மேலதிகமாகத்தான் இருக்கும்.
கொஞ்சக்காலம் பின்னடித்தாற்கூட ஒரு நிலையில் காசுக்குத் தருவார்கள்.
ஒப்பீட்டளவில் மலிவானதென்றும் நினைக்கிறேன்.

புலம்பெயர் இளைய சக்தி பற்றி சரிவரத் தீர்மானிக்க முடியாது. அண்மைக்காலத்தில் பெரியளவு மாற்றம் அவர்களிடத்தில் உருவாவதைக் காணமுடிகிறது. குறிப்பாக மகிந்த அரசுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்.
சேவை அடிப்படையில் தாமாக முன்வந்து தாய்நாட்டிற்காக உழைப்பவர்கள் எண்ணிக்கை வேண்டுமானால் குறையலாம். ஆனால் வியாபார ரீதியாகப் பார்த்தால் அவர்களின் பணி ஈழத்துக்கிடைக்க வாய்ப்புக்கள் தாராளமாகவே உள்ளன.
சாதாரண மனிதப்பண்பில் நோக்கினாற்கூட, தாம் தாய்நாட்டிற்காகப் பணி செய்வதாகக் கிடைக்கும் புகழ்ச்சியையும், ஒரு மக்கள்கூட்டத்தால் நன்றியோடு பார்க்கப்படும் நிலையையும் தவிர்க்க நினைக்க மாட்டார்கள்.
சுயநலத்தோடு, இலாபநோக்கோடு இருந்தாற்கூட தாய்நாட்டுக்கான அவர்களின் முதலீடும் பணியும் இருக்கவே செய்யும்.

என்ன இருந்தாலும் வரும் காலங்களில் போராட்டத்தலைமை நடந்துகொள்ளும் முறையில்தான் பெருமளவு தங்கியுள்ளது.

Anonymous said...

இந்த விசயத்தை சற்று உணர்ச்சிவசப் படாமல் பார்ப்பது நல்லது.இலங்கையில் நடைபெறும் ஒவ்வொறு செயல்களையும் இந்தியா தன் பார்வையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல..இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயம்மும் கூட.தெற்கு எல்லைக்காகவும் ஒரு ராணுவ நிதி ஒதுக்கீடு செய்வதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.இந்தியா அதற்கேற்ற வாறுதான் காய்களை நகற்றும்.அங்கு எது நடந்தாலும் இந்திய நலன்களுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும்.இதற்கு நடுவே அரசியல் பண்ணுவது LTTE மற்றும் இலங்கை அரசின் திறமை. ஆயுதங்களையே நம்பியிருக்கும் LTTE யின் அரசியல் திறமை பற்றிதான் நமக்கு நன்றாக தெரியுமே.

\\நாடு கட்டுவதற்கு தேவையான அடிப்படை மூலதனமும் பொருளாதார பலமும் இன்னொரு நாடு உதவத்தேவையில்லாதளவுக்கு தமிழீழத்திடம் இருக்கிறது\\

யதார்தத்தை பார்க்காமல் அவர் விருப்பத்தைஎழுதியிருக்கிறார்.இருந்தாலும் அவர் ஆர்வத்தை பாராட்டலாம்.

said...

// இந்தியாவிலிருந்து தமிழர்களை புலம்பெயர அழைக்கலாம்,//
பணியாற்ற வேண்டுமானால் வருவார்கள் அங்கு தங்குவதற்கு என்பது சந்தேகம் தான் முன்னமே அங்கிருந்து வந்தவர்கள் இங்கிருக்கின்றனர் அவர்களாவது வருவார்களா என்றால் கடினம் தான். சரி ஏன் அங்கு போதிய மக்கள் இல்லையா? அதிகமானவர்கள் புலம் பெயர்ந்து விட்டனரா? தங்கள் ஆக்கம் நன்றாக உள்ளது படிக்க ஆர்வமாகவும் உள்ளது

said...

என்னார்.. தங்கள் வருகைக்கு நன்றி..