சுஜாதா என்கிற வழிப்போக்கன்

சுஜாதா இறந்து போனார் என்று படித்ததில் இருந்து மனது ஒரு மாதிரியாகக் கனக்கிறது. அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை. சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கு வலையுலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஏராளமான இரங்கல் வலைப்பதிவுகளைக் காண நேரிடலாம்.

1970களில் அவரின் நில் கவனி தாக்கு தொடர் தினமணிகதிரில் வந்தபோது நான் தொடக்கப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நான் ஒரு புத்தகப் புழு (அவரின் பல கதைகளில் வருவது போன்ற ஒரு typical புத்தகப் புழு நான்). என் தந்தை அப்போதைய பிரபல நாளிதழ்களுக்கு நிருபராக இருந்ததால் பலவகையான சஞ்சிகைகளையும் நாளேடுகளையும் தினமும் படிக்கின்ற வாய்ப்பை நான் வீட்டிலேயே பெற்றேன். நில் கவனி கொல் தொடரில் அவர் ஒரு பிரட்டா வகை கைத்துப்பாக்கியைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக விவரித்துவிட்டு, தொடரும் என்ற வரிக்கு மேல், அந்தத் துப்பாக்கி 18 இன்ஞ் தூரத்தில் என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது என்றார். அவ்வளவுதான், அன்றிலிருந்து சுஜாதா சுரம் பிடித்துவிட்டது. அப்போதெல்லாம் பெண்கள் பெயரில் நிறையபேர் கதை எழுத ஆரம்பித்திருந்தனர். பிற்பாடு நூலகத்தில் போய் சுஜாதா ஏற்கனவே எழுதிய கதைகளை, நாவல்களை எல்லாம் படித்தேன். அதுவும் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், லால்குடி என்று இவற்றைச் சுற்றியே எழுதியிருந்த பல நாவல்கள், காவிரிக்கரையின் குளிர்ச்சியில் மரத்தடியில் படுத்துக் கொண்டே படித்த மாதிரியான உணர்வுகள் இன்னும் நினைவிற்குள் இருக்கிறது. என்னை பெரிய அளவில் பாதித்த நாவல், பிரிவோம் சந்திப்போம். அதன்பின், அவரின் நாவல்களில் குறிப்பிட்டிருந்த தி.ஜானகிராமன், மற்றும் இன்னபிற நாவலாசிரியர்களின் நாவல்களைத் தேடிப் பி(டி)த்துப் படிக்கத் தொடங்கினேன். இவ்வாறாக நாவல்களை, கதைகளை சளைக்காமல் படிக்கும் வெறியை ஊட்டியவர் சுஜாதா என்றால் மிகையாகாது. ஏன் எதற்கு எப்படி என்ற தொடர் ஜூனியர் விகடனில் (அப்போது அதன் விலை நாற்பது காசு) வந்தபோது, சுஜாதா பற்றிய மரியாதை அதிகமானது. இவர் தொழில்நுட்பக் கேள்விகளையெல்லாம் இவ்வளவு எளிதாக விளக்கியிருக்கிறாரே என்பதால் அந்த மரியாதை. அப்போது தற்போதைய மாதிரி இன்டர்நெட் எல்லாம் பிரபலமாகவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்து நடையால் தன்னை தனிப்படுத்திக் காட்டி பேர் வாங்கியவர். விஞ்ஞானச் சிறுகதைகளைத் தமிழில் பிரபலமாக்கியவர். துப்பறியும் நாவல் முதல் வரலாற்றுப் புதினம் வரை பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதல் ஷிட்னி வரை விமர்சனம் செய்வார். எண்சீர் விருத்தப்பா முதல் ‌‌ ‌‌அய்க்கூ வரை அலசுவார். சினிமாவிற்கு அவர் போக ஆரம்பித்தபின்னால் அவரின் எழுத்து நடையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் நவீனத் தமிழ்இலக்கியத்தில் மறைத்து விட இயலாதவை.

அவர்தம் மறைவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியாவின் கொசோவாக்கள்..

கொசோவாவின் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனமும், அதை அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகளும், உலகின் பல ஜனநாயக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னவோ உண்மை. 20 லட்சம் பெரும்பான்மை (90%)அல்பேனிய முஸ்லிம் மக்களைக் கொண்ட கொசோவா செர்பியாவின் ஒரு மாநிலமாக, அதே சமயம் UN-NATO அமைதிப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் 1999 கொசோவா போர் முதல் இருந்து வருகிறது. இந்த தனிநாடு பிரகடனத்தை மேற்கத்திய வல்லரசுகள் ஆதரித்து ஒரு முன்னுதாரணத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. இந்த முன்னுதாரணம், ஐநா என்ற அமைப்பின் இருப்பையே கேலி செய்வதாக உள்ளது. மேலும் பல கொசோவாக்கள் உருவாவதற்கு இது வழி வகுக்கும் என்பதுதான் இப்போதைய முக்கிய விவாதப் பொருள். இந்தியா, இலங்கை, ரஷ்யா, சீனா, ஸ்பெயின், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், கொசோவாவின் பிரகடனத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன், இதைப் பற்றி விவாதிப்பதற்கு அவசர ஐநா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. வேறென்ன, கொசோவாக்கள் தங்கள் நாடுகளில் தோன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

1970-களிலேயே கொசோவா என்ற தனிநாட்டிற்கு அடிகோலியாகிவிட்டது. பிற்பாடு யூகோஸ்லாவியா என்ற நாடு பல்வேறு பிரிவுகளாக சிதறுண்ட நிலையில் (போஸ்னியா, க்ரோஷியா, செர்பியா, etc), செர்பியாவில் கொசோவா பகுதியை தனி அந்தஸ்துள்ள மாநிலமாகப் பிரகடனப்படுத்தக் கோரி போராட்டம் வலுக்க, அப்போதைய அதிபர் ஸ்லோபதான் மிலோசெவிக் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டார். அது சர்வேதச அளவில் பெரும் கண்டணத்திற்கு உள்ளானது. அப்போதைய ரஷ்ய அரசின் போரிஸ் எல்ட்ஸினின் அறிவுரையின் பேரில், மிலோசவிக் அந்தத் தவறைச் செய்தார். தனது ராணுவத்தைப் பின்வாங்கிக் கொள்ள, காத்திருந்த சர்வதேச அமைப்புகள் (அமெரிக்க மற்றும் ஜெர்மனிப் படைகள்) ஐநா/நாடோ அமைதிப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் 1999ல் ஆக்கிரமநம் செய்து கொண்டன. இன்றைக்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய அமெரிக்கப் படைத்தளம் கொசோவாவில் தான் உள்ளது (Camp BondSteel). ரஷ்யாவைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கும் வகையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் இராசாந்திர செயற்முனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஈடுபாடும் அத்தகைய வகையைச் சார்ந்தது தான்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூண்டுதலின் பேரில், கொசோவா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது. உள்நாட்டில் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்புகளைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகள் இதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. ரஷ்யாவில் ஏற்கனவே ஜார்ஜியா பிரச்னை உள்ளது. இந்தியாவில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், சீனாவில் மத்தியப் பகுதி, பாகிஸ்தானில் பலுசிஸ்தான், இலங்கையில் தமிழீழம் என்று பல நாடுகளிலும் பிரச்சினை உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழீழத்தைத் தனிநாடாகப் பிரகடனம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஏன் இப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கக்கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாமே.

தனி நாடாகப் பிரகடனப் படுத்த வேண்டுமென்றால், ஒரு வல்லரசு அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அருகாமையில் உள்ள இந்தியா, புலிகளால் இந்த முயற்சி எடுக்கப்படும் வரையில், அதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. சீனாவுக்குச் சரியான முகாந்திரங்கள் இல்லை. அமெரிக்கா இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இதைச் செய்யப் போவதில்லை. ரஷ்யாவிற்கோ, இதில் ஈடுபாடு் இருக்கப் போவதில்லை.

ஆனால்..... ஆச்சரியங்கள் நடக்கலாம். அதை நடத்திக்காட்ட, அதைப் பற்றி எடுத்துப் பேச புலிகள் தரப்பில் இன்றைக்கு யாரும் இல்லை என்பது தான் வேதனையான விசயம். அன்டன் பாலசிங்கம் அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இது சாத்தியமாயிருக்கலாம் என்று ஒரு எண்ணம் பளீரென வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்ச்செல்வனுக்குப் பிறகும் உலகத் தலைவர்கள் அளவில் அரசியல் ரீதியாகப் பிரதிநிதிக்க இன்னும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பது ஒரு ஊனமே. அப்படி ஒரு தலைவரை ஈழத்தில் அடையாளம் காண்பதை விட, இந்தியாவிலிருந்தே காண்பது சரியாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால், நம் கண் முன் வருகிற நபர் வைகோ தான். ஆங்கில அறிவுடையவர், பல தலைவர்களுடன் பழகியவர், ஆழ்ந்த அரசியலனுபவம் மிக்கவர் என்ற தகுதிகளுடன், புலிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் அதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவரும் என்பதும் கூடுதல் தகுதிகள். ஆனால், அவர் அதற்கு சில தியாகங்கள் வேண்டியிருக்கும். தமிழக அரசியலை விட்டு அவர் வெளியே வரவேண்டும். அவர் தனது அரசியல் கனவுகளை உதிர்த்து விட்டு வெளியே வந்தாக வேண்டும். புலம் பெயர்ந்து உலகளவில் செயல்படத் தயாராக வேண்டும்.

மேலும், புலிகள் தரப்பில் பொதுவிவகாரத்தைக் கவனிக்க ஆளில்லாத இந்தச் சூழலில் சரியாகப் பிரச்சாரம் செய்து, உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதில் வெற்றியும் பெற்றிருக்கிற இலங்கை அரசு, ஆயுத ரீதியாகவும், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளிலும் புதுமையைக் கையாண்டு வருகிறது. போர் உச்சமடைந்திருக்கிற இந்த வேளையில், ஊடகச் சமரும் உச்சமாக உள்ளது. பல்வேறு வகையான ஊடகப் பொய்கள் வலம் வருகின்றன. இலங்கை இராணுவம் கொடுக்கும் புள்ளி விவரங்களைக் கூட்டினால், சிறு பிள்ளை கூட இது பொய் என்று சொல்லும் அளவிற்கு ஊடக அறிக்கைகள் பிரசுரமாகின்றன. அதை எதிர்த்து அல்லது விளக்கிச் சொல்ல யாருமில்லாத நிலை சோகம்தான்.

ஒன்று நிச்சயம், தலைமுறையாக நடந்து வரும் இந்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவென்று ஒன்று வேண்டும். புலம் பெயர்ந்து வசிக்கும் அடுத்த தலைமுறையினர், இஸ்ரேலர்கள் போல தலைமுறை கடந்தும் தமக்கென்று உருவாக்கிய தாய் மண்ணிற்கு வந்தது போல, தமிழ் ஈழத்திற்கு வசிக்க வருவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, தீர்வொன்று வேண்டும், அதுவும் விரைவில் வேண்டும்.

Darfur and Steven Speilberg - 2

சூடானுக்கு உதவ ரஷ்யா மற்றும் கீழ்த்திசை நாடுகள் உதவ முன் வந்ததைக் கண்டோம். சில வாசகர்கள், சரியாகவே கணித்திருந்தனர். எண்ணெய் வளம் தான் மிக முக்கியக் காரணம். உலகின் மிகப் பெரிய எண்ணெய் வளத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை விட, டார்ஃபுரில் இருக்கும் எண்ணெய் வளம் பெரியது என்ற எண்ணெய் வள ஆய்வறிக்கைதான் இதற்கெல்லாம் மூல காரணம். எண்ணெய் மட்டுமா, உலகிலேயே மூன்றாவது பெரிய யுரேனியம் டெபாஸிட் டார்ஃபுர் பகுதியில் தான் உள்ளது. அதுவும் ஏறக்குறைய மிகச் சுத்தமான டெபாஸிட். அது போக உலகின் நான்காவது பெரிய காப்பர் டெபாஸிட்டும் இங்குதான் உள்ளது. தரைக்குக் கீழ் உள்ள எண்ணெய்தான் பாவம் அத்தரைக்கு மேல் உள்ள மக்களை அநியாயமாகக் கொல்வதற்குக் காரணமாயிருக்கிறது. எங்கெங்கு எண்ணெய் வளம் உள்ளதோ எங்கெல்லாம் அமெரிக்கக் கம்பெனிகளின் கையில் அந்த எண்ணெய் வளங்கள் இல்லையோ, அங்கெல்லாம் பிரச்னைதான்.

சாட் என்ற சூடானின் அண்டை நாட்டைப் பார்த்தோமே.. அந்த நாட்டில் டார்ஃபுர் பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை எக்ஸான் மொபில் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. ஈராக் போரின் காரண கர்த்தா (Iraq War Architect) பால் வால்போவிட்ஸ் உலக வங்கித் தலைவரான பிறகு, அவருக்கு இடப்பட்ட விசேஷ உத்தரவு என்னவென்றால், எக்ஸான் மொபில் கம்பெனிக்கு சாட் நாட்டில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பது தான். உலக வங்கி தாரளமாக கடன் வழங்கியது. அதே சமயம், தேவையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் 17 சதவீத எண்ணெய் வள இறக்குமதி ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறதென்றால், அந்த 17 சதத்தில் இதுவும் ஒன்று. 17 சதத்தை 26 சதமாக ஆக்குவதற்கான திட்டம் வரையப்பட்டிருக்கிறது. எக்ஸான் மொபில் இதில் தீவிரம் காட்டுகிறது. உற்பத்தியோ, எண்ணெய்வள நாடுகளில் நெருக்கடியோ இல்லாமல், எண்ணெய் ஏன் 100 டாலர் வரை உயர்ந்தது என்பதற்கு தனியாகவே ஒரு பதிவு போட வேண்டும். இந்த அநியாய விலை உயர்வு, எண்ணெய்க் கம்பெனிகளும் இராஜயோகமாகப் போனது. எக்ஸான் மொபில் மட்டுமே 36 பில்லியன் டாலர் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது.

ஈராக்கில் 600,000 மக்களை அநியாயமாகக் கொன்று குவித்த அமெரிக்கா, டார்ஃபுரில் 200,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் (எண்ணிக்கை இன்றளவும் அனுமானம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், சூடான் அரசு அந்த எண்ணிக்கைய வன்மையாக மறுத்திருக்கிறது) சீன அரசைக் குறைசொல்கிறார்கள். அருகிலிருக்கும் காங்கோ நாட்டில் இதுவரை 1.35 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிற்கும் ஆயுதம் விற்கும் அமெரிக்கா அதைப்பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை. அக்கம் பக்கத்து ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர்களில் இறந்தவர்களைப் பற்றி இங்கு ஒரு லிஸ்டே இருக்கிறது.

சீனாவைத் தாக்கக் காரணம் என்ன?

சூடான் அரசு ஆரம்ப முதலே அமெரிக்க கம்பெனிகளுக்கு எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி தரப் போவதில்லை என்று உறுதியாக இருந்தது. சீன அரசின் CNPC, இந்திய அரசின் ONGC, மலேசியாவின் PETRONAS போன்ற நிறுவனங்கள் எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி பெற்றன. சீனா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இதுவரை துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிராத பகுதிகளைக் குறிவைத்து தற்போது, நைஜீரியா, சாட், லிபியா, அல்ஜீரியா என்று தனது எண்ணெய் வள மூலாதாரங்களைப் பெருக்கியது.

சூடானில் போட்டி கடினமாகத்தான் இருந்தது. சீன அரசு ஆயுதங்கள் முதலான உதவிகளை சூடான் அரசிற்கு அளித்ததன் மூலம், அதிகமான எண்ணெய் வயல் பரப்புகளுக்கு உரிமம் பெற்றது. கல்வி, பொருளாதாரம், ஆயுதம் என்று எல்லாத் துறைகளிலும் சீனா சூடான் அரசைத் தத்தெடுத்த செல்லப் பிள்ளைக்கு செய்வது போல் அத்தனையும் செய்ய, அமெரிக்கா தற்போது சீனா தான் இந்த 200,000 பேர் செத்துப் போனதற்குக் காரணம் என்பது போன்ற ஒரு பிரமையை அமெரிக்கா சார் ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு திரையுலகப் பெருமக்களும் விலக்கல்ல. நோக்கம் என்னவென்றால், அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் அங்கு தொழில் செய்ய வேண்டும். சீனா அதற்குத் தடையாக உள்ளது. இராணுவ நடவடிக்கை எடுக்க முடியாத கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அப்படி எடுத்தால் அது சீனாவை நேரடியாகச் சீண்ட வேண்டிய கட்டாயம் வரும். அதற்கான தயார் நிலையில் அமெரிக்கா இல்லாததால், ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். SAVE DARFUR என்று எத்தனை வெப்ஸைட்கள் உள்ளன தெரியுமா... எல்லாவற்றிலும் திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்..

அமெரிக்கா எப்போதுமே ஊடகம் சார்ந்த பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. வியட்நாம் தோல்வியை மறைக்க அவர்கள் பணமுதலீடு செய்து எடுத்த எத்தனையோ ஹாலிவுட் படங்களை நாம் மறுக்க முடியுமா? சார்லி சாப்ளினை ஏன் நாடு கடத்தினார்கள் என்பது நாம் அறியாததா? நிர்ப்பந்தங்களின் பேரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் இதற்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனை. அடுத்து ஜார்ஜ் குளுனி, அமைதித் தூதுவர் என்ற பெயரில் விரைவில் ஒரு சீன எதிர்ப்பு டார்ஃபுர் அறிக்கை விடலாம். பாப் பாடகர்கள் எதிர்ப்பிசை இயற்றலாம்.

அதாவது, மாமியார் உடைத்தால் மண் பானை. மருமகள் உடைத்தால் பொன் பானை.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே....

Darfur and Steven Spielberg - A political Olympics

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேஜிங் ஒலிம்பிக் விளையாட்டு ஆர்ட் டைரக்டர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்களில் சூடான செய்திகள் வந்திருக்கிறது. விலகியதற்குச் சொல்லப்பட்ட காரணம் வித்தியாசமானது. சூடானின் டார்ஃபுர் பகுதியில் இனக்கலவரம் நடப்பதாகவும் அதைத் தடுக்க சீனா இதுவரை முயற்சி செய்ய வில்லை என்றும் அதற்கான முயற்சிகளில் சர்வதேச அமைப்புகளை இறக்கி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கும் தான் இந்த வித்தியாசமான விளம்பர குட்டிக்க(ா)ரணம். உலகையே தனது உள்ளங்கைக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அமெரிக்க அண்ணாச்சிக்கு என்ன ஆயிற்று. சீனா தலையிடவில்லை என்று சொல்லுவதும், இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து என்று போராட்டம் (Save Darfur movements) நடத்துவதும், நம்மூர் பழமொழி மாதிரி.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன என்று கேட்கத் தோன்றினால், அது மிகச் சரி.

ஆடுகின்ற குடுமிக்குப் பின்னால் இருப்பது என்ன? ஏன் அப்படி அந்தக் குடுமி ஆடுகிறது என்பதைத்தான் நாம் இப்போது அலசப் போகிறோம்.

சூடான், ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சில டஜன் நாடுகளில் பரப்பளவில் பெரிய நாடு. எகிப்து நாட்டிற்கு தெற்கே ஆரம்பிக்கும் சூடான் நாடு, சிறியதும் பெரியதுமாக குறைந்தது எட்டு நாடுகளை தனது எல்லையில் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் அளவிற்குப் பெரிதான சூடான் நாட்டின் தெற்குப் பகுதியான டார்ஃபுர் தான் தற்போதைய பிரச்னைப் பகுதி. டார்ஃபுரை ஒட்டியுள்ள நாடுகள் சாட் (Chad) மட்டும் எரிட்ரியா (Eritrea). மறுபக்கம் எத்தியோப்பியா (வயிறு ஒட்டிப்போய், வாயில் ஈ மொய்க்கும் கறுப்பினக் குழந்தை ஞாபகத்துக்கு வரவேண்டுமே..). சூடானில் வழக்கம் போல பத்துக்கும் மேற்பட்ட பெரும் கறுப்பினக் குழுக்கள் (நம்ம ஊர் சாதிகள் மாதிரி) இருந்தாலும் அவர்களின் பொதுவான பேச்சு வழக்கு மொழி, அரபு மொழி. அது போக இந்தியா போல அத்தனை குழுக்களுக்கும் பிரத்தியேக மொழி ஒன்று உண்டு.

கார்டோம் (Khartoum) நகர்தான் சூடானின் தலைநகரம். 1956ல் பிரி்ட்டனிடமிருந்து போராடிச் சுதந்திரம் வாங்கியபின், ஒரு மதச் சண்டை நடந்தது (1947க்குப் பின்னரான இந்து முஸ்லிம் சண்டை நினைவுக்கு வரலாம்... பிரிட்டன் அதே முறையை ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்தியிருக்கிறது). இது கிறித்துவ முஸ்லிம் சண்டை. ஒருவாராக கிறித்துவ அமைப்புகள் முன்வந்து சமாதான ஒப்பந்தமொன்றைக் கையொப்பமிடச் செய்து, ஒரு பத்து வருடத்திற்கு நாடு அமைதியாக இருந்தது. இந்த மதச் சண்டையில் நாம் கவனிக்க வேண்டியது முக்கியமானது ஒன்றுள்ளது. மதச்சண்டை, முஸ்லிம் பெரும்பான்மை வடக்கு சூடானுக்கும் கிறித்துவப் பெரும்பான்மை தெற்கு சூடானுக்கும்தான் நடந்தது. பத்துவருட அமைதிக்குப் பிறகு, 1983ல் ரஷ்யாவின் உதவியுடன் SPLA என்ற அமைப்பு மார்க்ஸிஸ்ட் அமைப்பாக பரிணமித்தது. ரஷ்ய ஆயுதங்கள் ஹெலிகாப்டர்கள் என்று தாராளமாகப் புழங்கின. ஒரு கால கட்டத்தில் ரஷ்யா ஆளும் கட்சியுடன் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கையின் படி தெற்குப் பக்க SPLAவின் ஆதரவை நிறுத்திக் கொள்ள, SPLAவிற்கு ஆயுதம் கொடுக்கும் பண உதவி அளிக்கும் நாடுகள் தேவைப்பட்டன. அமெரிக்கா முன்வர, மீண்டும் உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்தது. 2002 வாக்கில் தீவிரவாதக் குழுக்களுக்கு பயிற்சியளிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட முன்வந்தது. சாட் மற்றும் எரிட்ரியா நாடுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயுதப்பயிற்சி மொஸ்ஸாத் மூலம் அளிக்கப்பட்டது. முதலில் ரஷ்யா, பிறகு அமெரிக்கா மற்றும் பிரிட்டன், அப்புறம் இஸ்ரேல் என்று இத்தனை நாடுகள் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், அரசுத் தரப்பினருக்கு ஆதரவு தரமுன் வந்தது யாரென்றால் சீனாவும் இந்தியாவும் மலேசியாவும் மற்றும் ரஷ்யாவும்.

அது சரி இவ்வளவு நாடுகளுக்கு இங்கென்ன வேலை?

- தொடரும்.

ஈரானியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறதா?

தற்சமயம் அமெரிக்கப் பொருளாதாரம் சொல்லொணா கடன்சுமைச்சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், வட்டிவிகிதம் குறைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சி STAGFLATION என்று சொல்லப்படும் மந்தவளர்ச்சிநிலையை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இச்சூழலில், இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு கெட்ட பெயரோடு பதவியை விட்டு வெளியேற வேண்டிய அவமானம் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஏற்பட்டிருக்கவேண்டாம்தான்.

கடன் வாங்கிச் செலவு செய்யும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க அரசு, 2000ம் ஆண்டு கீழ் விழுந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்தி மேற் செலுத்த போர் சார்ந்த உத்தியைத் தேர்ந்தெடுத்து, ஒரு 911 நாடகம் கொடிதே நிறைவேறியது. 911க்கு சம்பந்தமில்லாத ஈராக்கைத் தாக்கி போருக்கான செலவு அதிகரிக்க அமெரிக்க பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் அதிகமான போர்ச செலவுக்கான அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது. ஆறுவருடங்களாக இப்படியாக அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒருவாறாகக் கட்டிக் காத்தார்கள். கடன் வாங்கி அடுத்த நாட்டு மக்களைக் கொன்று குவித்து தனது பொருளாதரத்தை நிலைநிறுத்தும் ஒரே கேவலமான அரசு அமெரிக்க அரசாகத் தான் இருக்கும். இப்போது, அலன் கிரீன்ஸ்பான் என்ற புண்ணியவான் கடன் வாங்குவதற்கான வேறு ஒரு உத்தியைக் கண்டெடுத்ததன் விளைவுதான் தற்போதைய SUP-PRIME CRISIS. அதாவது கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவனுக்கு வீடுவாங்கக் கடன் கொடுத்து, அந்த வீட்டை அடமானச் சொத்தாகக் காட்டி, அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு BOND-களாக விற்று விடுவது. இதில் இரண்டு வருட TAX HOLIDAY வேறு. மேற்படி வரிச்சலுகை காலம் முடிந்தபின் தவணை கட்ட முடியாததால், வீட்டை வங்கிகளிடம் கடனாளிகள் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். வீட்டை வாங்குவோர் யாரும் இல்லாததால், யாரும் வசிக்காத முதலும் வட்டியும் வராத அசட்டுச் சொத்துக்களை வைத்துக்கொண்டு வங்கிகள் விழிக்க, ஒரு தீடீர்ப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. டாலர் வீழ்ந்தது. பல வாங்கிகள் டிரில்லியன் டாலர்களில் நட்டம் ஏற்பட்டதாக தங்களது முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. சில புத்திசாலி முதலீட்டாளர்கள் கடுமையான அதே சமயம், தமக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் பில்லியன் டாலர்களை முதலீடாக அளித்து நிர்வாக அமைப்பிற்குள் எளிமையாக நுழைந்து வருகின்றன.

சரி.. ஈரானியத் தாக்குதல் இதில் எங்கு வருகிறது என்கிறீர்களா? வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க புஷ் இஸ்ரேலுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஒரளவு சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஆட்சியாளர்களும், பொருளாதார, இராணுவ பலம் உடைய ஐந்து மத்தியக் கிழக்கு முஸ்லிம் நாடுகளை அளித்தொழிக்கும் பணியில், தற்போது ஈராக் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. ஏனைய நாடுகளுக்கான செயல்திட்டங்களை புஷ் ஆகஸ்டில் பதவியில் இருந்து இறங்குமுன் நிறைவேற்றியாக வேண்டுமே. புதிய தலைவர்கள் (John Mccain மற்றும் Rudy Guiliani தவிர) யாரும் இஸ்ரேல் சொல்வதை அவ்வளவு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்பதும் இந்த அவசரத்திற்குக் காரணம்.

ஆகஸ்டுக்குள் ஈரானைத்தாக்குவது அமெரிக்காவல் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. இதற்கு செனட்டில் ஆதரவு கிடைக்காது. முக்கியமாக, தற்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் சூழலில் இதற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. எனவே, தாக்குதல் நிச்சயமானாலும் இது அமெரிக்காவால் நடத்தப் படப் போகாமல் இருப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

ரஷ்ய மற்றும் சீன நாட்டு உதவிகளின் பேரிலும், FBI அறிக்கைகளின் படியும் ஈரானில் அணுகுண்டு தயாரிக்கப் படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த மாதிரியான அறிக்கையை சற்றும் விரும்பாத இஸ்ரேல், FBIக்குள்ளாகவே தனக்கெதிரான கோஷ்டிகள் உருவாகி விட்டதால், இனி அமெரிக்காவை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று நம்புகிறது. தனது நம்பகமான ஆட்கள் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் காலத்திற்குள்ளாகவே இந்தத் தாக்குதலை நடத்திக் காட்ட இஸ்ரேல் விரும்புகிறது. எனவே, இஸ்ரேல் கூடிய சீக்கிரத்தில் ஒரு அணு ஆயுதத் தாக்குதலை ஈரானின் மேல் நடத்தக் கூடும். மீடியாக்களின் கண்களைக் கட்டிவிட்டு, அந்த குண்டு, ஈரானின் அணுகுண்டு ஸ்டாக்கிலிருந்து வெடித்தது என்று பெரும்பான்மை ஆதரவு ஊடகங்களின் மூலம் உலகிற்குப் பறைசாற்றலாம். அல்லது பாகிஸ்தானிலுள்ள அணுகுண்டுகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வரும்போது ஈரானில் விபத்தாக வெடித்துவிட்டது என்றும் சொல்லலாம். ஆக, ஒரு பாரியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

சமீபத்திய மத்தியதரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளில் கடலுக்கு அடியில் செல்லும் Sub-Sea Cables "எதிர்பாராத விதமாக" சிதைக்கப்பட்டதன் விளைவாக மத்தியக்கிழக்கு நாடுகள் முதல் மும்பை வரையிலான இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டது. ஆழ்கடலில் இருக்கும் இந்தக் கேபிள்களைச் சரிசெய்ய குறைந்தது மூன்று நாட்களாகும். அப்பகுதியில் போர் நடந்து கொண்டிருந்தால் 10 நாளும் ஆகலாம், ஒரு மாதமும் ஆகலாம். சென்னையிலிருந்து வேறு ஒரு கேபிள் தென்கிழக்காசிய நாடுகளை இணைப்பதால், சென்னை போன்ற தென் மாநிலங்களுக்கு அதிகம் பாதிப்பில்லை என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது மூன்று நாடுகள் மட்டும் இதில் பாதிக்கப்படவில்லை. இஸ்ரேல், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய மூன்று நாடுகள் தான் அவை. அவற்றில் இன்டர்நெட் சேவைகள் வழமையாக இயங்கி வந்தன, இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உளவு அமைப்புகள் தமது சந்தேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி எச்சரிக்கையாக நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த கேபிள் சிதைப்பு ஒரு முன்னோட்டமாக நடத்திப்பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஈராக் போரின் போது, இன்டர் நெட் மூலம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுரமான செயல்கள் எல்லாம் லைவ் ரிப்போர்ட்டாக இணையவலைத்தளங்களின் மூலம் அவ்வப்போது வெளியிடப்பட்டது. அந்த மாதிரி மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகத் தான் இந்த இருட்டடிப்பு ஆயத்த முயற்சி நிறைவேற்றப்பட்டது என்பது கணிப்பாகும்.

ஐப்பானில் அணுகுண்டு போட்டு பல லட்சம் மக்களைக் கொன்ற அமெரிக்க அரசை எந்த நீதிமன்றம் தண்டித்தது. ஒரு வேளை ஈரானிய அணுகுண்டுத் தாக்குதல் நிஜமானால், அதே மாதிரிதான் இஸ்ரேலை யாரும் தண்டிக்கப் போவதில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன்.