Darfur and Steven Speilberg - 2
சூடானுக்கு உதவ ரஷ்யா மற்றும் கீழ்த்திசை நாடுகள் உதவ முன் வந்ததைக் கண்டோம். சில வாசகர்கள், சரியாகவே கணித்திருந்தனர். எண்ணெய் வளம் தான் மிக முக்கியக் காரணம். உலகின் மிகப் பெரிய எண்ணெய் வளத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை விட, டார்ஃபுரில் இருக்கும் எண்ணெய் வளம் பெரியது என்ற எண்ணெய் வள ஆய்வறிக்கைதான் இதற்கெல்லாம் மூல காரணம். எண்ணெய் மட்டுமா, உலகிலேயே மூன்றாவது பெரிய யுரேனியம் டெபாஸிட் டார்ஃபுர் பகுதியில் தான் உள்ளது. அதுவும் ஏறக்குறைய மிகச் சுத்தமான டெபாஸிட். அது போக உலகின் நான்காவது பெரிய காப்பர் டெபாஸிட்டும் இங்குதான் உள்ளது. தரைக்குக் கீழ் உள்ள எண்ணெய்தான் பாவம் அத்தரைக்கு மேல் உள்ள மக்களை அநியாயமாகக் கொல்வதற்குக் காரணமாயிருக்கிறது. எங்கெங்கு எண்ணெய் வளம் உள்ளதோ எங்கெல்லாம் அமெரிக்கக் கம்பெனிகளின் கையில் அந்த எண்ணெய் வளங்கள் இல்லையோ, அங்கெல்லாம் பிரச்னைதான்.
சாட் என்ற சூடானின் அண்டை நாட்டைப் பார்த்தோமே.. அந்த நாட்டில் டார்ஃபுர் பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை எக்ஸான் மொபில் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. ஈராக் போரின் காரண கர்த்தா (Iraq War Architect) பால் வால்போவிட்ஸ் உலக வங்கித் தலைவரான பிறகு, அவருக்கு இடப்பட்ட விசேஷ உத்தரவு என்னவென்றால், எக்ஸான் மொபில் கம்பெனிக்கு சாட் நாட்டில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பது தான். உலக வங்கி தாரளமாக கடன் வழங்கியது. அதே சமயம், தேவையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் 17 சதவீத எண்ணெய் வள இறக்குமதி ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறதென்றால், அந்த 17 சதத்தில் இதுவும் ஒன்று. 17 சதத்தை 26 சதமாக ஆக்குவதற்கான திட்டம் வரையப்பட்டிருக்கிறது. எக்ஸான் மொபில் இதில் தீவிரம் காட்டுகிறது. உற்பத்தியோ, எண்ணெய்வள நாடுகளில் நெருக்கடியோ இல்லாமல், எண்ணெய் ஏன் 100 டாலர் வரை உயர்ந்தது என்பதற்கு தனியாகவே ஒரு பதிவு போட வேண்டும். இந்த அநியாய விலை உயர்வு, எண்ணெய்க் கம்பெனிகளும் இராஜயோகமாகப் போனது. எக்ஸான் மொபில் மட்டுமே 36 பில்லியன் டாலர் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது.
ஈராக்கில் 600,000 மக்களை அநியாயமாகக் கொன்று குவித்த அமெரிக்கா, டார்ஃபுரில் 200,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் (எண்ணிக்கை இன்றளவும் அனுமானம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், சூடான் அரசு அந்த எண்ணிக்கைய வன்மையாக மறுத்திருக்கிறது) சீன அரசைக் குறைசொல்கிறார்கள். அருகிலிருக்கும் காங்கோ நாட்டில் இதுவரை 1.35 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிற்கும் ஆயுதம் விற்கும் அமெரிக்கா அதைப்பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை. அக்கம் பக்கத்து ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர்களில் இறந்தவர்களைப் பற்றி இங்கு ஒரு லிஸ்டே இருக்கிறது.
சீனாவைத் தாக்கக் காரணம் என்ன?
சூடான் அரசு ஆரம்ப முதலே அமெரிக்க கம்பெனிகளுக்கு எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி தரப் போவதில்லை என்று உறுதியாக இருந்தது. சீன அரசின் CNPC, இந்திய அரசின் ONGC, மலேசியாவின் PETRONAS போன்ற நிறுவனங்கள் எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி பெற்றன. சீனா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இதுவரை துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிராத பகுதிகளைக் குறிவைத்து தற்போது, நைஜீரியா, சாட், லிபியா, அல்ஜீரியா என்று தனது எண்ணெய் வள மூலாதாரங்களைப் பெருக்கியது.
சூடானில் போட்டி கடினமாகத்தான் இருந்தது. சீன அரசு ஆயுதங்கள் முதலான உதவிகளை சூடான் அரசிற்கு அளித்ததன் மூலம், அதிகமான எண்ணெய் வயல் பரப்புகளுக்கு உரிமம் பெற்றது. கல்வி, பொருளாதாரம், ஆயுதம் என்று எல்லாத் துறைகளிலும் சீனா சூடான் அரசைத் தத்தெடுத்த செல்லப் பிள்ளைக்கு செய்வது போல் அத்தனையும் செய்ய, அமெரிக்கா தற்போது சீனா தான் இந்த 200,000 பேர் செத்துப் போனதற்குக் காரணம் என்பது போன்ற ஒரு பிரமையை அமெரிக்கா சார் ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு திரையுலகப் பெருமக்களும் விலக்கல்ல. நோக்கம் என்னவென்றால், அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் அங்கு தொழில் செய்ய வேண்டும். சீனா அதற்குத் தடையாக உள்ளது. இராணுவ நடவடிக்கை எடுக்க முடியாத கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அப்படி எடுத்தால் அது சீனாவை நேரடியாகச் சீண்ட வேண்டிய கட்டாயம் வரும். அதற்கான தயார் நிலையில் அமெரிக்கா இல்லாததால், ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். SAVE DARFUR என்று எத்தனை வெப்ஸைட்கள் உள்ளன தெரியுமா... எல்லாவற்றிலும் திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்..
அமெரிக்கா எப்போதுமே ஊடகம் சார்ந்த பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. வியட்நாம் தோல்வியை மறைக்க அவர்கள் பணமுதலீடு செய்து எடுத்த எத்தனையோ ஹாலிவுட் படங்களை நாம் மறுக்க முடியுமா? சார்லி சாப்ளினை ஏன் நாடு கடத்தினார்கள் என்பது நாம் அறியாததா? நிர்ப்பந்தங்களின் பேரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் இதற்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனை. அடுத்து ஜார்ஜ் குளுனி, அமைதித் தூதுவர் என்ற பெயரில் விரைவில் ஒரு சீன எதிர்ப்பு டார்ஃபுர் அறிக்கை விடலாம். பாப் பாடகர்கள் எதிர்ப்பிசை இயற்றலாம்.
அதாவது, மாமியார் உடைத்தால் மண் பானை. மருமகள் உடைத்தால் பொன் பானை.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே....
3 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
மக்களே... மன்னிக்கவும். ப்ளாக்கர் சொதப்பல் காரணமாக, எனது பழைய பதிவுகளெல்லாம் தமிழ்மணத்தில் புதிதாக வெளியிட்ட மாதிரி வருகிறது. இதை விரைவில் சரி செய்து விட முயற்சிக்கிறேன்.
//ஈராக் போரின் முன்னாள் தளபதி பால் வால்போவிட்ஸ் //
அவர் பாதுகாப்பு அமைச்சரவையின் துணைசெயலராக பணியாற்றினார் என்று அல்லவா அவரைப் பற்றிய தகவல்கள் கூறுகின்றன?
இண்டியன் சுட்டியமைக்கு நன்றி.. மொழிமாற்றத்தில் வந்த கோளாறு.. சரி செய்து விட்டேன். இராணுவச்செயலராக இருந்த அவர் தான் ஈராக் போரின் ஆர்க்கிடெக்ட். இன்னும் 9/11 ல் கூட அவரின் கை இருக்கிறது என்றும் எதிரணியினர் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment