அமெரிக்க ஆயுதக்கப்பலும் சமீர் ஃபரஜல்லாவும்

சமீபத்தில் தூத்துக்குடிக்கருகில் சிக்கிய அமெரிக்க ஆயுதக்கப்பலைப் பற்றி ஆராய முற்பட்டபோது கிடைத்த தகவல்கள் சந்தேகங்களை அதிகரிக்கின்றன.

சமீர் பரஜல்லா (Sameer Farajallah) என்கிற புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர், சார்ஜாவில் கட்டிட பொருட்கள் வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். ஐக்கிய அரபுக் குடியரசில் பாலஸ்தீனியர்களுக்கு தனிச் சலுகை உண்டு. அதைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சமீருக்கு, தன் பொருளாதர வசதியை மேம்படுத்த பல்வேறு வகையிலும் முயன்று வந்தார். சார்ஜா ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு வகையில் வர்த்தகம் நடத்த ஏதுவாக தனது வர்த்தகக் கொள்கையை வைத்திருந்தது. 
 
தனக்கு பரிச்சயமான சில ஆயுத வர்த்தகர்களுடனான தொடர்பில்,  ஈராக்கில் நடந்த போரில் இருக்கும் மறைமுக ராணுவ வர்த்தகங்களால் பயன்பெற முடிவு செய்து, ஈராக்கின் மறு நிர்மாணம் என்ற பெயரில் கூட்டம் நடத்த, அமெரிக்காவில்  நியூ ஃபீல்ட்ஸ் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அக்கம்பெனியில் அவர் ஒருவர் மட்டும் தான் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கின் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்க நிறுவனங்கள், அரை மணி நேரம் சந்தித்து உரையாட 10,000 டாலர் வசூலித்த சமீரால், விசா பிரச்னைகளால் ஈராக்கிய அதிகாரிகளைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் பணமும் திருப்பித் தரவில்லை. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆசியுடன் நடந்த இந்த மறு புணரமைப்புக் கண்காட்சியில் வந்து ஏமாந்து போன அமெரிக்கர்கள் தான் அதிகம். ஆனாலும் தளரவில்லை, சமீர்.

பிறகு இதே நாடகம் லிபியாவிலும் மறு புணரமைப்பு என்ற பெயரில் நடந்தது.

இதில் எல்லாம் சரியான காசு பெயராமல் சலித்துப் போன சமீருக்கு வேறு வகையான யோசனை சொல்லப்பட்டது. 2010ல் அட்வான்ஃபோர்ட் என்கிற கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சேவை தரும் நிறுவனம் ஒன்றை அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் ஆரம்பித்தார்.

கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளின் கடற்படை வீரர்களைக் குறிவைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினார். எஸ்டோனியாவில் மாதம் 2000 ஈரோ தருவதாக வாக்கு கொடுத்தவுடன் 200 பேர் உடனடியாக கடற்படையிலிருந்து விலகி வேலைக்கு சேர்ந்தார்கள். எஸ்டோனியக் கடற்படை, ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாற ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ஈரோ வீதம் பாதுகாப்பு தரப்படும் கப்பல்களிடமிருந்து வசூலித்து விடுவார். அப்படியென்றால், 200 பேருக்கு லாபமென்ன என்று கணித்துக் கொள்ளுங்கள்.

இந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் வேண்டுமே... அதைப் பெறுவதில் முறையான வழிமுறைகளை இந்த நிறுவனம் கையாளவில்லை. ஏனென்றால் அதற்கான ஆலோசனை சொல்ல சரியான ஆட்கள் இல்லை அவரிடம். ஒரு முறை, அமெரிக்க மாகாணமொன்றில் தனிப் பயன்பாட்டுக்கு என்று மொத்தமாக ஆயுதம் வாங்கி கப்பலுக்கு அனுப்பி விட்டனர். தாமதமாக மோப்பம் பிடித்த உளவு அமைப்புகள், விவரம் கேட்க, சமீரின் மகன் தான் வாங்கியதாகக் கூறி, ஜெயிலுக்குப் போனார். இரண்டரை வருடங்கள் கம்பெனி செயல்பட தடை விதிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் தான் மீண்டும் அமெரிக்காவில் அக்கம்பெனி செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து செயல்படும் பொருட்டு, தனது கம்பெனியின் தலைமைக் கேந்திரத்தை லண்டனுக்கு மாற்றிவிட்டு தொடர்ந்து தனது தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இம்முறை புத்திசாலித்தனமாக கேப்டன் வில்லியம் வாட்சன் என்பவரை தனது கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார், சமீர். இது ஒரு அமெரிக்கக் கம்பெனி என்கிற தோற்றத்தை தந்தது.

அந்த எஸ்டோனிய படைவீரர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க வில்லை. ஏன், வேலை செய்வதற்கான ஒப்பந்தம் கூட வழங்கப்பட வில்லை. இதனால், நிறையப் பேர் விலகி விட்டனர். அதனாலென்ன,  ரோமானியா, உக்ரைன், என ஏழை நாடுகள் நிறைய இருக்கின்றனவே.

பாருங்கள், இம்முறை எஸ்டோனியர்களும், உக்ரேனியர்களும், இந்தியர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, இந்தக் கப்பல் கடல் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டு விட்ட வங்காள விரிகுடாவில் என்ன செய்கிறது?

இலங்கையிலிருந்து ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்லும் பல கப்பல்களுக்கு இந்தக் கம்பெனி இதற்கு முன் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இம்முறை யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தார்கள் என்கிற கேள்வியும், இந்தக் கப்பல் ஆயுதங்கள் கடத்தி செல்லும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் சமீபகாலமாக இலங்கையில் அதிகரித்திருப்பதும், இந்தக் கப்பலின் நடமாட்டமும், இந்தப் பிரச்னையை தீர அலச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதற்கான விடையை, ரா அமைப்பு ஒரு வேளை கண்டுபிடிக்கக் கூடும்.
 
Reference:
1.  http://news.err.ee/6082c763-d9b3-4458-abce-5dc727697cb1
2. http://www.papt.org.ph/news.aspx?id=...d=115&paging=1
3. https://www.duedil.com/director/915541851/samir-farajallah