ஆசியாவின் கொசோவாக்கள்..

கொசோவாவின் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனமும், அதை அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகளும், உலகின் பல ஜனநாயக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னவோ உண்மை. 20 லட்சம் பெரும்பான்மை (90%)அல்பேனிய முஸ்லிம் மக்களைக் கொண்ட கொசோவா செர்பியாவின் ஒரு மாநிலமாக, அதே சமயம் UN-NATO அமைதிப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் 1999 கொசோவா போர் முதல் இருந்து வருகிறது. இந்த தனிநாடு பிரகடனத்தை மேற்கத்திய வல்லரசுகள் ஆதரித்து ஒரு முன்னுதாரணத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. இந்த முன்னுதாரணம், ஐநா என்ற அமைப்பின் இருப்பையே கேலி செய்வதாக உள்ளது. மேலும் பல கொசோவாக்கள் உருவாவதற்கு இது வழி வகுக்கும் என்பதுதான் இப்போதைய முக்கிய விவாதப் பொருள். இந்தியா, இலங்கை, ரஷ்யா, சீனா, ஸ்பெயின், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், கொசோவாவின் பிரகடனத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன், இதைப் பற்றி விவாதிப்பதற்கு அவசர ஐநா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. வேறென்ன, கொசோவாக்கள் தங்கள் நாடுகளில் தோன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

1970-களிலேயே கொசோவா என்ற தனிநாட்டிற்கு அடிகோலியாகிவிட்டது. பிற்பாடு யூகோஸ்லாவியா என்ற நாடு பல்வேறு பிரிவுகளாக சிதறுண்ட நிலையில் (போஸ்னியா, க்ரோஷியா, செர்பியா, etc), செர்பியாவில் கொசோவா பகுதியை தனி அந்தஸ்துள்ள மாநிலமாகப் பிரகடனப்படுத்தக் கோரி போராட்டம் வலுக்க, அப்போதைய அதிபர் ஸ்லோபதான் மிலோசெவிக் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டார். அது சர்வேதச அளவில் பெரும் கண்டணத்திற்கு உள்ளானது. அப்போதைய ரஷ்ய அரசின் போரிஸ் எல்ட்ஸினின் அறிவுரையின் பேரில், மிலோசவிக் அந்தத் தவறைச் செய்தார். தனது ராணுவத்தைப் பின்வாங்கிக் கொள்ள, காத்திருந்த சர்வதேச அமைப்புகள் (அமெரிக்க மற்றும் ஜெர்மனிப் படைகள்) ஐநா/நாடோ அமைதிப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் 1999ல் ஆக்கிரமநம் செய்து கொண்டன. இன்றைக்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய அமெரிக்கப் படைத்தளம் கொசோவாவில் தான் உள்ளது (Camp BondSteel). ரஷ்யாவைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கும் வகையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் இராசாந்திர செயற்முனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஈடுபாடும் அத்தகைய வகையைச் சார்ந்தது தான்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூண்டுதலின் பேரில், கொசோவா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது. உள்நாட்டில் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்புகளைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகள் இதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. ரஷ்யாவில் ஏற்கனவே ஜார்ஜியா பிரச்னை உள்ளது. இந்தியாவில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், சீனாவில் மத்தியப் பகுதி, பாகிஸ்தானில் பலுசிஸ்தான், இலங்கையில் தமிழீழம் என்று பல நாடுகளிலும் பிரச்சினை உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழீழத்தைத் தனிநாடாகப் பிரகடனம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஏன் இப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கக்கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாமே.

தனி நாடாகப் பிரகடனப் படுத்த வேண்டுமென்றால், ஒரு வல்லரசு அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அருகாமையில் உள்ள இந்தியா, புலிகளால் இந்த முயற்சி எடுக்கப்படும் வரையில், அதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. சீனாவுக்குச் சரியான முகாந்திரங்கள் இல்லை. அமெரிக்கா இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இதைச் செய்யப் போவதில்லை. ரஷ்யாவிற்கோ, இதில் ஈடுபாடு் இருக்கப் போவதில்லை.

ஆனால்..... ஆச்சரியங்கள் நடக்கலாம். அதை நடத்திக்காட்ட, அதைப் பற்றி எடுத்துப் பேச புலிகள் தரப்பில் இன்றைக்கு யாரும் இல்லை என்பது தான் வேதனையான விசயம். அன்டன் பாலசிங்கம் அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இது சாத்தியமாயிருக்கலாம் என்று ஒரு எண்ணம் பளீரென வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்ச்செல்வனுக்குப் பிறகும் உலகத் தலைவர்கள் அளவில் அரசியல் ரீதியாகப் பிரதிநிதிக்க இன்னும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பது ஒரு ஊனமே. அப்படி ஒரு தலைவரை ஈழத்தில் அடையாளம் காண்பதை விட, இந்தியாவிலிருந்தே காண்பது சரியாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால், நம் கண் முன் வருகிற நபர் வைகோ தான். ஆங்கில அறிவுடையவர், பல தலைவர்களுடன் பழகியவர், ஆழ்ந்த அரசியலனுபவம் மிக்கவர் என்ற தகுதிகளுடன், புலிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் அதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவரும் என்பதும் கூடுதல் தகுதிகள். ஆனால், அவர் அதற்கு சில தியாகங்கள் வேண்டியிருக்கும். தமிழக அரசியலை விட்டு அவர் வெளியே வரவேண்டும். அவர் தனது அரசியல் கனவுகளை உதிர்த்து விட்டு வெளியே வந்தாக வேண்டும். புலம் பெயர்ந்து உலகளவில் செயல்படத் தயாராக வேண்டும்.

மேலும், புலிகள் தரப்பில் பொதுவிவகாரத்தைக் கவனிக்க ஆளில்லாத இந்தச் சூழலில் சரியாகப் பிரச்சாரம் செய்து, உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதில் வெற்றியும் பெற்றிருக்கிற இலங்கை அரசு, ஆயுத ரீதியாகவும், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளிலும் புதுமையைக் கையாண்டு வருகிறது. போர் உச்சமடைந்திருக்கிற இந்த வேளையில், ஊடகச் சமரும் உச்சமாக உள்ளது. பல்வேறு வகையான ஊடகப் பொய்கள் வலம் வருகின்றன. இலங்கை இராணுவம் கொடுக்கும் புள்ளி விவரங்களைக் கூட்டினால், சிறு பிள்ளை கூட இது பொய் என்று சொல்லும் அளவிற்கு ஊடக அறிக்கைகள் பிரசுரமாகின்றன. அதை எதிர்த்து அல்லது விளக்கிச் சொல்ல யாருமில்லாத நிலை சோகம்தான்.

ஒன்று நிச்சயம், தலைமுறையாக நடந்து வரும் இந்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவென்று ஒன்று வேண்டும். புலம் பெயர்ந்து வசிக்கும் அடுத்த தலைமுறையினர், இஸ்ரேலர்கள் போல தலைமுறை கடந்தும் தமக்கென்று உருவாக்கிய தாய் மண்ணிற்கு வந்தது போல, தமிழ் ஈழத்திற்கு வசிக்க வருவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, தீர்வொன்று வேண்டும், அதுவும் விரைவில் வேண்டும்.

3 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

test

said...

"அப்படிப் பார்த்தால், நம் கண் முன் வருகிற நபர் வைகோ தான். ஆங்கில அறிவுடையவர், பல தலைவர்களுடன் பழகியவர், ஆழ்ந்த அரசியலனுபவம் மிக்கவர் என்ற தகுதிகளுடன், புலிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் அதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவரும் என்பதும் கூடுதல் தகுதிகள். ஆனால், அவர் அதற்கு சில தியாகங்கள் வேண்டியிருக்கும். தமிழக அரசியலை விட்டு அவர் வெளியே வரவேண்டும். அவர் தனது அரசியல் கனவுகளை உதிர்த்து விட்டு வெளியே வந்தாக வேண்டும். புலம் பெயர்ந்து உலகளவில் செயல்படத் தயாராக வேண்டும்."

சரியான கருத்து. ஆனால் வைகோவின் சமீபகால நடவடிக்கைகள் அவர் மேல் உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.

said...

நல்ல ஒரு பார்வை திருவடியான்.

புலிகளின் சர்வதேசத்தடை இதற்கு முன்னர் நீங்க வேண்டாமா?