பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) - சில விளக்கங்கள்.

ஜி.எஸ்.டி.  - சில விளக்கங்கள்.

ஜி.எஸ்.டி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அதன் ஆட்சியின் போது இதே மசோதாவை இதே பாராளுமன்றத்தில் முன்வைத்த போது மிளகாயைக் கடித்தது போல எதிர்ப்பு தெரிவித்த அதே பா.ஜ.க, இப்போது காங்கிரஸைக் கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக நிறைவேற்றியிருக்கிறது. 

சரி, முன்பு டி.என்.ஜி.எஸ்.டி இருந்தது, அதற்குப் பிறகு வாட் வந்தது. இப்போது வேறு ரூபத்தில் ஜி.எஸ்.டி வருகிறது. அதுவும் மத்திய ஜி.எஸ்.டி, மானில ஜி.எஸ்.டி, மற்றும் இன்டர்ஸ்டேட்/இம்போர்ட் ஜி.எஸ்.டி என்று மூன்று வகையான ஜி.எஸ்.டி.க்கள் இருக்கின்றன.

முதலில் ஜி.எஸ்.டி என்றால் என்ன?

குட்ஸ் அன்ட் சர்வீஸஸ் டாக்ஸ், அதாவது பொருள் மற்றும் சேவை வரி. ஒவ்வொரு விற்கும் தளத்திலும் வரி விதிக்கப்படும். அதாவது ஒவ்வொரு கை மாறும்போதும் வரி விதிக்கப்பட்டு, பயனாளியின் கையில் சேரும்போது அனைத்து வரிகளும் அவரின் தலையில் விழும். ஆனால், இடையில் வியாபாரிகள் அந்த வரியை ஏமாற்றி அமுக்கிவிடாமல், அரசு கஜானாவுக்கு முறையாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழிமுறைதான் ஜி.எஸ்.டி.

மானில ஜி.எஸ்.டி என்றால் என்ன?

எஸ்.ஜி.எஸ்.டி என்றழைக்கப்படும் மானில பொருள் மற்றும் சேவை வரியானது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் (இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை) அமுல் படுத்தப்படும். ஒவ்வொரு கை மாறும் போதும் இது அந்த விற்பனையில் விதிக்கப்பட்டு பொருளின் மீது விலை ஏறும். ஒவ்வொரு மாதமும் இதைப் பற்றிய விவரங்களை இணையம் வழியே தெரிவித்தாக வேண்டும். அப்படி வசூலிக்கப்பட்ட தொகையை அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் மானில அரசுக்குக் கட்டியாக வேண்டும். 

மத்திய ஜி.எஸ்.டி. என்றால் என்ன?

மேற்சொன்ன மானில பொருள் மற்றும் சேவை வரி மாதிரியே தான் இதுவும். ஆனால், இது வேறு ஹெட்-டில் வங்கியில் கட்டுவீர்கள். ஸ்டேட் ஜி.எஸ்.டி என்று வசூலிக்கும்போது சென்ட்ரல் ஜி.எஸ்.டி ஏன் வசூலிக்க வேண்டும். அது தனிக்கதை, பிறகு சொல்கிறேன். நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு வியாபாரியும், இரு ஜி.எஸ்.டி.க்களும் வசூலித்தாக வேண்டும். இரண்டு வரிகளையும் மாதாமாதம் கட்டியாக வேண்டும். 

இன்டர்ஸ்டேட் ஜி.எஸ்.டி என்றால் என்ன?

சி.எஸ்.டி என்று முன்பு ஒரு வரி இருந்தது அதுதான் இப்போது ஐ.ஜி.எஸ்.டி என்றழைக்கப்படும் இன்டர்ஸ்டேட் ஜி.எஸ்.டி. இதன்படி இதற்கென ஒரு தனி வரிவிதிப்பு இருக்கும். அது மானில மற்றும் மத்திய ஜி.எஸ்.டி.க்களின் சேர்ந்த ஒரு விகிதமாக இருக்கும். ஒரு மானிலத்திலிருந்து மற்றொரு மானிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு விற்கும் போதும், இறக்குமதி செய்யும்போதும் இந்த வரியை விதிக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படும்போது விலை கூடுமே, அது பயனாளியின் தலையில் தானே விடியும். இப்போதும் இதே முறையில் தானே வரி கட்டுகிறோம். என்னதான் வித்தியாசம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

விளங்கிக்கொள்ளலாம், வாருங்கள்.

இந்தப் படங்களைப் பாருங்கள்.


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மதிப்புக் கூட்டும் வரியை மட்டும்தான் நீங்கள் கட்டுவீர்கள். மீதமுள்ள வரி, உங்களுக்குத்திருப்பித் தரப்படும், அல்லது, நீங்கள் கட்ட வேண்டியதில்லை.

முதல் படத்தில் சென்ட்ரல் ஜி.எஸ்.டி மற்றும் ஸ்டேட் ஜி.எஸ்.டி இரண்டுமே வசூலிக்கப்பட்டு அரசிடம் கட்டப்பட்டு விடுகிறது. இரண்டாம் நிலை விற்பனையில், மதிப்பு ஏற்றப்பட்டு (அதாவது லாபம் மற்றும் இதர செலவினங்கள் சேர்த்து) அதே பொருள் கூடுதலாக மூன்றாம் வியாபாரிக்கு விற்கப்படுகிறது. அவரும் அவர் ஏற்கனவே கட்டிய தொகையைக் கழித்துக் கொண்டு மீதத்தைத்தான் கட்டுகிறார். கடைசியில், பயனாளி மூன்று நிலையிலும் ஏற்றப்பட்ட விலைக்கான வரியையும் சேர்த்து பொருளின் விலையாகக் கொடுத்து வாங்குகிறார்.

இதே முறைதான் இன்டர் ஸ்டேட் ஜி.எஸ்.டியிலும்.

சரி, இப்பொழுது புரிந்திருக்கும் உங்களுக்கு.

ஆனால் அது மட்டுமல்ல. அரசு எப்படி கவனமாக வியாபாரி கவனமாக ஏமாற்றிவிடாமல் இருக்கப் போகிறது அல்லது இருக்க முயற்சி செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

1. புதிதாக பதிவு செய்பவர்கள் பான் நம்பரைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.
2.   இந்தியா முழுக்க ஒரே நம்பர் தான். அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த எண் ஆன்லைன் மூலமாகத் தரப்படும். எல்லா ஜி.எஸ்.டி.களுக்கும் அதே நம்பர்தான். பணம் கட்டும்போது மட்டும் வேறு வேறு ஹெட்களில் கட்டுவீர்கள்.
3. ஆன்லைனில் இந்த நம்பர் வாங்குவது எளிது. ஆதார், பான் கார்டு, மட்டும் இருந்தால் போதும், மூன்று நாட்களில் எந்த வெரிபிகேஷனும் இல்லாமல், உங்கள் பதிவு எண் வழங்கப்படும்.
4. மொத்தமே 4 பாரங்கள் தான் நிரப்ப வேண்டியிருக்கும். ஒன்று விற்பனைக்காக வாங்கிய பொருள்களுக்கு, ஒன்று விற்ற பொருள்களுக்கானது, ஒன்று மாத விற்பனை விவரம், ஒன்று வருட விற்பனை விவரம்.
5. சிறு/குறு வியாபாரிகளுக்கு காலாண்டு மற்றும் ஆண்டு விற்பனை பாரங்கள் மட்டும் தான்.
6. அதனினும் சிறிய வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட வருட விற்பனைத் தொகை இருந்தால் எந்த விதமான ரிடர்னும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதே சமயத்தில் வரியும் வசூலிக்க முடியாது.

இதில் அரசு வியாபாரிகளால் ஏமாற்ற முடியாது என்று நினைக்கிறது. உண்மைதான். ஒவ்வொரு வியாபாரப் பதிவு எண்ணும் ஒரு பான் எண்ணுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. ஒவ்வொரு பான் எண்ணும் இனி ஆதார் எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். வங்கி எண்ணும் இந்த இரண்டும் இன்றி இனி பதிவு செய்ய முடியாது. ஆக கம்ப்யூட்டர் வழியாக ஒரு பான் எண்ணையோ, ஆதார் எண்ணையோ உள்ளிட்டால், உங்கள் மொத்த ஜாதகமும் வந்து விடும். ஆனால் அதற்கு குறைந்தது அடுத்த ஐந்தாண்டுகளாவது ஆகும்.