சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்
ஈராக் பிரச்னைக்கு இன்னும் எந்த முடிவும் தெரியாத இந்த நேரத்தில், அமெரிக்கா சவுதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு (இஸ்ரேல் எகிப்து உட்பட) ஆயுத பரிவர்த்தனை உதவி செய்ய முன்வந்திருக்கிறது. அதிக பட்ச உதவியாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இஸ்ரேலிற்குப் போகிறது. சவுதிக்கு 20 பில்லியன், எகிப்திற்கு 13 பில்லியன்.
ஆமாம், இப்போது இந்த நாடுகளின் பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் வந்துள்ளது?
அமெரிக்கா தன் தலையை இனி வரும் மத்தியக் கிழக்குப் போர்களுக்குள் கொடுக்காமல், அதே சமயம் அதன் விருப்பப்படியே ஒரு அச்சுறுத்தல் மிக்க அமைதியற்ற பிராந்தியமாக மாற்றித் தொடர்ந்து வைத்துக் கொள்ள இந்த ஆயுத விற்பனை உதவப் போகிறது. அதன் முக்கிய நோக்கங்கள் இரண்டு:
(1) ஈரானை எப்போதும் போர் பற்றிய ஆயத்தத்துடனும் பயத்துடனும் வைத்துக் கொள்வது
(2)சன்னி மற்றும் ஷியா முஸ்லிம் இனத்தாரிடையே நிரந்தரமான ஒரு சண்டையைத் தூண்டிவிட்டு ஏற்படும் இனக்கலவரத்தை மையமாக வைத்து, முஸ்லிம்களுக்கிடையேயான போரை உருவாக்கி, பின் பாதிக்கப்பட்ட அதன் ஆதரவு நாடுகளுக்கு உதவுவது.
இதனால் அமெரிக்காவிற்கு ஏற்படப்போகும் பலன்கள் என்ன?
1. ஈராக் நிலவரங்களால் பெரிதும் பலனடைந்திருப்பவை மத்தியக் கிழக்கு நாடுகள், ஈரான் உட்பட. அந்த நாடுகள் எண்ணெய் விலை உயர்வால் சேர்ந்துபோன பணத்தை மூட்டைகட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றைத் திரும்பப் பெற ஒரு வழி, இந்த ஆயுதவிற்பனை. அமெரிக்கப் பொருளாதாரம் ஆயுத விற்பனையை ஒரு அளவிற்கு நம்பியுள்ளது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், இஸ்ரேலிற்கு 30 பில்லியன் பெறுமான ஆயுதங்கள் இராணுவத் தளவாட உதவியாக வழங்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சவுதிக்கு விற்பனை, ஆனால் இஸ்ரேலிற்கு உதவி.
2. மத்தியக் கிழக்குப் பகுதி பெரும்பாலான நேரங்களில் பதட்டமான பகுதியாகவே இருக்கும். அதன் பொருட்டு, ஒவ்வொரு குண்டு வெடிக்கும் போதும் எண்ணை விலை ஏறும். அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்பவர்கள் தனிமைப்படுத்தப் படுவர் (ஈரான் மற்றும் வெனிசூலா). அமெரிக்க பொருளாதாரத்தின் வேகவீழ்ச்சி இந்த எண்ணெய்ப் பொருளாதாரத்தின் வழியாக தாமதமாக்கப்படும்.
3. ஈரான் மேல் போர் தொடரப்போவது பெரும்பாலும் அமெரிக்காவாக இருக்காது. அது பிற்பாடு உதவிக்கு வரும். எந்த நாடு அந்த போரை முட்டாள்தனமாகத் தொடங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சவுதிஅரேபியாவாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
4. அமெரிக்கா மற்றுமொரு போரைத் தொடங்காது என்று தாராளாமாக அமெரிக்கப் பொதுமக்(கு)களுக்கு அறிவித்து விட்டு நல்லபிள்ளை பெயர் வாங்கிக் கொள்ளலாம்.
மத்தியக் கிழக்கில் ஆரம்பிக்கும் இந்த விவகாரம் எகிப்து வரை போகப் போகிறது, குர்திஸ் இன மக்கள் வடிவத்தில். அதற்காகவே எகிப்துக்கும் 'உதவி'யளிக்கப்படுகிறது. குர்திஸ்தான் மக்கள் ஏற்கனவே போதுமான அமெரிக்க 'உதவி' பெற்றுத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு ஆயுத விற்பனையை நம்பியே இருக்கும் போது, உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை நிர்மூலமாக்கி அதிலுள்ள எத்தனையோ மக்களைக் கொன்றுபோடுவது அவர்களைப் பொறுத்தவரை தொழில் தர்மமாகிறது.
அதற்குப் பலிகடா, இப்போதைக்கு மத்தியக் கிழக்கு - அடுத்த பத்து வருடங்களுக்கு.