உயரப் பறக்கும் எண்ணெய் விலை- 1

கச்சா எண்ணெய் விலை ஆகாயத்திற்குப் பறக்கிறது. இந்த தொடர் விலையேற்றம் நீடித்தால், விரைவில் நாமெல்லாம் நடந்துதான் போக வேண்டும். நடந்து போகலாம், ஆனால், வர்த்தகப் பொருள்கள் கடைகளுக்கு அதேவிலையில் வந்து சேருமா என்று உத்தரவாதம் தரமுடியாது. ஏறிய பொருள் விலை இறங்கியதாக சரித்திரமில்லை. கொள்முதல் மொத்த சந்தையில் விலை ஏறலாம், இறங்கலாம், சாதாரண உபயோகிப்பாளருக்கு என்றாவது பொருட்கள் விலை இறங்கியிருக்கிறதா? கிடையாது. தள்ளுபடி, இலவசங்கள் என்று வேண்டுமானால் தொடரும், விலை மட்டும் இறங்காது.

இந்தோனேஷியாவில் பெட்ரோல் விலை உயர்த்தியதற்கு மக்கள் ரோட்டில் இறங்கிப் போராடுகிறார்கள். அதிபர் யுதயானோ விலையேற்றத்தைச் சரிக்கட்ட ஏழைமக்களுக்கு ரொக்க உதவி அளிப்பது பற்றியும், விலையேற்றுவதன் அவசியத்தைப் பற்றியும், ஓபெக் என்ற அமைப்பிலிருந்து வெளியேறுவதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். மலேசியாவில் அக்கம்பக்கத்து நாடுகளுகளின் கார்களுக்கு பெட்ரோல் கூடுதல் விலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னமும் பெட்ரோல் விலை உயர்த்துவது பற்றி அறிவிக்கப்படவில்லை. அறிவித்தபின் என்ன என்ன கலாட்டாக்கள் நடக்கும் என்று இனிதான் தெரியும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. பெட்ரோலியப் பயன்பாடு திடீரெனக் கூடி விடவில்லை. ஆனால், எண்ணெய் விலை மட்டும் வானளாவப் போய்க் கொண்டிருக்கிறது.

அது ஏன்?

இதைப் பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

முதலில் எண்ணெய் உற்பத்தியையும் பயன்பாட்டையும் இப்போது பார்க்கலாம். கீழ்க்கண்ட புள்ளி விவரங்களைக் கவனமாகப் பாருங்கள்.

கச்சா எண்ணெய் உற்பத்தி



கச்சா எண்ணெய்ப் பயன்பாடு

கச்சா எண்ணெய் விலையேற்றம்.

source: worldoil.com


இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எண்ணெய் உற்பத்தியும் பயன்பாடும் சீராகவே இருக்கிறது. ஆனால் விலையேற்றம் மட்டும் அதற்கேற்ற அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக ஏறியிருக்கிறது. ஆக இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது.

இந்த விலையேற்றத்திற்கு பொதுவாகச் சொல்லப்படும் காரணம் என்ன வென்றால், இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமான கார்கள் விற்கப்படுகிறது. அவர்கள் மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே கார்களை ஓட்டவும் மின்சாரம் தயாரிக்கவும் அதிக அளவில் எண்ணெய் பயன்படுகிறது, அதனால் கச்சா எண்ணெய்த் தேவை அதிகரிக்கும் என்பது தான். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?

கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பாருங்கள். உலகளாவிய கார் உற்பத்தி பற்றியது.

source: Scotiabank.com


இதில் தெரிவது என்னவென்றால், கார் விற்பனை திடீரென உயர்ந்து விடவில்லை. ஆக இந்தக் காரணம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

அதே மாதிரிதான் மின்சாரத் தயாரிப்பும். இந்தியாவும் சீனாவும் அதிக அளவில் பயன்படுத்துவது நிலக்கரியையும் காற்றாலை மற்றும் நீர்மின்சார நிலையங்களையும் தான். கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை.

ஆக, எண்ணெய் விலையேற்றத்திற்கு, அதன் தேவைகள் கூடியதால் விலை ஏறியது/ஏறுகிறது என்ற கூற்று முற்றிலும் பொய்யாகிறது.

அப்படியென்றால், எண்ணெய் விலையை யார் ஏற்றுகிறார்கள்? எப்படி அது ஏறுகிறது? ஏறுகின்ற எண்ணெயை வாங்க பணம் எங்கிருந்து வருகிறது?

இதையல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

3 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

வாழ்த்துக்கள் நண்பரே,

மிகச் சிறப்பானதோரு வேலையை செய்துள்ளீர்கள். உணவு பஞ்சம் குறித்த கட்டுரைக்கும், எண்ணைய் விலை உயர்வு குறித்த கட்டுரைக்கும் மிக்க நன்றி.

இதன் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
முக்காலமும் உணர்ந்த முனிவன்

said...

நண்பர் திருவடியான்,

அருமையானதொரு கட்டுரையினை மிகவும் சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள். எழுத்து நடையும் ஆதாரங்களும் நன்றாக இருக்கின்றது.

இதன் தொடர்ச்சியினை எப்போது பதியவுள்ளீர்கள்?

பெட்ரோல் விலையேற்றம் குறித்த அவதூறுகளை அமெரிக்க அடிமை டாலர் செல்வன் என்பவர் தனது 'தமிழ்மணி'தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே கரூதுகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

டாலர் செல்வன் என்பவர் பெயரிலேயே தான் ஒரு நாட்டிற்கு அபிமானியென்று காட்டிக் கொள்கிறார். உண்மை என்பது வேறு, அபிமானத்தால் வரும் அபிப்பிராயம் என்பது வேறு. அதே சமயம் அவர் புதிய ஜனநாயகத் தோழர்களின் பதிவிற்கு பதில் சொல்லும் முகமாகவே அதை எழுதியிருக்கிறார். எழுத்துரிமையை மதிக்கும் நாம், அவர் கருத்துக்களையும் மதித்துக் கேட்போம். அதே சமயம் அதை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்கிற உரிமையும் நமக்கு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். முன்பெல்லாம், மையிலே நனைத்து பேப்பரிலே அச்சடித்தால் பொய்யும் உண்மையாகும் என்று சினிமாப் பாட்டொன்று உண்டு. இப்போதெல்லாம், இணையத்தில் போய் ஒரு கருத்தை வெளியிட்டால் உண்மையாகிவிடும் என்று பாவனை இருக்கிறது.

நான் வெளியூர்ப் பயணம் சென்றிருந்ததால், நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இனி ஒன்று செய்யலாம். ஒன்று தொடராக எழுதுவதைத் தவிர்த்து ஒரே மூச்சில் ஒரே பதிவாகப் போடுவது. அல்லது, மொத்தப் பதிவையும் எழுதிய பின்பே, பகுதிகளாக அவற்றைப் பிரித்து வெளியிடுவது. பார்க்கலாம்.