Darfur and Steven Spielberg - A political Olympics

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேஜிங் ஒலிம்பிக் விளையாட்டு ஆர்ட் டைரக்டர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்களில் சூடான செய்திகள் வந்திருக்கிறது. விலகியதற்குச் சொல்லப்பட்ட காரணம் வித்தியாசமானது. சூடானின் டார்ஃபுர் பகுதியில் இனக்கலவரம் நடப்பதாகவும் அதைத் தடுக்க சீனா இதுவரை முயற்சி செய்ய வில்லை என்றும் அதற்கான முயற்சிகளில் சர்வதேச அமைப்புகளை இறக்கி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கும் தான் இந்த வித்தியாசமான விளம்பர குட்டிக்க(ா)ரணம். உலகையே தனது உள்ளங்கைக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அமெரிக்க அண்ணாச்சிக்கு என்ன ஆயிற்று. சீனா தலையிடவில்லை என்று சொல்லுவதும், இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து என்று போராட்டம் (Save Darfur movements) நடத்துவதும், நம்மூர் பழமொழி மாதிரி.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன என்று கேட்கத் தோன்றினால், அது மிகச் சரி.

ஆடுகின்ற குடுமிக்குப் பின்னால் இருப்பது என்ன? ஏன் அப்படி அந்தக் குடுமி ஆடுகிறது என்பதைத்தான் நாம் இப்போது அலசப் போகிறோம்.

சூடான், ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சில டஜன் நாடுகளில் பரப்பளவில் பெரிய நாடு. எகிப்து நாட்டிற்கு தெற்கே ஆரம்பிக்கும் சூடான் நாடு, சிறியதும் பெரியதுமாக குறைந்தது எட்டு நாடுகளை தனது எல்லையில் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் அளவிற்குப் பெரிதான சூடான் நாட்டின் தெற்குப் பகுதியான டார்ஃபுர் தான் தற்போதைய பிரச்னைப் பகுதி. டார்ஃபுரை ஒட்டியுள்ள நாடுகள் சாட் (Chad) மட்டும் எரிட்ரியா (Eritrea). மறுபக்கம் எத்தியோப்பியா (வயிறு ஒட்டிப்போய், வாயில் ஈ மொய்க்கும் கறுப்பினக் குழந்தை ஞாபகத்துக்கு வரவேண்டுமே..). சூடானில் வழக்கம் போல பத்துக்கும் மேற்பட்ட பெரும் கறுப்பினக் குழுக்கள் (நம்ம ஊர் சாதிகள் மாதிரி) இருந்தாலும் அவர்களின் பொதுவான பேச்சு வழக்கு மொழி, அரபு மொழி. அது போக இந்தியா போல அத்தனை குழுக்களுக்கும் பிரத்தியேக மொழி ஒன்று உண்டு.

கார்டோம் (Khartoum) நகர்தான் சூடானின் தலைநகரம். 1956ல் பிரி்ட்டனிடமிருந்து போராடிச் சுதந்திரம் வாங்கியபின், ஒரு மதச் சண்டை நடந்தது (1947க்குப் பின்னரான இந்து முஸ்லிம் சண்டை நினைவுக்கு வரலாம்... பிரிட்டன் அதே முறையை ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்தியிருக்கிறது). இது கிறித்துவ முஸ்லிம் சண்டை. ஒருவாராக கிறித்துவ அமைப்புகள் முன்வந்து சமாதான ஒப்பந்தமொன்றைக் கையொப்பமிடச் செய்து, ஒரு பத்து வருடத்திற்கு நாடு அமைதியாக இருந்தது. இந்த மதச் சண்டையில் நாம் கவனிக்க வேண்டியது முக்கியமானது ஒன்றுள்ளது. மதச்சண்டை, முஸ்லிம் பெரும்பான்மை வடக்கு சூடானுக்கும் கிறித்துவப் பெரும்பான்மை தெற்கு சூடானுக்கும்தான் நடந்தது. பத்துவருட அமைதிக்குப் பிறகு, 1983ல் ரஷ்யாவின் உதவியுடன் SPLA என்ற அமைப்பு மார்க்ஸிஸ்ட் அமைப்பாக பரிணமித்தது. ரஷ்ய ஆயுதங்கள் ஹெலிகாப்டர்கள் என்று தாராளமாகப் புழங்கின. ஒரு கால கட்டத்தில் ரஷ்யா ஆளும் கட்சியுடன் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கையின் படி தெற்குப் பக்க SPLAவின் ஆதரவை நிறுத்திக் கொள்ள, SPLAவிற்கு ஆயுதம் கொடுக்கும் பண உதவி அளிக்கும் நாடுகள் தேவைப்பட்டன. அமெரிக்கா முன்வர, மீண்டும் உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்தது. 2002 வாக்கில் தீவிரவாதக் குழுக்களுக்கு பயிற்சியளிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட முன்வந்தது. சாட் மற்றும் எரிட்ரியா நாடுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயுதப்பயிற்சி மொஸ்ஸாத் மூலம் அளிக்கப்பட்டது. முதலில் ரஷ்யா, பிறகு அமெரிக்கா மற்றும் பிரிட்டன், அப்புறம் இஸ்ரேல் என்று இத்தனை நாடுகள் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், அரசுத் தரப்பினருக்கு ஆதரவு தரமுன் வந்தது யாரென்றால் சீனாவும் இந்தியாவும் மலேசியாவும் மற்றும் ரஷ்யாவும்.

அது சரி இவ்வளவு நாடுகளுக்கு இங்கென்ன வேலை?

- தொடரும்.

3 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

எண்ணெய், எண்ணெய்..

நல்லா அலசிருக்கீங்க..

இது குறித்து என்னோட பதிவு இங்கே.

ஸ்பீல்பர்க் ஏன் ஒலிம்பிக்ஸிலிருந்து விலகினாரு?

said...

//அரசுத் தரப்பினருக்கு ஆதரவு தரமுன் வந்தது யாரென்றால் சீனாவும் இந்தியாவும் மலேசியாவும் மற்றும் ரஷ்யாவும்.

அது சரி இவ்வளவு நாடுகளுக்கு இங்கென்ன வேலை?
//

Oil, oil...

Seeing you after a long time. Welcome again.

said...

அப்போ இது ஒரு பெரிய கதையா?... சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க...