பெனாசீர் பூட்டோ படுகொலை
27 டிசம்பர் 2007 இன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான திருமதி பெனாசீர் பூட்டோ தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் தற்கொலைத் தாக்குதலில் பலியானார். அவருடன் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பெனாசீரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்படுவது நம் பிராந்தியத்திற்குப் புதிதல்ல என்றாலும் இந்தப் படுகொலை நடந்திருக்கும் சூழல் மிகப் பதட்டத்தை ஏற்படுத்துவதாகவும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு நகம் கடிக்கும் அளவிற்கு கவலையளிப்பதாகவும் இருக்கிறது.
முதலில் சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடலாம்.
1. இதை யார் செய்திருக்கக்கூடும்? அதனால் அவர்கள் பெறப்போகும் லாபம் என்ன?
2. மேற்கத்திய நாடுகளுக்கு பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு தற்போது அப்படி என்ன சூழல்?
3. ஜனவரி 8 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் தேர்தல் நடைபெறுமா அல்லது செளகரியாமாக மீண்டும் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடுமா?
பிண்ணனி
லண்டனில் வைத்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறையினர் முன்னிலையில் ஏற்பட்ட மத்தியஸ்தத்திற்குப் பின்னர் முஷ்ரப் மற்றும் பெனாசீர் தரப்பு சமாதானமாகப் போக, பெனாசீர் சட்ட ரீதியான எதிர்ப்புகளின்றி நாடு திரும்ப முடிந்தது. அக்டோபர் 18 அன்று நடைபெற்ற மாபெரும் தாக்குதலில் குறைந்தது 300 பேருக்கும் மேல் பலியாயினர். அந்தச் சம்பவம் அடிப்படையில் ஒரு நெருடலை முஷ்ரப் மற்றும் பெனாசீர் தரப்பினரிடைய ஏற்படுத்தி அவநம்பிக்கைக்கு வழி வகுத்தது. பெனாசீர் முஷ்ரப்பையும் முஷ்ரப் பெனாசீரையும் நம்பாமல் செயல்பட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் துபாய் சென்ற பெனாசீர், நெருக்கடி நிலை அமல்படுத்தப்படலாம் என்ற வதந்தியின் பேரில் அடுத்த நாளே நாடுதிரும்பிய சம்பவம் இதற்கு உதாரணம். உண்மையில் முஷ்ரப்பிற்கு அப்படி ஒரு எண்ணமிருக்கவில்லை.
பாகிஸ்தான் இராணுவத்திற்குள்ளேயே பல்வேறு தரப்புகள் இருக்கின்றன். சமீபத்திய சிவப்பு மசூதி தாக்குதலுக்குப் பின் நிறையப் பேர் இராணுவத்திலிருந்து விலகிய சம்பவங்கள் நடந்தன. ஆப்கானிஸ்தான் எல்லையில் பலூச், தாலிபான் மற்றும் அல்கொயிதா தரப்பினர் வலுப்பெற்று வரும் இந்த நிலையில், அவர்களைத் தடுக்க அதிகாரப்பூர்வமான தாக்குதல் நடத்த, மேற்கத்திய நாடுகளை அனுசரித்துச் செல்லும் தலைவர்கள் தேவைப்பட பெனாசீர் முக்கியத்துவம் பெற்றார். இதை அறிந்த தாலிபான் மற்றும் அல்கொயிதா தரப்பினர் பெனாசீரையும் தமது முக்கிய எதிரியாக அங்கீகரித்து வைத்திருந்தனர்.
கடைசிச் செய்தியாக அல்கொயிதா இதற்குப் பொறுப்பேற்றதாக ஒரு இணையத்தளம் http://www.adnkronos.com/AKI/English/Security/?id=1.0.1710322437 தெரிவிக்கிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது போகப்போகத் தெரியும்.
மேற்கத்திய நாடுகளின் பதற்றம்
ஆசியப் பிராந்தியத்தில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இராணுவத் தலைமையைக் கொண்ட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை அணுகுண்டை பத்திரமாக தீவிரவாதிகள் கையில் சென்றுவிடாமல் பாதுகாக்க முடியும். அதே சமயம், சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, பாகிஸ்தானிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இராணுவ ஆட்சியோ அல்லது ஜனநாயக ஆட்சியோ இல்லாத பட்சத்தில், அணுகுண்டை தீவிரவாதிகள் கையில் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள எடுக்க வேண்டிய செயல் திட்டங்களைப் பற்றித் தான் தற்போது நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா ஏற்கனவே முஷ்ரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, அணுகுண்டுகளைப் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி விடுவது அல்லது அதற்கு அமெரிக்காவே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வது. இது எதுவும் முடியாமல் போகும் பட்சத்தில் இந்தியாவின் உதவி கோரப்படலாம் என்பது ஊகம். (இந்த ஊகம் சரியாகப் படவில்லை.. Paranoia???)
முஷ்ரப்பின் அமெரிக்க அடிபணிதல் கொள்கை பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கும் நிலையில், முஷ்ரபபின் சமீபத்திய மசூதித் தாக்குதல், நீதிபதி மாற்றம் போன்ற சூழலில் ஒரு மாற்று சக்தியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்தல் நடைபெறுமா?
தேர்தல் நடைபெறுவது தள்ளிப் போகலாம் என்றுதான் தற்போது கணிக்க முடிகிறது. நவாஸ் ஷரீப் ஏற்கனவே தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஸ்டன்ட் அடித்துவிட்டு வேறு வழியில்லாமல் தற்போது தேர்தல் களத்தில் உள்ளார். எனவே, நாட்டின் ஸ்திரமற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, இராணுவ ஆட்சி தொடர்ந்து நடைமுறையில் இருக்க இது வாய்ப்பாக அமையும்.
தொலைக்காட்சியில் பொதுமக்களின் கோபம் பாகிஸ்தானின் ரோடெல்லாம் தீயாக எரிவதைக் காண முடிகிறது. பாகிஸ்தான் அமைதிப்பாதையை நோக்கித் திரும்பும் காலத்தை நோக்கி மெளனமாக காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. கத்தியெடுத்தவன் கத்தியால் மடிவான் என்ற பெருமொழி பாகிஸ்தான் விஷயத்தில் மிகச்சரியாக இருக்கிறது.