தீப விளையாட்டும் திபெத்தும்

ஒலிம்பிக் தீபம் செல்லும் வழியெல்லாம் போராட்டம். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு முக்கியமான கால கட்டம். ஒரு நாடு பொதுவாக மற்ற நாடுகளை பங்குபெறச்செய்து பெருமையுடன் நடத்தும் புராதான உலக விளையாட்டை மற்ற நாடுகள் இவ்வளவு அலட்சியமாக இதற்கு முன் நடத்தியதில்லை.

தீபம் அணைவதற்கு அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் ஒரே காரணம், திபெத். குறிப்பாக, சீனாவின் மீதான திபெத் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்.

நாடு கடந்து அகதிகளாக பெரும்பாலோர் வசிக்கும் திபெத்தியர்களுக்கு ஊக்கம் தருவது யார்? ஒவ்வொரு நாட்டிலும் போலீஸ் முடிந்தவரை தீபம் அணையும் வரை கண்டும் காணாமல் இருப்பதற்கு பின்னணியில் இருப்போர் யார்? ஒலிம்பிக் போட்டிக்கு முடிந்த வரையில் இடைஞ்சல் தர சிலர் பிரயத்தனப்படுவது ஏன்? இப்படியெல்லாம் உங்களுக்கு மனதிற்குள் கேள்வி இருந்தால், வாருங்கள், அலசித் தெரிந்து புரிந்து கொள்ளலாம்.

உலகின் மிக உயரமான மலை உச்சி எவரெஸ்ட் இந்தியாவில் இருப்பதாக எனக்குப் பாடப் புத்தகத்தில் படித்ததாக நினைவு. உண்மையில், எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான பகுதிக்குள் இருக்கிறது. ஆக இந்தியாவிற்கும் எவரெஸ்டிற்கும் சம்பந்தமில்லை. திபெத்தை சீனா உரிமை கொண்டாடுவதால், நியாயமாக எவரெஸ்ட சிகரம் சீனாவில்தான் இருக்கிறது. திபெத்தில் தான் இருநூறு கோடிப் பேருக்கு மேல் உள்ள நாடுகளில் ஓடும் 7 வற்றாத ஜீவ நதிகள் உற்பத்தியாகின்றன. தலைக்காவிரியைக் கொண்டிருக்கும் கர்நாடகாவிடம் ஒரே நாட்டிற்குள் இருந்து கொண்டு நாம் படும் பாடை நினைத்துப் பார்த்தால், திபெத்தை உரிமை கொண்டாடும் நாடு, நாளைக்கு ராயல்டி கேட்டால் என்ன நடக்கும்? வேறென்ன, நேரடியாக உலகப் போர்தான்.

மேற்படி காரணங்களில் இந்திய வெளியுறவுத்துறை புத்தர் தோன்றிய நாடு என்கிற உரிமையில் தலாய் லாமாவிடம் மிகவும் நெருக்கம் வைத்துக் கொண்டது. அமெரிக்கா, அங்கு ஒரு படைத்தளத்தை நிறுவிக்கொள்ள தனிநாடு கோரிக்கையை முன் வைக்க, இரண்டு நாடுகளுக்கும் சீனா ஆப்பு வைக்க தலாய் லாமா தப்பித்து ஓடினார். இந்தியா, தர்மஸாலா என்ற இடத்தில், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. இன்று வரை அவர் தனது மறைமுக திபெத்திய அரசை அங்கிருந்து தான் நடத்துகிறார். அதே சமயம், 1960களிலிருந்தே சிஐஏ விடமிருந்து மாதத்திற்கு 15000 டாலர் வரை ஊதியமாக பெற்று வந்திருக்கிறார்.

ஆக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் திபெத்தின் மீது ஒரு கண். இந்தியாவிற்கு எல்லை சார்ந்த பிரச்னை. அமெரிக்காவிற்கோ, சீனாவிற்கு தலைவலி கொடுக்க ஒரு சரியான களம். அமெரிக்காவின் NED (National Endowment for Democracy) என்ற சிஐஏவின் மறைமுக அமைப்பு ஒன்று பல்வேறு நாடுகளில் எதிர்க்கட்சிகளையோ, சிறு சிறு குழுக்களையோ தூண்டி அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. நேரடியான பிரச்னைகள் இல்லாமல், தனித்தமிழ்நாடு கேட்டு ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போதெல்லாம் என்னவோ இந்த மாதிரியான அமைப்புகள் மறைமுகமாக பொருளாதார உதவி செய்கின்றனவோ என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றன. சமீபத்தில் மியான்மரில் நடந்த புத்த பிக்குகளின் போராட்டம் உட்பட, சீனாவின் டியான்மென் சதுக்கத்தில் ராணுவ கவச ஊர்தி ஒன்றின் முன் மாணவன் ஒருவன் உயிர் விட்ட சம்பவம், சீனாவின் பாலுன் கோங் (Falun Gong) என்ற அமைப்பை வெளிநாடுகளில் வளர்த்து வருவது, ஜார்ஜியாவில் ரஷ்யாவிற்கு எதிராகப் போராட்டம் என்று (இந்தியாவில் உள்ள சம்பவங்களை இங்கு குறிப்பிட்டால், பல பேர் பொங்கி எழக்கூடும். எனவே, வேண்டாமே, ப்ளீஸ்...) இந்த அமைப்பின் கைங்கர்யங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் அமெரிக்காவின் பிந்தைய 50 ஆண்டு வெளியுறவுக் கொள்கையின் பிரதானக் கொள்கையாக இருக்கும் அந்தக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது

“If you control the oil, you control entire nations…” - Henry Kissinger

உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளில் அதிகமாக எண்ணெய் வளத்தை நம்பி உள்ள நாடு, சீனா. சீனாவின் வர்த்தகரீதியான வளர்ச்சி அதிகரித்த போதெல்லாம் அமெரிக்கா கவலைப்படாமல் இருந்ததற்குக் காரணம். யார் எண்ணெய் வாங்கினாலும், அமெரிக்க டாலரில்தானே வாங்கியாக வேண்டும். டாலர் அச்சிடும் செலவிற்குள் எண்ணெயை ஏறக்குறைய இலவசமாக அமெரிக்கா பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் என்ற கணக்கில் இது நாள் வரை பொழுது ஓடியது. புத்திசாலித்தனமாக சீனா என்ன செய்தது என்றால், அந்நியச் செலாவணியாகக் கிடைத்த டாலரையெல்லாம் அமெரிக்காவிலேயே முதலீடு செய்தது. அதாவது பாண்டுப் பத்திரங்களாகவும் மற்றும் ஏனைய அமெரிக்க நிதியமைச்சு சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்தது. அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு எதுவும் ஏற்றுமதி ஆகாததால், ஏறக்குறைய 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை இன்றைக்கு சீனா வைத்திருக்கிறது. சீனா அவற்றைக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்க முன்வந்தால், அமெரிக்கர்கள் எல்லாம், 1997ல் இந்தோனேசியாவில் ருபியாவை மூட்டை கட்டிக்கொண்டு போய் டீக்குடித்த மாதிரி அமெரிக்க டாலரை மூட்டை கட்டி எரித்துக் குளிர் காயவேண்டியது தான். ஏனென்றால், அடுப்புக்கரியை டாலர் கொடுத்து வாங்கி எரிப்பதை விட நேரடியாக டாலரை எரித்தால் காசு மிச்சமாக இருக்கும். இது போக மத்திய கிழக்கு நாடுகள், எண்ணெய் வர்த்தகத்தை ஈரோவில் நடத்தப் போவதாக பேசத் தொடங்கியிருக்கின்றன. சதாம் உசேன் அப்படிப் பேசப் போய்த்தான், இறைவனடி போய்ச் சேர்ந்தார். ஈராக் மக்கள் அனுபவிக்கின்றனர். ஈரான் சந்தடிச் சாக்கில் எண்ணெய்ச் சந்தை ஒன்றை ஆரம்பித்து அதில் ஈரோவை முன்னிறுத்தி வர்த்தகத்தை ஆரம்பித்தே விட்டது. ரஷ்யா அதன் முதல் கஸ்டமர். விரைவில், அபுதாபிக்கருகில் உள்ள வளைகுடாவில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கக் கூடும்.

சீனா ஒழுங்காக அமெரிக்க டாலரில் எண்ணெய் வாங்கிக் கொண்டிராமல், தாமே எண்ணெய் தோண்டி எடுத்துக் கொள்ளப் புறப்பட்டது அமெரிக்காவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கிஸ்ஸிங்கரின் அடிப்படைக் கொள்கையையே அது ஆட்டிப் பார்க்கிறது. அதனால்தான் சீனா எண்ணெய் தோண்டிக் கொண்டிருக்கும் டார்புர் நகரில் மனித உரிமைப் பிரச்னை என்று உலகளாவிய விவாகரங்களாக கிளப்பிக் கொண்டிருந்தனர். இந்தியாவிற்கும் இதே பிரச்னை இனி வரலாம். அதென்னமோ தெரியவில்லை, எங்கெல்லாம் இந்தியாவும் சீனாவும் போட்டி போடுகின்றனவோ, அங்கெல்லாம் சீனாவே அதி முக்கியமான பாகத்தைப் பெற்றுக் கொண்டு, அவ்வளவு சிறப்பில்லாத பாகத்தை இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்து வருகின்றது. இதோ அருகாமையில் இருக்கும் மியான்மரே ஒரு உதாரணம். [இந்திய வெளியுறவுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம்.] இது ஏன், மத்திய கிழக்கிலிருந்தும், காஸ்பியன் பகுதிகளிலிருந்தும் தரை மார்க்கமாக சீனாவிற்கு குழாய் வழி எண்ணெய் எடுத்துச் செல்லும் திட்டம் முழு வடிவம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அக் குழாய் வழி செல்லும் உஸ்பெகிஸ்தான், கஸகஷ்தான், கிரகிஸ்தான் போன்ற பகுதிகள் ரஷ்யாவை உடைத்து தனி நாடுகளாக்கப்பட்டன. அவை அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாகவும் ஆயின.

திபெத் போதாதென்று, திபெத்திற்கு அருகாமையில் சீனாவிற்குள் இருக்கும் தனியாட்சிப் பிரதேசத்தில் வசிக்கும் சீன முஸ்லிம்களான உய்குர் இன மக்களை பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கும் கைங்கர்யத்தையும் செய்து வருகிறது. சமீபத்தில் கூட விமானம் ஒன்றைக் கடத்தியதாக சிலர் சீனாவில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆகவே, அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கு சீனாவால் பங்கம் வரும் என்ற பயத்தாலும், அதிகப்படியான டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடாக சீனா இருப்பதாலும், அமெரிக்காவிற்கு சீனாவை மிரட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான பல பிரச்னைகளைப் பார்த்த சீனா நாடு, பல்லைக் கடித்துக் கொண்டு ஒலிம்பிக்ஸை எப்படியாவது அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி விட மிக உறுதியாக இருக்கிறது. இவ்வருடக் கடைசியில், அதாவது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் முடிவுற்ற கையோடு, உலகளவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மாற்றம் வரலாம். அதில், சந்தேகமில்லாமல் பாதிக்கப்படப்போவது அமெரிக்கா தான். அதே சமயம் அந்த மாற்றத்தால் பயனடையப் போகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

இன்னும் கொஞடசம் ஆழமாக போய் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் அமெரிக்கா நடத்தி வரும் கண்ணுக்கு தெறியாத புரோக்சி வார்கள் பற்றியும் எழுதியிருக்கலாம்.

ஆனால் நம்ம நாட்டில் அமெரிக்காவிற்கு தாங்கி பிடிக்கும் அறிவு கெட்ட அரசியல்வாதிகளுக்கு இந்த விசயம் வெளங்கினால் நல்லது. எனக்கென்னமோ இவனுங்களும் தலாய் லாமா வாங்கின மாதிரி டாலர்ல வாங்குறானுகளோ என்னவூ...யாருக்கு தெறியும் பூங்க உங்கள மாதிரி யாராவது இன்னொரு கட்டுரையில் இதப்பத்தி இன்ன இன்னார் இவ்வளவு வாங்கினார் என்று எழுதினால்தான் வெளிச்சத்திற்கு வரும் அப்பயும்கூட அரசியல் சதி என்று மழுப்பிவிடுவார்கள்.

என்னமோ போங்க...நல்ல கட்டுரை வாழத்துக்கள்.

said...

I could see only pro China / left view in this. Not nutral at all. To support you are going too much anti Us or even AntiIndia.
regards