உலகமயமாகும் உணவுப் பஞ்சம்



இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம். பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.

ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.

மத்தியகிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன. துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது. இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.

இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).

அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது. இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.

இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது. அதைப்பற்றி அடுதத பதிவில் விரிவாக பார்க்கலாம்.


(தொடரும்)

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

மிக‌வும் அருமை.

அடுத்த‌ ப‌குதியை எதிர்பார்த்து,

ச‌ஹ்ரித‌ய‌ன்

said...

//////இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது///////

மிகச் சரியான நோக்கு,நானும் இவ்விதமே சில நாட்களாக யோசிக்கிறேன்.
ஏதோ வேண்டாத விவகாரம் பின்னணியில் இருக்கிறது.