பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 1

சமீபத்திய பெட்ரோல் விலையேற்றங்களின் மூலம் மக்களின் வயித்தெரிச்சலை ஏகத்திற்கும் சம்பாதித்திருக்கும் மத்திய அரசு, அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்து தான் செய்கிறதா என்பது சுத்தமாகப் புரியவில்லை.

சந்தை விலை நிர்ணயம் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்திற்கேற்ப உள்ளூர் விலையை நி ர்ணயிப்பது என்ற அரசின் முடிவு கடந்த ஜூன் மாதம் (2010) எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மாற்றி (ஏற்றி) வந்தார்கள். தற்போது ஒரே மாதத்தில் இருமுறை விலை ஏற்றப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது என்பது பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் எப்படி தினம் ஒரு விலை விற்கிறது, அது என்ன காய்கறியா, தினம் ஒரு விலை விற்பதற்கு.

அதற்கு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உற்பத்தியாகிறது. எங்கு யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச சந்தையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது இந்திய மக்கள் ஏன் ஒவ்வொரு முறையும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது இதை எல்லாம் பார்க்க வேண்டும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி ஒபெக் (OPEC) என்னும் எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கூட்டமைப்பிற்குள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்கின்றன, ஆனால் அவை ஒபெக் கூட்டமைப்பில் இல்லை. ஒபெக் அமைப்பு 2002 ஆம் ஆண்டு வரை உலக விலை நிர்ணயம் செய்து வந்தது. அது வரை கச்சா எண்ணெயின் விலை 20-40 டாலருக்குள் தான் இருந்தது. 2002க்கு பிறகு இன்டர்காண்டினென்டல் எக்சேஞ்ச் (InterContinental Exchange - ICE) என்ற அட்லாண்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எண்ணெய் தொடர்பான வர்த்தகச் சந்தைக்கான ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கி, ஒபெக் அமைப்பிலிருந்து விலை நிர்ணயிக்கக்கூடிய கட்டுப்பாடு ஐசிஈ எனப்படும் அந்த அமைப்பிற்கு சென்றது. ஆரம்பத்தில் அதற்கு உடன்படாத ஒபெக் அமைப்பு, ஆன்லைன் வர்த்தகம் மூலம் இரு மடங்கு வரை கச்சா எண்ணெய்க்கு விலை கிடைக்கத் தொடங்கியதன் விளைவாக முழுக்க முழுக்க ஐசிஈ யின் மூலம் விலை நிர்ணயம் செய்வதை ஏற்கத் தொடங்கின. இந்த ஐசிஈ யின் பங்கு என்ன அதனால் யாருக்கு உண்மையான லாபம் என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு பின்னோட்டம் பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் ஆதிக்கம் என்பது பல லட்சக் கணக்கான மக்களைக் கொன்றும், பல நாடுகளின் எல்லைகளை திருத்தியமைத்தும், ஆட்சிகளை மாற்றி, சில நாடுகளின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த வல்லமை பெற்றது.

1960 களில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டு அந் நாடுகள் செல்வத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வேளையில், யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. 1967ல் இஸ்ரேல் நாடு போரினால் உருவானது. இஸ்ரேல் தனது எல்லையை விரிவு படுத்த 1973ல் யோம் கிப்புர் போர் என்ற போரை வலுக்கட்டாயமாக தனது அண்டை நாடுகளின் மேல் திணித்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க படைகளின் ஆயுத பலத்தால் சில நாட்களிலேயே இஸ்ரேலுக்குச் சாதகமாக அப்போர் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனியப் பிரச்னை அன்றுதான் மிக விஸ்தாரமாகச் சு{டு பிடிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் இந்தத் தலையீட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான எண்ணெய் விற்பனையை ஒபெக் நாடுகள் முற்றிலும் நிறுத்தி விட்டன. 6 மாதங்களுக்கு இது தொடர்ந்தது. அமெரிக்கா பொருளாதாரம் ஸ்தம்பித்தது. 1973 பொருளாதார நெருக்கடிக்கு இந்தத் தடையே முக்கியக் காரணம். அந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா தங்கத்தை இருப்பில் வைத்து கரன்சி அடிக்கும் நியாயமான கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, தம் இஷ்டத்திற்கு டாலர் அடிக்க ஆரம்பித்தனர். டாலரின் உண்மையான மதிப்பென்ன என்று கேள்வி எழுப்பியவர்களெல்லாம் கேள்வி எழுப்பிய நாடுகளெல்லாம் வன்மையாகக் கவனிக்கப்பட்டன. தனது ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் தனது ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும், கேள்வி கேட்பர் பரம எதிரி என்பது அவர்களின் கொள்கை. அதை உலகெங்கும் அமுல்படுத்த அமெரிக்கா முயன்றது, முயல்கிறது, முயலுவது எங்கள் பிறப்புரிமை என்று கூவுகிறது. அது ஏனைய நாடுகளுக்குப் பிடிக்க வில்லை.

1973 எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு உலகிலேயே அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான அமெரிக்கா எனர்ஜp செக்யூரிட்டி என்ற பெயரில் புதிதாகக் கொள்கைகள் வகுக்க ஆரம்பித்தது. அதில் முக்கியமான ஒன்று ஒபெக் அமைப்பை தன் கைக்குள் கொண்டு வருவது. 2002 வரை அது சாத்தியமாக முடியவில்லை. ஏன் சாத்தியமாக வில்லை, பின் எப்படி 2002ல் மட்டும் அது சாத்தியமானது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

excellent post! very informative

said...

its sounds interesting and eagerly waiting for ur next post/