தலாய் லாமாவின் அந்தர் பல்டி

23  நவம்பர் 2017 அன்று கொல்கொத்தாவில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், திபேத்தியர்கள் திபேத்திய சுதந்திரப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டார்கள். அவர்கள் சீனாவுடன் சேர்ந்திருக்கவே விரும்புகிறார்கள். திபேத்தியர்களின் மத உணர்வுகளை மதித்து எங்களை எங்கள் வழியில் வாழவிட்டாலே போதும். திபேத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த சீனா முன்வரவேண்டும் என்று சொல்லி தில்லியின் சவுத் ப்ளாக்கிற்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் தலாய் லாமா. 

மக்மோகன் என்பவர் இந்திய வரைபடத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் வரையும் பொறுப்பை வைத்திருந்தார். சீனா, பாகிஸ்தான், பர்மா ஆகிய பகுதிகளின் எல்லையை கொல்கொத்தாவின் ஒரு அறையிலிருந்து கொண்டு ஒரு கோடு போட்டு தீர்மானித்தார். அதற்கு பெயர் மக்மோகன் எல்லை. அந்த மக்மோகன் எல்லையை சீனா ஏற்க மறுத்து விட்டது. சீனா, திபேத், இந்தியா ஆகிய நாடுகளை அழைத்துப் பேசி அதற்கு தீர்வுகாண 1913 வாக்கில் சிம்லாவில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டது. இதில் சீனா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது, அதனால் அந்த உடன்படிக்கையில் சீனா கையெழுத்திடவில்லை. ஆனால், திபேத்தும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சீனாவைப் பொறுத்தவரை திபேத் மற்றும் தவாங்க் என்றழைக்கப்படும் கிழக்கு அருணாசலப் பிரதேசமும் சீனநாட்டைச் சேர்ந்தது. அந்த முடிவில் அவர்கள் மாறவில்லை.

இப்பொழுது இதில் அதிர்ச்சி என்ன என்று கேட்டால், நீங்கள் 63 வருடங்கள் பின் நோக்கிப் போகவேண்டும். சுதந்திர இந்தியாவில் 1950 வாக்கில் சிறுசிறு மாகாணங்களையெல்லாம் ஒன்றிணைத்து இந்தியாவின் எல்லைகளை வரையறுத்துக் கொண்டிருந்த நேரம். சீனா அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. தலாய் லாமாவுடன் சீன இராணுவம் 1951ல் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது. 1954ல் தற்போது கிழக்கு அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிக்கு அப்போதைய இந்திய பிராந்தியப் பெயர், வடகிழக்கு பிராந்தியம் (North East Frontier Agency - NEFA).   அந்தப் பகுதியை சீனாவும் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு இந்தியாவில் சேருவதற்கான குழுப் போராட்டங்கள் தொடங்கின. 

 ஆனால் பல குழுக்கள் தொடர்ந்து சீனா அரசிற்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த குழுவினர் 1959ல் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வைத் தொடர்புகொண்டு உதவி கேட்க, சி.ஐ.ஏ. அங்குள்ள சிலருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தது. 1959லேயே கலவரம் முற்ற ஆரம்பித்தது. தலாய் லாமாவைக் கைது செய்ய சீன ராணுவம் முடிவு செய்திருப்பதாக அறிந்த சி.ஐ.ஏ, தலாய் லாமாவை இந்தியாவுக்குள் அனுப்பி அவருக்கு மாதாமாதம் இன்று வரை சம்பளம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து 1962ல் அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு. ஐ.நா.வில் சீன அரசு முறையாக முறையிட்டது, எனினும் அமெரிக்காவின் உதவியால் அந்த முறையீடு செல்லுபடியாகவில்லை. கசப்பு முற்றி 1962ல் சீன ராணுவம் இந்தியாவுடன் போருக்கு வந்தது, அருணாசலப் பிரதேசம் முழுவதும் அது கைப்பற்றிக் கொண்டது. பல வகையான மிரட்டல்கள், சமாதானங்களுக்குப் பிறகு, 1963ல் தனது ராணுவத்தை மக்மோகன் எல்லைக்கு பழையபடி பின்வாங்கிக் கொண்டது சீனா. பிடித்திருந்த போர்க்கைதிகளும் 1963ல் விடுவிக்கப்பட்டார்கள்.

தப்பித்து வந்த தலாய் லாமாவிற்கு தர்மசாலா என்ற இடத்தில் வசதிகள் செய்து கொடுத்து, புலம்பெயர் திபேத்திய ஆட்சி அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தார். இந்த கால கட்டத்தில் 1987ல்  இந்திய யூனியன் பிரதேச அந்தஸ்திலிருந்து மானில அந்தஸ்திற்கு அருணாசல பிரதேசத்தை உயர்த்தியது. தேர்தலும் நடந்தது. 

இவ்வளவிற்கும் பிறகும் சீனா தவாங்க் எனப்படும் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை தனது பகுதியாகவே கருதிக்கொண்டு, அங்கிருந்து சீனாவிற்குப் போக விசா கேட்டவர்களுக்கு, உங்களுக்கு விசா தேவையில்லை. சொந்த நாட்டிற்கு போக எதற்கு விசா என்று திருப்பிக் கேள்வி கேட்டது. இன்றைக்கும் கிழக்கு அருணாசல பிரதேச மக்கள் சீனாவிற்கு விசா இல்லாமல் செல்கிறார்கள்.

இந்தச் சூழ்னிலையில்தான், தலாய் லாமா இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார். முதல் பத்தியை இப்பொழுது மறுபடியும் படியுங்கள். அதிர்ச்சி என்னவென்று புரிந்திருக்கும்.








0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: