தமிழ் நாடும் மருத்துவக் கல்வியும்

தமிழ் நாடும் மருத்துவக் கல்வியும்
(அல்லது)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஜெமினி கணேசனும்.


இந்திய மருத்துவக் கல்லூரிகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிக்க நேர்ந்த பொழுது ஒரு அரிய தகவல் அறிய முடிந்தது.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் (ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரையிலான அப்போதைய இந்தியா) முதல் மருத்துவக் கல்லூரி, பிரெஞ்ச் அரசாங்கத்தால், 1823ம் ஆண்டு பாண்டிச்சேரியில் தற்போது (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER) ஜிப்மர் என்றழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1820ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட காலரா வியாதிக்கு பெரும்பான்மையான பிரிட்டிஷ் அதிகாரிகள் இறந்து போகவே, மருத்துவக் கல்வியின் தேவையை உண்ர்ந்த பிரிட்டிஷ் அரசு, 1835ம் ஆண்டு கல்கத்தாவில், கல்கத்தா மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தது. அதே 1835ம் ஆண்டு சென்னையிலும் மெட்ராஸ் மருத்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1835 வாக்கில் தென்னிந்தியாவில்தான் இரு மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ப்ரிட்டிஷ் இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளிலெருந்தெல்லாம், பாண்டிச்சேரியிலும், சென்னையிலும்தான் வந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

1907ம் ஆண்டு மெட் ராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் இந்திய மாணவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். அதுவரை இந்தியப் பெண்கள் மருத்துவக்கல்லூரியில் படிக்கவில்லை. ஏன் கல்லூரிப் படிப்பு கூட அப்போது இந்தியாவில் வெகு சில பெண்கள்தான் படித்து முடித்திருந்தனர்.

யாரிந்த முத்துலட்சுமி ரெட்டி?

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த நாராயணசாமி ஐயர் மற்றும் சந்திரம்மாவின் மகள். சந்திரம்மா இசை வெள்ளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தேவதாசியாக பட்டம் கட்டப்படும் சாதிகளில் ஒன்று இசை வெள்ளாளர் சாதி. நாராயணசாமி ஐயரின் மனைவி சிறுவயதிலேயே தவறி விட்டதால், சின்ன வீடாக வைத்திருந்தது சந்திரம்மாவை.



சந்திரம்மாவுக்கு இரு குழந்தைகள். முத்துலட்சுமி மற்றும் ராமசாமி. தந்தையைப் போலவே, முத்துலட்சுமிக்கு கல்வியில் அயாராத ஆர்வம். தாயும் தடை போடவில்லை. கல்லூரியில் சேரவேண்டிய காலம் வந்த போது, மன்னர் கல்லூரியின் முதல்வரும் முத்துலட்சுமியின் தந்தையுமான நாராயணசாமி ஐயர் கல்லூரியில் இடம் தர மறுக்கிறார். விஜயரகுனாத தொண்டைமான் மன்னர் காதுக்கு இது செல்ல, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மன்னர் ஆணையிடுகிறார். இவ்வாறாக முத்துலட்சுமி கல்லூரிப் படிப்பை முடிக்கிறார். ஆசிரியராக பணியேற்கும்படி தந்தையும், தாயும் வற்புறுத்த, மருத்துவக் கல்லூரியில் படிக்க இலக்கு வைக்கிறார் முத்துலட்சுமி.

பிரிட்டிஷ் மக்களிலேயே முதல் பெண் மருத்துவரான மேரி 1878ல் சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் பயின்று மருத்துவரானார். ஏனென்றால், லண்டனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை. இதற்காகவே சென்னை வந்து படித்து டாக்டரானார் மேரி. அவரைப் பின்பற்றி 1912ல் இந்தியாவின் முதல் பெண் டாக்டரானார் முத்துலட்சுமி.

தனக்கு சரிசமமான உரிமை தர சம்மதம் பெற்று டாக்டர் சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டதால், டாக்டர் முத்துலட்சுமி 'ரெட்டி' ஆனார்.

ஜெமினி கணேசனுக்கு என்ன சம்பந்தம்?

டாக்டர் முத்துலட்சுமியின் சகோதரர் ராமசாமியின் மகன் தான் 'ஜெமினி' கணேசன் என்றழைக்கப்படும் கணபதி சுப்ரமணிய சர்மா.

Image Courtesy: www.thebetterindia.com

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: