வடகொரியாவின் அணுஆயுதச் சோதனை

இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு ஏற்கனவே பலமுறை மாற்றியெழுதியாகிவிட்ட அமெரிக்காவின் கிழக்காசியக் கொள்கையை மறுபடியும் மாற்றியெழுதும் வல்லமையைக் கொண்டதாகும். இப்பகுதியில் உள்ள ஜhம்பவான்களான ஜப்பானும் தென்கொரியாவும் இனி அணுஆயுதங்களை வாங்கப்போகிறhர்களா அல்லது செய்யப்போகிறhர்களா என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும். வடகொரியாவிற்கு உள்ள தைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஏன் என்பதை இக் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம் வடகொரியாவை,, ஒரு 56 வருடங்களுக்குப் பின்னால்.

இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டிருந்த சூழலில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் தொடங்கி உக்கிரமாக வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்த காலம் அது. போரில் தோற்கடிக்கப்படும் முன் ஜப்பான் கொரியா முழுமையும் தனது காலனியாக்கி வைத்திருந்தது. தோற்கடித்த அமெரிக்கா சீனாவின் மேல் கண்வைத்துக் கொண்டே கொரியாவைத் தான் அடைந்த பரிசாக நினைத்தது. கண்மூடித்திறப்பதற்குள், சத்தமில்லாமல் ரஷ்யா கொரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விழித்துப் பார்த்த அமெரிக்கா ரஷ்யாவுடன் சண்டையிடத் தயாரில்லை, எனவே சமரசம் உண்டாயிற்று. வடபக்கம் கொரியா கம்யூனிஸ நாடாகவும் தென் கொரியா சோஷலிஸ நாடாகவும் 38 நிலவரைக் கோடு என்ற எல்லைக்கோட்டைக் கொண்டு இரண்டாகப் பிரித்துக் கொண்டார்கள். இவ்வாறாக 1942ல் வடகொரியாவும் தென் கொரியாவும் உண்டாயிற்று. ஆனால் இரண்டு பக்கமும் ஒரே குடும்பத்தின் சொந்தக்காரர்கள் இருந்தனர். பிரிவினை பிரிவினை தான், யாரும் யாரையும் பார்க்க முடியவில்லை. மக்கள் ஒன்றுபட்ட கொரியா உருவாகும் என்ற கனவில் இருக்க, ஆட்சியாளர்கள் எல்லைக் கோடுகளில் படையைக் குவிப்பதாக இருந்தனர். அவ்வப்போது ஊடுருவி ஆயிரக்கணக்கில் மறுபக்கத்தினரைக் கைது செய்து போர்க்கைதிகளாக்கி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர் இருதரப்பாரும்.

1949ல் ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் நிலைகளை விட்டு பின்வாங்கின. ரஷ்யா உள்ளுர் மக்களைக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துடனான ஒரு பலமான இராணுவ அமைப்பை வடகொரியாவில் விட்டுச் சென்றிருந்தது. தென்கொரியாவிலோ அமெரிக்கா ஒரு ஜனநாயக அமைப்பை விட்டுச் சென்றிருந்தது. இதற்கிடையில் 1950ல் ஒரு கொரியப் போர் நடந்தது. வடகொரியா பெருமளவு தென் கொரியாவைக் கைப்பற்றிக் கொள்ள, அமெரிக்காவும் உதவிக்குப் போனது. தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுகாப்புச் சபையை உதவிக்குக் கூப்பிட்டது. ஒரு கூட்டமாக 14 நாடுகள் படைகளைக் கொண்டு வந்தன. போர் நடந்தது. ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்த வடகொரியாவை கூட்டணிப் படைகள் துரத்திச் சென்றன. சீனாவின் எல்லை வரைக்கும் போவதான திட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜெனரல் மெக்ஆர்தர் முன் வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் சீனாவைத் தேவையில்லாமல் சீண்டுகிறோமோ என்று தயங்கி அனுமதி அளிக்க மறுத்தார். கோபத்துடனிருந்த மெக்ஆர்தர் ஜனாதிபதி ஆணைக்கு எதிராக கருத்துச் சொல்ல அவர் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் சீனா தனது படையினரை எல்லையில் இரகசியமாக குவித்து வைக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எந்த எதிர்ப்புமில்லாமல் முன்னேறிச் சென்ற அமெரிக்க இராணுவம் திடீரென்று 1,80,000, பேர் கொண்ட சீனப் படையால் சுற்றி வளைக்கப்பட, போட்டது போட்டபடி பல ஆயிரம் உயிர்களை இழந்து அதே 38-நிலவரைக்கோடு வரை அமெரிக்க இராணுவம் திரும்பி ஓடியது. அன்றிலிருந்து இன்று வரை 38-நிலவரைக்கோடே இரண்டு கொரியாக்களுக்கும் எல்லையாகிப் போனது.

இதன்பின் வந்த பனிப்போர்க் காலங்களில் வடகொரியா சீனா, இரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகவும், தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்து வந்தன.

பனிப்போர்க்காலம் மறைந்தது.

பல உதவிகள் வடகொரியாவிற்குக் கிடைக்காமல் போயின. ஒரு பக்கம் இராணுவ அச்சுறுத்தல் மறுபக்கம் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம். வடகொரியா சமாளித்துத்தான் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சில சமயங்களில் ஆச்சரியமாக தென்கொரியா உணவுப் பொருள்கள் அனுப்பியெல்லாம் உதவி செய்திருக்கிறது. எதிரி நாடு ஆனால் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டால் கொடுத்து உதவுவது. சகோதரர்களுக்குள் ஏற்படுகின்ற என்ன என்று புரியாத ஒருவகையான பகை அது.

சரி,. அணு ஆயுதம் தயாரித்த கதையைப் பற்றிப் பார்ப்போமா..

வடகொரியாவிற்கு 1970-80களில் நிறைய நாடுகளுக்கு இருந்த ஆசையைப் போல அணுஆயுதம் தயாரித்தால் தன்னைத் தாக்க யாரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் இதற்கு வித்திட்டது. ரஷ்யா இருக்கும் வரை அரசல் புரசலாக தனது ஆதரவு நாடுகளுக்கு அது உதவிக் கொண்டிருந்தது. பிற்பாடு இந்தியா பட்ட சிரமம் போலவே வடகொரியாவிற்கும் அணுவிஞ்ஞானத்தை மேம்படுத்த வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் போனது. சில குறுக்கு வழிகளெல்லாம் கண்டு பிடித்து இந்தத் தொழில்நுட்பத்தை வளர்க்கலானார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையில் இந்த விஷயத்தில் எந்த அளவு வளர்ந்திருக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு இரும்புத்திரை கொண்ட நாடாக இருந்தார்கள். அமெரிக்கா எப்படியோ மோப்பம் பிடித்து பொருளாதாரத்தடை அந்தத்தடை இந்தத்தடை என்று விதித்து அணுஆயுத உற்பத்தி என்ற நிலையை அடைவதைத் தடுக்க எல்லா வகையிலும் முயற்சி செய்தது. ஆயினும் இந்த முயற்சி தங்கு தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இதில் முக்கிய உதவியாளர் யார் தெரியுமா.. தமது அணுவிஞ்ஞானத் தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா காப்பியடித்துள்ளது என்ற முஷ்ரப்பிற்கு தப்பான விளக்கம் கொடுத்து வைத்திருக்கும் கறிவாளி திருவாளர் ஏ.க்யூ.கான் தான். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களின் கண்களில் மண்தூவிவிட்டு இதைச் செய்திருக்கிறார். இதற்காக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து என்ன கைமாறு பெற்றதோ, யாமறியேன் பராபரமே.

1991-ல் அமெரிக்கா இராக்கை வல்லுண்டியாகப் போய்த் தாக்கியபோது ஒரு இந்திய ஜெனரல் சொன்னார். இராக்கிடம் அணுகுண்டு இருந்திருந்தால் இந்தப் போரே வந்திருக்காது என்று. அது எத்தனை தூரம் சத்தியமான வார்த்தை என்பது, வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குத் தெரியாமல் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு குழு போய் அணுகுண்டு வெடித்தபின் தானே நமக்குத் தெரிந்தது. அதே காரணம்தான் தற்போது வடகொரியா அணுகுண்டு வெடித்ததும், ஈரான் தான் தயாரிக்கப் போவதாக மிரட்டுவதும் அதற்காகத்தான்.

எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம், அதென்ன ஈராக்கை மட்டும் அணுகுண்டு வைத்திருக்கிறது என்று போய்த் தாக்கிய அமெரிக்கா, கண்கூடான ஆதாரங்கள் இருந்தும் வடகொரியாவைத் தாக்கவில்லையே என்பது தான். மிகச்சாதாரண விஷயம். வடகொரியா அணுகுண்டு வைத்திருக்கிறது என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் ஈராக்கிடம் அணுகுண்டு இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டுதான் அந்த நாட்டின்மீதே போர்தொடுத்தது.

வடகொரியாவிற்கு எப்போதும் ஒரு விபரீத ஆசை. இராணுவம் இல்லாத நாடான ஜப்பானை மிரட்டும் வகையில் அதன் கடல் பகுதியில் பலமுறை ஏவுகணைச் சோதனை செய்திருக்கிறது. வடகொரியாவால் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தான் அச்சுறுத்தல். ஏற்கனவே தாய்வான் பிரச்சினை பண்ணிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் வடகொரியாவுடன் வெளித்தெரியாத உறவு மற்றும் உதவிகள் செய்து சீனா அணுக்கமாக இருந்து வருகிறது.

வல்லவன் வகுத்ததுதான் வாய்க்கால், அமெரிக்கா எடுத்த அணுகுண்டு பூச்சாண்டியை எல்லா நாடுகளும் எடுக்கின்றன. பிற்காலத்தில், போரெல்லாம் வந்தால், ஒரு நாளுக்கு மேல் நடக்காது. ஏன் என்றால் எதையும் பார்ப்பதற்கு யாரும் உயிரோடு இருந்தால்தானே.

கிழக்காசியப் பிராந்தியத்தில் வலுமிக்க அமெரிக்க ஆதரவு நாடுகளாக நினைத்துக் கொண்டிருக்கிற ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது மேலாண்மையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை தலையைப் பிய்த்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருக்கின்றன. இது தற்போது ஒரு உடனடியான ஆயுதப் பந்தயத்திற்கு வழிவகுக்கும். ஆக, அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்கள் தனது நவீன விலையுயர்ந்த ஆயுதங்களை செழிப்பாக இருக்கும் கிழக்காசியச் சந்தையில் சந்தைப்படுத்த வழி பிறந்தாயிற்று.

அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் எதுவும் போடும் முன்பே வடகொரியா அணுகுண்டை வெடித்துவிட யார் யோசனை கூறியிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அணுகுண்டு வெடித்தால் போயிற்று அந்த நாட்டை அப்புறம் தாவா செய்து தான் அணுஆயுதப்பரவல் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யமுடியும். மிரட்டும் வேலையெல்லாம் அமெரிக்கா செய்யாது, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஒரிரு வினாடிகளில் செத்துப் போனதை வீடியோ எடுத்துப் பார்த்து ரசித்தவர்களல்லவா.. அதன் வீரியம் என்ன, விளைவு என்று தெரியாமலா இருக்கும்.

ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.

21 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

//வல்லவன் வகுத்ததுதான் வாய்க்கால், அமெரிக்கா எடுத்த அணுகுண்டு பூச்சாண்டியை எல்லா நாடுகளும் எடுக்கின்றன. //

//ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.//

சோகமான உண்மை.

said...

கல்வெட்டு அவர்களே, வருகைக்கு நன்றி ..

said...

//இராணுவம் இல்லாத நாடான ஜப்பானை //

ஆசியாவிலேயே மிக பெரிய நவீன ராணுவத்தை கொண்டது நிப்பான்!!!

அந்த நாட்டு சட்டம் பாதுகாப்பு காரனங்களுக்கு மட்டுமே இரானுவத்தை பயன்படுத்த வேண்டும் வெளியே சென்று போரிட கூடாது போன்ற கட்டுபாடுகளை விதிக்கிறது.
இனிமேல் அவை மெல்ல விலகும். ஜப்பான் என்ற உலக வல்லரசின் உன்மையான வலிமையை உலகம் உனரும்!

said...

//ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.//

சோகமான உண்மை.

சோகமான உண்மைதான் ஆனால் இதன் மூலம் மனித குலத்திற்கே அழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அமெரிக்கா என்ற பூனைக்கு மணி கட்டும் வரை மனித குல அழிவு நம் வீடுகளில் இருந்து அதிக தொலைவு இல்லை.

இன்றைய சூழ்நிலையில் அன்பு பொறுமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது சுட்டிக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இது போன்ற அறைகூவல்களுக்கு யாரும் செவி சாய்ப்பதே இல்லை.

எனக்கு மனித குலத்துக்கு சங்கு ஊதும் சத்தம் மிக அருகாமையில் கேட்க துவங்கி விட்டது.

அந்த சத்தம் கற்பனை அல்ல நிஜம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

said...

சமுத்ரா.. வருகைக்கு நன்றி..

ஜப்பானில் சுயபாதுகாப்புக் குழு (JSDF)என்ற பெயரில் அவர்கள் பாதுகாப்புப் படை வைத்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளில் இருப்பது போல இராணுவம் என்ற பெயரில் இல்லைதான் என்றாலும், அது முழுமையான இராணுவம் அல்ல. மற்றபடி, தற்போது பதவியேற்றிருக்கும் அபே மீண்டும் இராணுவத்தைக் கொண்டுவருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் சொல்லுகிற //ஆசியாவிலேயே மிக பெரிய நவீன ராணுவத்தை கொண்டது நிப்பான// என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. உலகின் இராணுவபலம் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_size_of_armed_forces

said...

குமரன் வருகைக்கு நன்றி...

தாங்கள் தேவைக்கதிகமாக கவலைப்படுகிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். இதெல்லாம் பெரும்பாலும் பூச்சாண்டி காட்டத்தானே ஒழிய வேறு ஒன்றுக்கும் உதவாது. அமெரிக்கா ஜப்பானின் மேல் போட்டு ஆய்வு செய்த பின் அனைவருக்கும் அணுகுண்டின் மேல் ஒரு ஆழிப் பயம் வந்து விட்டது.

said...

அமெரிக்காவை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், அவை தாங்கிச்செல்லக்கூடிய சக்திவாய்ந்த அணுவெடிகள். இவைதான் ஒரு நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும்.
அதுதான் இன்று அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் உலக ஒழுங்கு.
இந்த உலக ஒழுங்கே இன்றைக்கு அமெரிக்காவுக்கு எதிராக திரும்புகிறது.
வடகொரியா-ஈரான்-வெனிசுவேலா-லத்தினமெரிக்கா என்று அணுவாயுத வல்லரசுகள் உருவானதும் ஒற்றை உலகஒழுங்குக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் முடிவுவரும்.


நீங்கள் சொல்வது சரிதான். அணு ஆயுதம் வெறும் ராஞதந்திர ஆயுதமே. அதனை பயன்படுத்த யாரும் துணியப்போவதில்லை.

இன்றைக்கு உள்ள தொழிநுட்ப வளர்ச்சியின்படி வட கொரியா தென்கொரியா மீது அணு ஆயுதத்தை பிரயோகிக்க முடியாது.

said...

மயூரன்.. வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது மிகச் சரி.

said...

///
பூச்சாண்டி காட்டத்தானே ஒழிய வேறு ஒன்றுக்கும் உதவாது
///

அப்படியே இருந்தால் நல்லது தான். ஆனால் இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பல தருணங்களில் அணு ஆயுதம் உபயோகிக்க பல நாடுகள் சிந்தித்திருக்கிறது.

பல தருணங்களில் இந்த முடிவு கடைசி நொடிகளில் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. Crimson tide என்ற ஒரு படம் கூட இது போன்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் எடுக்கப் பட்டுள்ளது. கடைசி நொடியில் அணு ஆயுதம் உபயோகிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம்.

said...

மயூரன்,

உங்கள் வாதம் சரியானது என்றாலும், எதிரி தம்மை அதே ஆயுதத்தை பயன்படுத்தி தாக்க மாட்டான் என்ற பொழுதில் தான் அணு ஆயுதம் பிரயோகிப்பதைப் பற்றி யோசிப்பார்கள். இழப்பு இருபக்கமும் ஏற்படும் என்ற பயம் இருந்தால் அணுஆயுதப் பிரயோகம் இருக்காது.

said...

நன்றாக அலசி எழுதபட்ட பதிவு..

அணுஆயுதம் பழசாகி போயி தானக வெடிக்க வைக்க வேண்டிய நிலைமை வந்தாலும் வரும்..

said...

சின்னப்புள்ள.. வருகைக்கு நன்றி.

அணு ஆயுதம் இருக்கிறதா என்பது தான் முக்கியம் அது பழசா அல்லது புதுசா என்பதெல்லாம் கேள்வி கிடையாது.

said...

நன்றாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு திரு. நீங்க சொல்வது மாதிரி இப்பொழுது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை படை எடுக்கவும் முடியாது. சீனாவின் ஆதரவு இருப்பதால் பொருளாதார தடையும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. விரைவில் ஈரானும் அணுகுண்டு சோதனையை செய்யும் என்று நம்புவோம்.

said...

சந்தோஷ்...

இரான் குறைந்த பட்சம் அணுகுண்டை ரஷ்யாவிடமிருந்து விலைக்கு வாங்கியாவது விரைவில் வெடித்து விடும், என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால்... இரான் மேலும் அமெரிக்க போர் செய்யப் போனால், நாமெல்லாம் நடந்து போக வேண்டியது தான். பெட்ரோல் விலை எங்கேயோ போய்விடும்.

said...

செய்தி ஊடகங்களில் வடகொரியா அணுவெடிப்பை சொல்லி அமெரிக்கா ஈனக்குரலில் அலறுவதை பார்க்க பார்க்க சந்தோஷமாயிருக்கிறது.

ஈரானும் வெனிசுவேலாவும் ஏனைய லத்தினமரிக்க நாடுகளும் அணுவாயுதம் கொண்டிருக்கும்பட்சத்தில் அமெரிக்காவால் நேரடி ராணுவத்தலையீடுகளை செய்யமுடியாமற்போகும்.

உலகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது.
மறுபடியும் , அணுவாயுதம் தாங்கப்போகும் மூன்றாமுலக நாடுகளுக்கு வாழ்த்துக்கள்.

said...

For very many years, USA followed a some what rash foreign policy of pandering to Communist China in the name of containing Soviet Union and looking the other way when China was proliferating both nuclear and missile technologies to N Korea and pakistan.

Similarly for driving soviet union out of Afghanistan they funded and armed Taliban/Bin Laden .It is US/Saudi money that helped Pak eastablish Jihadists manufacturing madrassas which are working on three shift production mode even today ensuring uninterrupted supply of Jihadists for any number of pan islamic causes world wide.

They paid a dear price for this through 9/11..and are paying a dear price now thru North Korea becoming nuclear korea.

Ua and India have been hurt more,in that order, by the US foreign policy than any other nation's.

bala

said...

பாலா..

அமெரிக்கா செய்த தவறுகள் ஏராளம். 80-களில் ஈரானிலும் ஈராக்கிலும் பல லட்சம் பேர் பல்வேறு வகையான Non-Conventional போர் ஆயுதச் சோதனைகளுக்காளாகி இறந்து போயினரே.. அந்தத் தொழில் நுட்பம் எல்லாம் யார் கொடுத்ததாம்?

Anonymous said...

ஆஹா எல்லோரும் அமெரிக்காவைத் திட்டி விட்டீர்காள் எப்போதும் போல, எனக்கு ஒன்று விள்ங்கவில்லை அறிவு ஜீவி என்றாலே அமெரிகாவைத் திட்டவேண்டுமா?

அணு ஆயுதம் இந்தியாவிடம் இருப்பதும் பாக், ஈரான், வடகொரியாவிடம் இருப்பதும் ஒன்றாகிவிடாது ஏனென்றால் இந்தியா ஒரூ ஜனநாயக நாடு ஆனால் பாக், வடகொரியா எல்லாம் ஒரு சர்வாதிகாரியின் முடிவுதான் ஆக ஒரு ந்பர் விரும்பினால் எப்போதும் அணு ஆயுதத்தை எதிரி நாட்டின் மீது புரோகிக்க முடியும். மேலும் ஒரு முஸ்லிம் நாட்டிடம் அணு ஆயுதம் இருந்தால் அது கண்டிப்பாக ஜிகாத் என்ற பேரில் அடுத்த நாட்டிற்கு எதிராக உபயோகிக்கும் அபாயம் உண்டு.

அமெரிகா அணு ஆயுதத்தை ஜப்பான் மீது உபயோகிக்கும் முன் இரண்டு தடவை எச்சரிககை கடிதம் கொடுத்தது தெரியுமா?. முதல் குண்டு வெடித்ததும் மறுபடியும் போரை நிறுத்தி சரணடை அலலது இரண்டாவது குண்டு போடுவோம் என்று எச்சரித்தது தெரியுமா?.
அணு ஆயுதம் உபயோகிக்காமல் இருந்தால் ஜப்பான் போரில் சரணடைந்து இருக்காது என்று தெரியுமா?.

நான் அமெரிக்காவுக்கு வக்காலது வாங்கவில்லை ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

உதாரணமாக 1991 இராக் போர் நியாயமானது ஏனெனில் அப்போது இராக் குவைத்தை ஆக்கிரமிப்பு செய்தது ஆனால் இப்போதைய போர் நியாயமற்றது.

இராக்கில் இறக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படும் (செய்தி கொடுக்கும் மீடியாக்கள்) நபர்கள் தின்மும் காஷ்மீரில் இறக்கும் நமது ஜாவான்களைப் பற்றி ஏதாவது செய்தி தருவதுண்டா ?

said...

அமெரிக்காவைத் திட்டுவதற்கு அறிவிசீவியாகத்தான் இருக்கவேண்டுமான என்ன... திட்டுவதற்கும் விமர்சிப்பதிற்கும் உள்ள வேறுபாட்டைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வடகொரியாவும் ஈரானும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா ஏன் விரும்பவில்லை. அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இல்லையா... மேற்கொண்டு அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கவில்லையா... நியாயம் என்றால் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். இங்கு யாரும் தீவிரவாதிகள் கையில் அணுஆயுதத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூற வில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... போலிஸ் ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக எல்லோரையும் சுட்டுக் கொண்டிருந்தால், இராணுவத்தை வரவழைக்கலாம். இராணுவமும் எல்லோரையும், போலிஸ் உட்பட, சுட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள். நீங்கள் கடைக்குப் போயோ,,, கடத்தி வந்தோ ஒரு துப்பாக்கி வாங்கி வைத்துக் கொள்ள மாட்டீர்களா... நீங்கள் போய் எல்லோரையும் சுடப் போகிறீர்கள் என்பது அதற்கு அர்த்தமல்ல... ஆனால் உங்களிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்தால் தான் சுடப்படக் கூடிய வாய்ப்பறிந்து, எதிராளி விலகிச் செல்வான். அதுபோலத்தான்... அதீத பலம் வாய்ந்த அமெரிக்கா நேர்மையுடனும் நியாயத்துடனும் நடந்து கொண்டிருந்தால், இந்த மாதிரியான நிகழ்வுகளுக்குச் சாத்தியம் குறைவு. போதை மயக்கத்தில் அரையிருட்டில் எடுக்கின்ற முடிவுகள்... தொலைதூர நிதர்சன உண்மைகள் புரியாமல் எடுக்கப்படும் முடிவுகள் இவை. எல்லோரையும் பாதிக்கிறது.

காஷ்மீரில் இந்திய ஜவான்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதை ஒரே நாளில் அமெரிக்காவால் நிறுத்த முடியும். ஏன் அதைச் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விட்டால்போதும்...மற்றதெல்லாம் சுலபம்.

Anonymous said...

//காஷ்மீரில் இந்திய ஜவான்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதை ஒரே நாளில் அமெரிக்காவால் நிறுத்த முடியும். ஏன் அதைச் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விட்டால்போதும்...மற்றதெல்லாம் சுலபம்.//

அமெரிக்காவுக்கு ஒரு வியட்நாம், இராக் - ரஷ்யாவுக்கு ஒரு ஆப்கான் அது போல இந்தியாவுக்கு ஒரு காஷ்மீர். காஷ்மீர் இந்தியாவின் கையை மீறி போய் விட்டது என்று இந்திய அரசுக்குத் தெரியும் ஆனால் வீம்புக்காக 3 லட்சம் வீரர்களை வைத்து செலவு செய்து கொண்டு, நமது இளம் வீரர்களைப் பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா தலையிட்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று இந்திய அரசு இது வரை கேட்கவில்லை விருக்பவும் இல்லை.

said...

அமெரிக்காவிடம் இந்தியா உதவி கோரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அப்படி ஒரு கோரிக்கையை இந்தியாவிடமிருந்து பெறுவதற்காகவே பாகிஸ்தானை அமெரிக்கா தூண்டி விடுகிறது. ஒருவேளை இந்தியா கேட்டிருந்தால், ஐநா அமைதிப்படை என்ற போர்வையில் அமெரிக்கப் படைகள் அங்கு குவிந்திருப்பார்கள். இது மேக்ரோ பொலிடிக்ஸ். இதில் இழப்புகளைப் பற்றிக் கவலைப்பட முடியாது. பாகிஸ்தான் இந்தப் பிரச்னையிலிருந்து விலகிக் கொண்டால் இதற்கான தீர்வு கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. காஷ்மீரைப் பற்றி நண்பர் தமிழ்சசி (http://thamizhsasi.blogspot.com/) விரிவாக தனது வலைப்பூவில் எழுதியிருக்கிறார்.