ஆரம்பமாகிறதா ஆசியப் பனிப்போர்?- பகுதி-2

கிழக்காசிய பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நாடுகள் அணுஆயுத பலத்தைப் பெற்ற பிரதேசமாக உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரை ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, விரைவில் ஈரான். மேற்கத்திய நாடுகளில், அமெரிக்கா, லண்டன், மற்றும் ப்ரான்ஸ் ஆகியநாடுகள் மட்டும்தான் அணு ஆயுத நாடுகளாக தங்களை அறிவித்துள்ளன. இஸ்ரேல் வைத்திருப்பதாகச் சொல்கிறது, இதுவரை நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனைக்கு ஐநா சபையின் பாதுகாப்புக்குழுமம் விதித்துள்ள தடைகளை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமம் இருக்கப்போவது கண்கூடு. இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அமெரிக்கா ரஷ்யாவுடனும் சீனாவுடனும் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியதானது. அதாவது அமெரிக்கா வடகொரியாவை அடிக்கலாம், ஆனால் மயிலிறகால் மட்டுமே அடிக்கலாம். அதைவிட கனமான எந்தப் பொருள்கொண்டும் அடிக்கக்கூடாது என்பதுதான் நிபந்தனையே. அமெரிக்கா இதற்கு உடன்பட மறுத்தால் இந்த இருநாடுகளும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும். அது அமெரிக்காவிற்கு பெருத்த அவமானம். எனவே நிபந்தனைகளுக்குட்பட்ட இந்த ஐநா சபை தீர்மானம், வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் இரண்டாவது தோல்வி.

சீனாவைப் பற்றிய அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கைகள் பெரும்பாலும் ஊகத்திலே எழுதப்பட்டு வருவதால் அவ்வப்போது சீனா ஆச்சரியங்களை அள்ளித்தருகிறது. இதற்கு காரணம் சரியான செய்திகள் சீனாத் தரப்பிலிருந்து ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை. சீனா வடகொரியாவிற்கு ஆதரவாக இருக்கக் காரணம் என்ன என்று ஆராயப்போனால்தான் இந்த ஆசியப் பனிப்போரின் ஆணி வேரைக் காணமுடியும்.

வியட்நாம் தோல்விக்குப் பின்னைய காலகட்டத்தில் கிழக்காசியப் பிராந்தியத்தில் தனக்கு ஒரு வலுவான பிரதிநிதித்துவம் வேண்டும் என அமெரிக்கா நினைத்தது. ஆகவே பல்வேறு நாடுகளையும் தளங்களையும் நிர்மாணித்துக் கொள்ளலானது. ஜப்பானில் தொடங்கி டைகோ கார்சியா தீவு வரை பல்வேறு தளங்கள் பல்வேறு நாடுகள், சிங்கப்பூர் உட்பட. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இடம் கிழக்காசியா. அமெரிக்காவிடம் தோற்ற நாடுகள் அதிகம் உள்ள பகுதியும் இதுதான்.

90கள் வரையில் கிழக்காசியாவில் வலுவான நாடாக சீனா மட்டுமே இருந்து வர, ஏனைய அமெரிக்க தோழமை நாடுகள் தாங்களும் வலுவான நாடுகளாகக் காட்டிக் கொண்டிருந்தன. இந்தியா அணுகுண்டு வெடித்ததும், Y2K சம்பந்தமாக புற்றீசல்கள் போல படித்த இந்தியர்கள் அமெரிக்கா நோக்கி படையெடுத்ததும், இந்தியாவைப் பற்றிய கணிப்பை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டியதானது. கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை மேலோங்கி வைத்துக்கொள்ள அமெரிக்கா பல்வேறு யுத்திகளைக் கடைப்பிடித்து வைத்தது.

அதே சமயம் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைமை கிழக்காசியப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எண்ணெய்க்காகவும், இதர பொருளாதார போக்குவரத்திற்காகவும் தென் பசிபிக், மலாக்கா, தென்சீனக் கடல் பிராந்தியங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன அனைத்துக் கடற்பகுதிகளிலும் அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது. வடகொரியப் பிரச்னையை அணுகுண்டு வெடிப்புக்கு முன்னதாக உள்ள நிலையில் அமெரிக்கா அணுகிய விதத்தில், மற்றுமொரு ஈராக் அணுகுமுறை தென்பட்டது. இதற்கு வலுச் சேர்க்க மேலும் சில காரணங்கள் இருந்தன. அதாவது, ஜப்பானும், தென்கொரியாவும், தத்தமது மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தன. தொடர்ந்து அங்கு இருப்பதற்கான வலுவான வேறுகாரணங்களும் இல்லையென்பதால், வடகொரியப் பிரச்னையில் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட அதிகம் வாய்ப்புகளிருந்தன. இந்தச் சூழலில்தான் சீன எல்லையில் வடகொரியா அணுகுண்டுச் சோதனை நடத்தியது. சீனாவிற்குத் தெரியாமல் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்கும் என்பது வெறும் சால்ஜாப்பாகத் தான் இருக்கமுடியும்.

இதற்கிடையில், முதலாம் ஈராக் போரைத் தொடர்ந்து இஸ்ரேலுக்காக மத்திய கிழக்கில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டி வந்தது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானையும், மறுபக்கம் ஈராக்கையும் பின் தொடர்ந்து ஈரான், சிரியா, ஜோர்டான், எகிப்து, கடைசியில் சவுதி அரேபியா என்று ஒரு நீண்ட நாள் திட்டம் ஒன்று யேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஈராக் போருக்கு முன் பரபரப்பாகவும் இரசியமாகவும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி, ஈராக்கில் இன்றுவரை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தோல்வி போன்ற நிகழ்வுகள், அமெரிக்க இராணுவம் ஏனைய பகுதிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. குறிப்பாக, வடகொரியா விவகாரத்தில் ஐநா பாதுகாப்புசபைத் தீர்மானம் வெறும் தீர்மான அளவிலே நிறைவேற்றப் பட்டதற்குக் காரணம், இன்றைய சு{ழலில் அமெரிக்காவின் ஆசியாவில் வலுவாக தலையிட முடியாத பலவீனம் தான்.

சரி, கிழக்காசியக் கொள்கையில் என்னதான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்த நாடும் தன்னிச்சையாக தன்னைவிட வலுவான நாடாக இந்தப் பிராந்தியத்தில் வரக்கூடாது. உலகின் எந்தப் பகுதிக்கும் பெண்டகன் உத்தரவிட்ட நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கப் படை அங்கு இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்டு அறிவிக்கப்படாத அமெரிக்க இராணுவக் கொள்கை. அதற்குத் தகுந்தமாதிரிதான், தனது தளங்களையும் தோழமை நாடுகளையும், பிரச்னைகளையும் அமெரிக்கா உருவாக்குகிறது. பொதுவாக தனது மேலாண்மையை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா பெரும்பாலும், அப்பிராந்தியத்தில் ஏதாவது ஒரு பிரச்னையை தனதாக எடுத்துக் கொள்ளும். காஷ்மீரை பலமுறை ஐநா சபையில் எடுக்க முயன்று, இந்தியாவின் பலமான எதிர்ப்பால் இன்று வரை அதில் அமெரிக்காவால் தலையிட முடியவில்லை. அடுத்து உள்ளது புலிகள் பிரச்னை. அதில் அமெரிக்கா எந்த மாதிரி முன்பு தலையிட்டது என்பதைச் சொல்ல இது உசிதமான பதிவல்ல. தற்சமயம் வடகொரியா மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய பிரச்னைகளை ஐநா சபை முன் வைத்து விவாதித்து எதில் தலையிடலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறது.

வடகொரியாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. பர்மாவைத் தாக்க வலுவான காரணம் இல்லாமல் உள்ளது. தற்சமயம் தாய்லாந்து இராணுவ அரசை அமெரிக்கா குறைகூற ஆரம்பித்துள்ளது. தென் தாய்லாந்தின் முஸ்லிம் பிரதேசத்தில் அமெரிக்கத் தயவால் புதிய கலவரங்கள் உருவாகக்கூடும். அதன் மூலம் அமெரிக்கா அங்கும் காலுன்றுவதற்கு அதிகம் வாய்பிருக்கிறது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், அல்லது ஏற்படுத்திக் கொண்டாலும், தற்சமயம் அமெரிக்க இராணுவம் இப்பகுதியில் குவிக்கப்பட தயாராக உள்ளதா என்பதுதான் கேள்வி. அமெரிக்க நாட்டின் மேல் தாக்குதல் நடத்தப்படும் அல்லது அதன் பொருளாதார இராணுவத் தளங்களுக்கு ஆபத்து என்றால்தான் அமெரிக்க செனட்டில் இந்த மாதிரியான இராணுவப் படைக்குவிப்பிற்கு ஆதரவு பெற முடியும். செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் ஒசாமாவையும் சதாமையும் காரணம் காட்டினார்கள். ஆனால் கிழக்காசியாவில் என்ன செய்ய முடியும். வடகொரியா அமெரிக்கா மீது குண்டு வீசும் என்றா..??

வடகொரியா தீவிரவாதிகளுக்கு அணுஆயுதத்தை விற்கக்கூடும் என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அந்த நாட்டால் அமெரிக்க இறையாண்மைக்கு ஆபத்து கிடையாது. மேலும் வடகொரியா, அமெரிக்கா மாதிரி வம்படியாக எந்த நாட்டின்மேலும் போர் தொடுத்தது கிடையாது. தென்கொரியாவில் நடத்திய போரைத்தவிர வேறு எந்தப்போருக்கும் அனாவசியமாக அந்த நாடு போனது கிடையாது. எனவே, இது ஒரு முழுமையான தற்காப்பு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. வடகொரியாவிற்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய அமெரிக்கப் பிரதேசம், ஹவாய். ஹவாய் என்பது பொருளாதார முக்கியத்துவம் அதிகம் இல்லாத ஒரு அமெரிக்கப் பகுதி. மேலும் தற்சமயம் அணு ஆயுதத்தை ஏவுகணையில் வைத்துச் செலுத்துமளவிற்கு சிறிய அளவில் தயாரிக்க இன்னும் வடகொரியா தயாரகவில்லை என்பதே நிதர்சனம். ஆக அமெரிக்கா வடகொரியாவை ஒரு தகுதி வாய்ந்த எதிரியாக சித்தரிக்க இயலாத சூழ்நிலை.

ஆனால் என்ன இருக்கவே இருக்கிறது அல்காயிதா (Al-Qaeda) மற்றும் ஜமாயே இஸ்லாமியா (Jama-e-Islamia). தற்சமயம் ஒசாமா உயிருடன் இருக்கிறாரா என்று பெண்டகனுக்கும், சவுதி அரசிற்கும், ஜெர்மனி அரசிற்கும் மட்டும்தான் தெரியும். அவசரம் அவசரமாக அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா ஏதோ ஒரு ஒலிநாடாவை ஒளிபரப்பி மறுப்பு விடக் காரணம் என்ன. இதை ஏன் அல்ஜசீரா தொலைக்காட்சி செய்யவில்லை.

ஊகத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை ஒசாமா தற்போது இறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டால், அவரின் அல்காயிதா இயக்கம் நிச்சயம் குலைந்து காணாமல் போக அத்தனை சாத்தியங்களும் உண்டு. அப்படிப் போனால், அமெரிக்கா யாரைக் காட்டி இனி போர் தொடுக்க முடியும். அல்காயிதா தவிர ஏனைய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் தனது இலக்கை மட்டுமே தாக்குகின்றன. புலிகள் இலங்கை இராணுவத்தையும் மற்றும் தனக்கு உபத்திரம் செய்வதாக எண்ணி இந்திய இராணுவத்தையும் தாக்கினர். ஆனால் வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தங்களது திறமையைக் காட்டியதில்லை. ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலைத் தவிர வேறு யாரையும் தாக்கியதில்லை. தாலிபான்கள், முன்பு இரஷ்யாவையும் தற்போது அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானில்தான் எதிர்க்கிறார்கள். அவர்கள் யாரும் அமெரிக்கா சென்று தாக்கியதில்லை. எனவே மற்றோரைத் தாக்க அமெரிக்காவிற்கு அல்காயிதா மற்றும் WAR on TERROR என்ற காரணம் தேவைப்படுகிறது. எனவே ஒசாமா தற்சமயம் அமெரிக்காவிற்காகவேனும் சாகப்போவதில்லை.

இத்தகையச் சூழலில் அமெரிக்காவிற்கு இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவைத் தவிர வேறு சிறந்த தோழமைத் தகுதி வாய்ந்த நாடு இருக்க முடியாது. இந்தியாவுடனான புதுத் தோழமைக்காக அமெரிக்கா தனது தற்போதைய தோழமை நாடான பாகிஸ்தானுடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இந்தப் புதுத் தோழமை ஒருவேளை வலுப்பெற்றால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை-தமிழ்ஈழம், மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளில் ஏற்படப்போகும் மாற்றங்களை வரும் பதிவில் அலசுவோம்.

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

Good political analysis. Keep going.