ஆரம்பமாகிறதா.. ஆசியப் பனிப்போர் - இறுதிப்பகுதி

கடந்த இரண்டு பகுதிகளில் ஆசியப் பனிப்போர் உருவாவதற்கான பல காரணிகளைக் கண்டோம். தற்போது அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிற இந்தக் காலகட்டத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திராகாந்தி காலத்தில் இருந்ததைப் போல இருக்கும் என்று சுட்டியிருக்கிறார். இந்திராகாந்தி காலத்திய வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருந்தது? இந்துமாக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது.. அணிசேரா நாடுகளை ஒன்றிணைத்து அதற்குத் தலைமை தாங்குவது, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதற்கு தலைமையேற்பது. இன்னும் பலப்பல.. இந்திராகாந்தி காலத்தில் தான் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறக்கக்கூடாது.

அமெரிக்கா தெற்காசியாவில் இந்தியாவை உற்ற தோழனாக அறிவிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு, இந்தியா இதை ஏற்கப் போகிறதா என்பது தற்போதைய மிகப் பெரிய கேள்வி. அப்படி ஒருவேளை ஏற்றுக் கொண்டால் என்ன மாற்றங்கள் நடக்கக்கூடும்?

தற்போதைய அணுஉலை ஒப்பந்தம் வியாழனன்று அமெரிக்க செனட்டில் வாக்கெடுப்பிற்கு வருகிறது. அதாவது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, அந்த ஒப்பந்தத்தைப் பற்றிய ஒரு முடிவு அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கிடைத்திருக்கும்.

இனி ஆசியாவின் ஏனைய முக்கிய நாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றிக் காணலாம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து இராணுவ ஆட்சியின் பிடியில் தான் அதிக காலம் இருந்து வருகிறது. அதாவது அந்த நாட்டின் ஜெனரல்களே நாட்டை வழிநடத்துகிறார்கள். அமெரிக்கா பாகிஸ்தானை நல்ல காரியங்களுக்காக இதுவரை பயன்படுத்தியதில்லை. அதை ஒரு ஆயுதமாக, நம்பிக்கைக்குரிய ஆயுதமாக மட்டுமே உபயோகித்து வந்திருக்கிறது. தனக்குத் தேவைப்படும் வரை உபயோகப்படுத்திவிட்டு பின் தூக்கி எறியவும் தயங்காது. அதாவது குதிரை குழிபறித்து குப்புறத்தள்ளியதுபோல. இதுகாறும் பல உதாரணங்கள் உள்ளன. ஈராக், ஈரான், லிபியா, இந்த வரிசையில் தாலிபான்களும் ஒசாமாவும் சேர்த்தி. சதாம் உசேனைப் போருக்குத் தூண்டி பின் ஈராக்கின் மீது குண்டு வீசியது எந்த வகைத் துரோகமோ.. அதே வகைத் துரோகம் பாகிஸ்தானுக்கும் ஏற்படப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்க இந்த உபகாரத்தை அமெரிக்கா பாகிஸ்தானுக்குச் செய்யவேண்டியிருக்கும். இந்தியாவையும் WAR ON TERROR அமைப்பில் சேர்க்க எல்லா வகையான உதவிகளையும் செய்யும்.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் அமெரிக்கா ஆதரவு இருப்பதால் இந்தியாவிடம் அவ்வப்போது எல்லையில் தகராறு செய்து வருகிறது. அமெரிக்கா இந்தியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலையில், இந்த மாதிரியான செயல்கள் இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கப்படக்கூடும். அதனால் மென்மேலும் இந்தியாவின் அதிருப்தியை பங்களாதேஷ் வளர்த்துவரும். இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பாகிஸ்தானின் ஆதரவை இது நாடக்கூடும். ஆக பாதிக்கப்படப்போவது மீண்டும் இந்த இரண்டு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள்தான்.

நேபாளம்

மன்னருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் மாவோ கிளர்ச்சிக்குழுக்களைத் தன்வசப்படுத்த அமெரிக்கா முயன்று தோல்விகண்டுள்ளது. இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்க்கும் நேபாள மன்னர் வம்சம், பிற்பாடு, இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்க ஆளுமைப்பிரதேசமாக நேபாளத்தை மாற்ற அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் சீனாவிற்கு நிரந்தரமாக தொந்தரவுகளைக் கொடுக்கக்கூடிய மூலமாக நேபாளம் மாறலாம். நார்ஸ்டடாம் கணித்திருந்த மூன்றாம் உலகப்போருக்கான ஆரம்பம் நேபாளமாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. (அதே சமயம், நார்ஸ்டடாம் கணிப்பு என இனங்காணப்பட்ட சில விஷயங்கள் நடக்கவில்லை. நார்ஸ்டடாம் வகை கணிப்புகளை நம்புவது உங்கள் இஷ்டம் அல்லது சௌகரியம்).

இலங்கை

இந்திய அரசு தனது திராவிடத்தோழமைக் கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாகவும், அமெரிக்காவின் இந்தியசார்புடைமையின் காரணமாகவும், தமிழ்ஈழத்தீர்வுக்காக முடிவெடுக்க முன்வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்த சூழலில் புலிகள் இந்த மனமாற்றத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்த விஷயம். இந்தியாவில் காஷ்மீர்போலவும், முன்பு பாண்டிச்சேரி தனிப்பட்ட சிறப்பு மாகாணமாக இருந்ததைப் போலவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு அமைப்பின் கீழ் இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆனால் தனி இராணுவம், போலிஸ் மற்றும் சட்ட திட்டங்களுடன் இயங்க ஒரு திட்டத்தை வைக்கலாம். இதன் மூலம், ஒன்றுபட்ட இலங்கை என்ற சிங்களவாதக் கட்சிகளின் கோரிக்கையையும், தனிஅதிகாரத்துடன் கூடிய ஆட்சியுரிமை என்ற தமிழ்ஈழக் கோரிக்கையும் ஒருசேர உருவாக்க இந்தியா ஒரு திட்டத்தை முன் வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தனிநாடாக ஈழம் மலர்வதில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது என்பது அதன் தொடர்ந்த செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது. இராஜிவ் காந்தி சம்பந்தமான நினைவுகள் அகல்வது சிரமம் என்றாலும், தொடர்ச்சியான முயற்சிகளின்பேரில் புலிகளுக்கு இந்த வகையில் வெற்றி கிடைக்கக்கூடும். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உணவுப்பொருள் வழங்குவது பற்றியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது பற்றியும் மன்மோகன் சிங் சொல்லியிருப்பது, எம்ஜிஆர்-இந்திரா காலத்திய சூழல் மீண்டும் தொடங்குகிறதோ என்பதாகத் தோன்றுகிறது.

மியான்மர் (பர்மா)

மியான்மர் தற்போது இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. ஆங்சான்சூசியும் தொடர்ந்து போராடி வருகிறார். சமீபத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் பேரால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அதீத பாசம் மேலிடுகிறது. இந்த விஷயத்தில் சீனா ஒருபடி மேலே இருக்கிறது. அமெரிக்கா இந்தியாவை முன்னிறுத்தி சீனாவை சீண்டிப்பார்க்கும் சாத்தியம் இந்த மண்ணில் அதிகம். ஆசியான் நாடுகளில் உறுப்பினராக இருப்பது அந்த நாட்டுக்குப் பலம், ஆனால், அதிலிருந்து விலகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

மலாக்கா நீரிணை

மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா என்று பிரிக்காமல் மலாக்கா நீரிணை என்று பொதுவாகக் குறிப்பிடுவதில் ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மலாக்கா நீரிணையின் மேலுள்ள அக்கறையின் காரணமாகவே இந்த மூன்று நாடுகளின் மேல் அதீத கவனம் செலுத்துகின்றன. மலேசியாவில் தற்சமயம் அமெரிக்க ஆதரவு பிரதமர் இருக்கிறார், இந்தோனேசியாவில் முந்தைய இராணுவ தளபதி தற்போதைய அதிபராக முறையான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு வகையில் அமெரிக்க அனுதாபி. தாய்லாந்தில் தற்சமயம் ஏற்பட்ட இராணுவப்புரட்சி அமெரிக்காவிற்கு ஆகவில்லை. மலாக்கா நீரிணையில் ஏதாவது ஒருநாட்டில் பிரச்னையை ஏற்படுத்தி அந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதற்காக அங்கு அலையும் ஒரு நடவடிக்கை ஏற்படுகின்ற சூழ்நிலை தெரிகிறது. தாய்லாந்தின் தற்போதைய பிரச்னை, தென்தாய்லாந்தில் முஸ்லிம் பிரச்னை, வடக்குப் பக்கத்தில் மியான்மருடன் கூடிய சில சில்லுண்டிப் பிரச்னைகள். வழக்கம்போல முஸ்லிம் பிரச்னை அமெரிக்காவிற்கு கைகொடுக்கலாம். மலாக்கா நீரிணையில் இன்னுமொரு தீராப் பிரச்னை இருக்கிறது. இதை வைத்து எந்த நாட்டிலும் பிரச்னை பண்ணிக்கொண்டிராமல் சுற்றி வரவும் வாய்ப்பிருக்கிறது. அதுதான் கடற்கொள்ளையர் பிரச்னை. கப்பலைக் கடத்தி கலரை மாற்றி விற்றுவிடும் அதி நவீன கடற்கொள்ளையர்கள் உலவும் பகுதி, மலாக்கா நீரிணையாகும். சிங்கப்பூர் அமெரிக்காவின் அறுபதாண்டு கால உற்ற நண்பன். அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நேரடியாக யாருடனும் வம்புக்குப் போக அந்த நாடு விரும்புவதில்லை.

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் தற்போதைய அமெரிக்க ஆதரவு நாடு. அமெரிக்க இராணுவத் தளமும் உள்ள நாடு அது. வியட்நாம் மறப்போம் மன்னிப்போம் என்று அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டுள்ளது., ஆனாலும் கம்யூனிச சித்தாந்தத்தை இராணுவம் மட்டும் இன்னும் கைவிடவில்லை. இந்த இரண்டு நாடுகளால் அமெரிக்காவிற்கு அதிகம் ஆகப்போவது எதுவுமில்லை.

வடகொரியா மற்றும் தென்கொரியா

இந்த நாடுகளைப் பற்றி இதனை முன்வைத்து ஏற்கனவே விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

சீனா

சீனா தற்சமயம் இந்தியாவுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய முயல்கிறது. சீனா, அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதும், அணுஆயுதங்களை இந்தியா குறைக்கவேண்டும் என்பதான வேண்டுகோளும் தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போதைய தெற்காசியக் கொள்கையைப் பற்றிய தெளிவுடனும், தான் சம்பாதித்துக் கொடுத்த மாபெரும் தேர்தல் தோல்விகளோடும், அமெரிக்க ஜனாதிபதி வியட்னாமில் நடக்கும் ஆசிய பொருளாதாரக்கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசவிருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கிற நாடுகளுக்கிடையில் அவர் மிகுந்த அரசியல் நெருக்கடிகளுக்கிடையே பேசவிருக்கறார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் ஆளுவோர்களையும் நேரில் சந்தித்துப் பேச விருக்கிறார். என்ன விதமான குதிரைப் பேரம் பேசப்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிங்கப்பூரில் தேசியப் பல்கலைகழகத்தில் உரையாற்றிய புஷ், ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு முன்னெப்போதைவிடவும் அதிக வலுவாக இருக்கப்போவதாகவும் எரிபொருள் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான தேவைகளை ஆசிய நாடுகள் அடைவதற்காக உதவுவது தமது கடமைப்பாடு என்பதாக பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

அமெரிக்க செனட் அணுஉலை ஒப்பந்தத்தை நிறைவேற்றிருச்சு... அது சரிதான்...அதுக்காக மற்ற நாடுகளப் பத்தியெல்லாம் நீங்க சொல்றது எல்லாமே ஊகங்களா... இல்லை... ஏதாவது ஆதாரங்கள் இருக்குதா... கதை சொல்றமாதிரித் தெரியுதுங்க...