ஆரம்பமாகிறதா ஆசிய பனிப்போர்..?

பனிப்போர் என்ற பதம், இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான அறிவிக்கப்படாத மறைமுகப் போரை காரணம் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐந்து தசாங்கங்களில் (decades) அமெரிக்காவும் இரஷ்யாவும் தத்தம் பக்கத்தில் உலகநாடுகளைப் பிரித்துக் கொண்டு சண்டையில்லாமல், சணடையிட்டுக் கொண்டும், மற்றுமொரு மாபெரும் சண்டைக்கும் தயாராகிக் கொண்டிருந்தன.

கத்தியின்றி யுத்தமின்றி எதிரியை அழிப்பதான ஆதிகாலத்து சாணக்கியத்தனத்தை, கால மாற்றத்தால் தவிர்க்க இயலாது போன பொருளாதார பலவீனத்தில் வீழ்ந்த இரஷ்யாவின் மேல் பிரயோகித்து, அமெரிக்கா தனது வெளிப்படையான எதிரியை தகுதியிழக்கச் செய்தது. எனவே, அமெரிக்காவிற்கு இவ்வுலகில் சரிசமமான வலுவான எதிரிகள் சற்றேறக்குறைய யாரும் இல்லாமல் போனார்கள். விளைவு, அமெரிக்க ஏகாதிபத்தியம் (American Hegemony). உலகப் போலீஸ்காரன் பட்டம். எங்கும் படையெடுத்து யாரையும் கொல்லும் யதேச்சதிகார உரிமை.

சரி, இதற்கும் ஆசியப் பனிப்போருக்கும் என்ன சம்பந்தம் ?

ஆசிய பனிப்போர் என்பது தற்போது தெளிவாக உருவகம் பெறவில்லை என்றாலும், அப்படி ஒரு விளைவு தற்போது அரசல் புரசலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆசியப் பனிப்போரில் இடம்பெறப்போகும் நாடுகள் யாவை? யார் யார் எந்தப் பக்கம்?

தற்போதைய காலகட்டத்தைக் கவனித்தோமானால் ஒன்று புலப்படும். அதாவது அமெரிக்காவின் மேலாண்மை ஆசியப் பகுதியில் பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. மட்டுமில்லாமல், மென்மேலும் பலவீனமாகிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான், இந்த ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். அமெரிக்கா இந்த மறைமுகப் போரில் வெல்லுமா வெல்லாதா என்பதற்கான முக்கியமான காரணியாக இந்தியா இருக்கிறது. ஆக இந்தியாவின் சௌத்பிளாக் அதிகாரிகள் இந்தப் பிராந்தியத்தின் தலைவிதியை மாற்றும் உபாயத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதை எவ்வாறு அவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த 20 ஆண்டுகளின் தலையெழுத்து மாறப்போகிறது.

கிழக்காசியாவின் தற்போதைய வலுவான, இராணுவத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி, இரண்டு நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான். சீனாவிற்கு இந்தப் பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இந்துமாக் கடலுக்குள் தன் ஆதிக்கம் இருந்தால் போதுமானது என்பதாகவே இன்றுவரை இருந்து வருகிறது. பனிப்போர் காலத்திலேயே அமெரிக்கா இந்தியாவின் அண்டை நாடுகளை ஆசைகாட்டி இழுக்க முயற்சி செய்தது. அதன் விளைவாகவே இந்தியாவிற்கு ஆதரவாக பங்களாதேஷ் உருவானது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு எத்தகையது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க முயற்சித்த போதுதான், இந்தியாவின் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுக் கொள்கை உருவானது. இதில் இன்னொன்றும் உள்ளது, அது, அப்போதைய தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பற்றியது. அதை நடுவன் அரசு சமாளித்த விதம் பற்றி வேறொரு பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது . பிற்பாடு வங்காளதேஷமும் சிட்டகாங்கில் அமெரிக்கத் தளம் அமைக்க இடம் கொடுத்து சோரம் போனது. ஆக இந்தியாவைச் சுற்றிலும் அமெரிக்க ஆதரவு நாடுகள்.

தற்போதைய அமெரிக்கப் பொருளாதார, இராணுவச் சிக்கல்களில் அமெரிக்கா ஆய்வாளர்களின் இந்தப் பிராந்தியத்தைப் பற்றிய கவனம் குறைந்ததால், வடகொரியா அணுகுண்டு வெடித்தவுடன், மேலும் இந்தப் பிரச்னை சிக்கலாகிப் போனது. இந்தியாவுடனான பொருளாதார ரீதியிலான தொடர்புகள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் வடகொரிய ஆதரவுச் சூழலில், மேலும் அமெரிக்கப் படையை இப்பகுதியில் குவிக்க முடியாத காரணங்களால், இந்தப் பனிப்போரைப் பற்றிச் சிந்திப்பது சரியானதாக இருக்கும்.

சீனாவின் ஆயுதக் குவிப்பு, உள்ளூர் ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதச் சந்தையில் வியாபாரம், இது போக வடகொரியாவிற்கான உதவி, இதையெல்லாம் கவனத்தில் கொண்டால், அமெரிக்காவின் மேலாதிக்க எண்ணத்திற்கு கிழக்காசியாவில் இடமில்லை என்பதாக சீனாவின் கிழக்காசியக் கொள்கை உள்ளது. தற்சமயம் அமெரிக்கா சீனாவின் பிரச்னையாக கருதுவது, தாய்வான் மற்றும் வடமேற்கில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினரும் தான். இதுவரை சீன இஸ்லாமியர்களால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், ஒரு சமூக மாற்றம் அங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சீனாவிற்கு பிற்பாடு தலைவலியாகத் தான் இருக்கப் போகிறது. அமெரிக்கா தாய்வானிற்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் வெளிப்படையாகவே செய்து கொடுத்து சீனாவை அவ்வப்போது சீண்டி வருகிறது. அதன் பிரதியுபகாரமாகத்தான் வடகொரியாவின் ஆதரவு நிலையை சீனா வெளித்தெரியாமல் அதேசமயம் மத்தியஸ்தர் போலக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே, உலகின் மாபெரும் இராணுவ பலமுடைய மற்றும் அணுஆயுத நாடுகள் அதிகம் இருக்கும், இந்தப்பிராந்தியத்தில் ஒன்று சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ தான் அமெரிக்கா சேர்ந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சீனாவுடனான தொடர்பை விட தற்சமயம் இந்தியாவுடனான தொடர்பு மிகச் சுமுகமாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்தியாவின் மௌனக்கொள்கை மற்றும் இலங்கை-அமெரிக்க இராணுவ கூட்டுப் பயிற்சிகளில் கண்ணை மூடிக்கொள்வது, இலங்கை அரசிற்கு பாகிஸ்தானின் உதவி போன்றவற்றை இந்தியா கண்டும் காணாது இருப்பது, நடுவன் அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிய கனமான கேள்வியை எழுப்பக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் கிழக்காசியக் கொள்கை என்ன என்பது இராணுவ ஆய்வாளர்களுக்கு இன்னும் சரியாக புரிபட்ட பாடில்லை.

ஆக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கிழக்காசியாவில் ஒரு பந்தயம் ஆரம்பமாகி விட்டது. யார் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவது என்பது தான் அது. இந்தப் பந்தயம் தான் ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். இனி, இந்த ஆசியப் பனிப்போரின் கதாநாயகர்கள், வில்லன்கள், துணைநடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

(தொடரும்)

6 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

test

Anonymous said...

Good Post..

said...

உங்கள மாதிரி ஆளுங்க அடிக்கடி பிரயோகிக்கும் பதம் எனக்கு ஏதோ நினைவிற்கு வந்துத் தொலைகிறது...

அந்தப் பதம் Conspiracy Theory

"A theory seeking to explain a disputed case or matter as a plot by a secret group or alliance rather than an individual or isolated act."

உங்கள் எண்ணத்திற்கு நீங்கள் கொடுக்கும் Proof யாவை ?

செய்தித் தொடுப்புகள், ஒப்பந்தங்கள், UN resolutions போன்ற வகையில் உங்கள் Proof இருந்தால் உங்கள் தியரி வலுப்பெரும் இல்லையென்றால் மற்றுமொரு Commie propaganda against america என்று தான் பார்க்கப் படும்.

said...

திரு,
//இந்தியாவின் கிழக்காசியக் கொள்கை என்ன என்பது இராணுவ ஆய்வாளர்களுக்கு இன்னும் சரியாக புரிபட்ட பாடில்லை//
அப்படி ஒண்ணு இருப்பது மாதிரி தெரியவில்லை. அமெரிக்காகாரன் என்ன சொன்னாலும் தலையாட்டப்போறாங்க. அனா ஜ.நா விஷயத்துல அமெரிக்கா சசிதருணை ஆதரிக்காதது, பம்பாய் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஆதரவு இருக்குன்னு அப்படிங்கிற கருத்துக்கு அமெரிக்காவின் கருத்து இது போன்ற காரணத்தினால் நம்ம ஆளுங்க கொஞ்சம் கடுப்பாயி கொஞ்சம் எதிர்ப்பு காட்ட ஆரம்பிச்சி இருக்காங்க பாக்கலாம் என்ன பண்றாங்கன்னு.

said...

வஜரா...

இதில் கான்ஸ்ப்ரேஸி தியரியுமில்லை வெங்காயமுமில்லை.

இதற்கெல்லாம் பலவகையான ஆதாரங்கள் உள்ளன. பல ஆதாரங்கள் வெளிப்படையாக சுட்ட இயலாதவை. தேசாந்திர விஷயங்களில் எதுவும் வெளிப்படையாக அதுவும் இந்த மாதிரி ஊடகங்களில் பேச இயலாது. இது உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எனவே பொறுங்கள், கவனித்து வாருங்கள். வேண்டுமானால் தற்சமயத்திற்கு rand.org தளத்திற்குச் சென்று படித்து வாருங்கள்.

said...

சந்தோஷ்...

சசிதருணின் வாய்ப்பு இழந்ததற்குக் காரணம், வேறு. அதைப்பற்றி பல்வேறு கூற்றுக்கள் நிலவுகின்றன. ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சிக்கும் இந்தியாவிற்கு, ஒரு இந்தியர் தலைமைப் பொறுப்பில் வந்தால் மொத்த பலமும் வந்த மாதிரி. எனவே சசிதருணின் வாய்ப்பு இழப்பு, இந்தியாவிற்கு பாதுகாப்புசபை நிரந்தரப் பதவி கிடைக்கப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு என்று "சந்தோஷம்" கொள்ளுங்கள்.

மேலும், தென்கொரிய நபர் ஐநாவுக்கு தலைமையேற்றால் வடகொரியா விஷயத்தில் புகுந்து விளையாடலாம் என்பது மற்ற காரணமாக இருக்கலாம்.