ஆரம்பமாகிறதா ஆசியப் பனிப்போர்?- பகுதி-2

கிழக்காசிய பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நாடுகள் அணுஆயுத பலத்தைப் பெற்ற பிரதேசமாக உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரை ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, விரைவில் ஈரான். மேற்கத்திய நாடுகளில், அமெரிக்கா, லண்டன், மற்றும் ப்ரான்ஸ் ஆகியநாடுகள் மட்டும்தான் அணு ஆயுத நாடுகளாக தங்களை அறிவித்துள்ளன. இஸ்ரேல் வைத்திருப்பதாகச் சொல்கிறது, இதுவரை நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனைக்கு ஐநா சபையின் பாதுகாப்புக்குழுமம் விதித்துள்ள தடைகளை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமம் இருக்கப்போவது கண்கூடு. இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அமெரிக்கா ரஷ்யாவுடனும் சீனாவுடனும் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியதானது. அதாவது அமெரிக்கா வடகொரியாவை அடிக்கலாம், ஆனால் மயிலிறகால் மட்டுமே அடிக்கலாம். அதைவிட கனமான எந்தப் பொருள்கொண்டும் அடிக்கக்கூடாது என்பதுதான் நிபந்தனையே. அமெரிக்கா இதற்கு உடன்பட மறுத்தால் இந்த இருநாடுகளும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும். அது அமெரிக்காவிற்கு பெருத்த அவமானம். எனவே நிபந்தனைகளுக்குட்பட்ட இந்த ஐநா சபை தீர்மானம், வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் இரண்டாவது தோல்வி.

சீனாவைப் பற்றிய அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கைகள் பெரும்பாலும் ஊகத்திலே எழுதப்பட்டு வருவதால் அவ்வப்போது சீனா ஆச்சரியங்களை அள்ளித்தருகிறது. இதற்கு காரணம் சரியான செய்திகள் சீனாத் தரப்பிலிருந்து ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை. சீனா வடகொரியாவிற்கு ஆதரவாக இருக்கக் காரணம் என்ன என்று ஆராயப்போனால்தான் இந்த ஆசியப் பனிப்போரின் ஆணி வேரைக் காணமுடியும்.

வியட்நாம் தோல்விக்குப் பின்னைய காலகட்டத்தில் கிழக்காசியப் பிராந்தியத்தில் தனக்கு ஒரு வலுவான பிரதிநிதித்துவம் வேண்டும் என அமெரிக்கா நினைத்தது. ஆகவே பல்வேறு நாடுகளையும் தளங்களையும் நிர்மாணித்துக் கொள்ளலானது. ஜப்பானில் தொடங்கி டைகோ கார்சியா தீவு வரை பல்வேறு தளங்கள் பல்வேறு நாடுகள், சிங்கப்பூர் உட்பட. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இடம் கிழக்காசியா. அமெரிக்காவிடம் தோற்ற நாடுகள் அதிகம் உள்ள பகுதியும் இதுதான்.

90கள் வரையில் கிழக்காசியாவில் வலுவான நாடாக சீனா மட்டுமே இருந்து வர, ஏனைய அமெரிக்க தோழமை நாடுகள் தாங்களும் வலுவான நாடுகளாகக் காட்டிக் கொண்டிருந்தன. இந்தியா அணுகுண்டு வெடித்ததும், Y2K சம்பந்தமாக புற்றீசல்கள் போல படித்த இந்தியர்கள் அமெரிக்கா நோக்கி படையெடுத்ததும், இந்தியாவைப் பற்றிய கணிப்பை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டியதானது. கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை மேலோங்கி வைத்துக்கொள்ள அமெரிக்கா பல்வேறு யுத்திகளைக் கடைப்பிடித்து வைத்தது.

அதே சமயம் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைமை கிழக்காசியப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எண்ணெய்க்காகவும், இதர பொருளாதார போக்குவரத்திற்காகவும் தென் பசிபிக், மலாக்கா, தென்சீனக் கடல் பிராந்தியங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன அனைத்துக் கடற்பகுதிகளிலும் அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது. வடகொரியப் பிரச்னையை அணுகுண்டு வெடிப்புக்கு முன்னதாக உள்ள நிலையில் அமெரிக்கா அணுகிய விதத்தில், மற்றுமொரு ஈராக் அணுகுமுறை தென்பட்டது. இதற்கு வலுச் சேர்க்க மேலும் சில காரணங்கள் இருந்தன. அதாவது, ஜப்பானும், தென்கொரியாவும், தத்தமது மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தன. தொடர்ந்து அங்கு இருப்பதற்கான வலுவான வேறுகாரணங்களும் இல்லையென்பதால், வடகொரியப் பிரச்னையில் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட அதிகம் வாய்ப்புகளிருந்தன. இந்தச் சூழலில்தான் சீன எல்லையில் வடகொரியா அணுகுண்டுச் சோதனை நடத்தியது. சீனாவிற்குத் தெரியாமல் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்கும் என்பது வெறும் சால்ஜாப்பாகத் தான் இருக்கமுடியும்.

இதற்கிடையில், முதலாம் ஈராக் போரைத் தொடர்ந்து இஸ்ரேலுக்காக மத்திய கிழக்கில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டி வந்தது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானையும், மறுபக்கம் ஈராக்கையும் பின் தொடர்ந்து ஈரான், சிரியா, ஜோர்டான், எகிப்து, கடைசியில் சவுதி அரேபியா என்று ஒரு நீண்ட நாள் திட்டம் ஒன்று யேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஈராக் போருக்கு முன் பரபரப்பாகவும் இரசியமாகவும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி, ஈராக்கில் இன்றுவரை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தோல்வி போன்ற நிகழ்வுகள், அமெரிக்க இராணுவம் ஏனைய பகுதிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. குறிப்பாக, வடகொரியா விவகாரத்தில் ஐநா பாதுகாப்புசபைத் தீர்மானம் வெறும் தீர்மான அளவிலே நிறைவேற்றப் பட்டதற்குக் காரணம், இன்றைய சு{ழலில் அமெரிக்காவின் ஆசியாவில் வலுவாக தலையிட முடியாத பலவீனம் தான்.

சரி, கிழக்காசியக் கொள்கையில் என்னதான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்த நாடும் தன்னிச்சையாக தன்னைவிட வலுவான நாடாக இந்தப் பிராந்தியத்தில் வரக்கூடாது. உலகின் எந்தப் பகுதிக்கும் பெண்டகன் உத்தரவிட்ட நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கப் படை அங்கு இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்டு அறிவிக்கப்படாத அமெரிக்க இராணுவக் கொள்கை. அதற்குத் தகுந்தமாதிரிதான், தனது தளங்களையும் தோழமை நாடுகளையும், பிரச்னைகளையும் அமெரிக்கா உருவாக்குகிறது. பொதுவாக தனது மேலாண்மையை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா பெரும்பாலும், அப்பிராந்தியத்தில் ஏதாவது ஒரு பிரச்னையை தனதாக எடுத்துக் கொள்ளும். காஷ்மீரை பலமுறை ஐநா சபையில் எடுக்க முயன்று, இந்தியாவின் பலமான எதிர்ப்பால் இன்று வரை அதில் அமெரிக்காவால் தலையிட முடியவில்லை. அடுத்து உள்ளது புலிகள் பிரச்னை. அதில் அமெரிக்கா எந்த மாதிரி முன்பு தலையிட்டது என்பதைச் சொல்ல இது உசிதமான பதிவல்ல. தற்சமயம் வடகொரியா மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய பிரச்னைகளை ஐநா சபை முன் வைத்து விவாதித்து எதில் தலையிடலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறது.

வடகொரியாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. பர்மாவைத் தாக்க வலுவான காரணம் இல்லாமல் உள்ளது. தற்சமயம் தாய்லாந்து இராணுவ அரசை அமெரிக்கா குறைகூற ஆரம்பித்துள்ளது. தென் தாய்லாந்தின் முஸ்லிம் பிரதேசத்தில் அமெரிக்கத் தயவால் புதிய கலவரங்கள் உருவாகக்கூடும். அதன் மூலம் அமெரிக்கா அங்கும் காலுன்றுவதற்கு அதிகம் வாய்பிருக்கிறது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், அல்லது ஏற்படுத்திக் கொண்டாலும், தற்சமயம் அமெரிக்க இராணுவம் இப்பகுதியில் குவிக்கப்பட தயாராக உள்ளதா என்பதுதான் கேள்வி. அமெரிக்க நாட்டின் மேல் தாக்குதல் நடத்தப்படும் அல்லது அதன் பொருளாதார இராணுவத் தளங்களுக்கு ஆபத்து என்றால்தான் அமெரிக்க செனட்டில் இந்த மாதிரியான இராணுவப் படைக்குவிப்பிற்கு ஆதரவு பெற முடியும். செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் ஒசாமாவையும் சதாமையும் காரணம் காட்டினார்கள். ஆனால் கிழக்காசியாவில் என்ன செய்ய முடியும். வடகொரியா அமெரிக்கா மீது குண்டு வீசும் என்றா..??

வடகொரியா தீவிரவாதிகளுக்கு அணுஆயுதத்தை விற்கக்கூடும் என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அந்த நாட்டால் அமெரிக்க இறையாண்மைக்கு ஆபத்து கிடையாது. மேலும் வடகொரியா, அமெரிக்கா மாதிரி வம்படியாக எந்த நாட்டின்மேலும் போர் தொடுத்தது கிடையாது. தென்கொரியாவில் நடத்திய போரைத்தவிர வேறு எந்தப்போருக்கும் அனாவசியமாக அந்த நாடு போனது கிடையாது. எனவே, இது ஒரு முழுமையான தற்காப்பு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. வடகொரியாவிற்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய அமெரிக்கப் பிரதேசம், ஹவாய். ஹவாய் என்பது பொருளாதார முக்கியத்துவம் அதிகம் இல்லாத ஒரு அமெரிக்கப் பகுதி. மேலும் தற்சமயம் அணு ஆயுதத்தை ஏவுகணையில் வைத்துச் செலுத்துமளவிற்கு சிறிய அளவில் தயாரிக்க இன்னும் வடகொரியா தயாரகவில்லை என்பதே நிதர்சனம். ஆக அமெரிக்கா வடகொரியாவை ஒரு தகுதி வாய்ந்த எதிரியாக சித்தரிக்க இயலாத சூழ்நிலை.

ஆனால் என்ன இருக்கவே இருக்கிறது அல்காயிதா (Al-Qaeda) மற்றும் ஜமாயே இஸ்லாமியா (Jama-e-Islamia). தற்சமயம் ஒசாமா உயிருடன் இருக்கிறாரா என்று பெண்டகனுக்கும், சவுதி அரசிற்கும், ஜெர்மனி அரசிற்கும் மட்டும்தான் தெரியும். அவசரம் அவசரமாக அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா ஏதோ ஒரு ஒலிநாடாவை ஒளிபரப்பி மறுப்பு விடக் காரணம் என்ன. இதை ஏன் அல்ஜசீரா தொலைக்காட்சி செய்யவில்லை.

ஊகத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை ஒசாமா தற்போது இறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டால், அவரின் அல்காயிதா இயக்கம் நிச்சயம் குலைந்து காணாமல் போக அத்தனை சாத்தியங்களும் உண்டு. அப்படிப் போனால், அமெரிக்கா யாரைக் காட்டி இனி போர் தொடுக்க முடியும். அல்காயிதா தவிர ஏனைய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் தனது இலக்கை மட்டுமே தாக்குகின்றன. புலிகள் இலங்கை இராணுவத்தையும் மற்றும் தனக்கு உபத்திரம் செய்வதாக எண்ணி இந்திய இராணுவத்தையும் தாக்கினர். ஆனால் வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தங்களது திறமையைக் காட்டியதில்லை. ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலைத் தவிர வேறு யாரையும் தாக்கியதில்லை. தாலிபான்கள், முன்பு இரஷ்யாவையும் தற்போது அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானில்தான் எதிர்க்கிறார்கள். அவர்கள் யாரும் அமெரிக்கா சென்று தாக்கியதில்லை. எனவே மற்றோரைத் தாக்க அமெரிக்காவிற்கு அல்காயிதா மற்றும் WAR on TERROR என்ற காரணம் தேவைப்படுகிறது. எனவே ஒசாமா தற்சமயம் அமெரிக்காவிற்காகவேனும் சாகப்போவதில்லை.

இத்தகையச் சூழலில் அமெரிக்காவிற்கு இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவைத் தவிர வேறு சிறந்த தோழமைத் தகுதி வாய்ந்த நாடு இருக்க முடியாது. இந்தியாவுடனான புதுத் தோழமைக்காக அமெரிக்கா தனது தற்போதைய தோழமை நாடான பாகிஸ்தானுடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இந்தப் புதுத் தோழமை ஒருவேளை வலுப்பெற்றால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை-தமிழ்ஈழம், மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளில் ஏற்படப்போகும் மாற்றங்களை வரும் பதிவில் அலசுவோம்.

ஆரம்பமாகிறதா ஆசிய பனிப்போர்..?

பனிப்போர் என்ற பதம், இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான அறிவிக்கப்படாத மறைமுகப் போரை காரணம் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐந்து தசாங்கங்களில் (decades) அமெரிக்காவும் இரஷ்யாவும் தத்தம் பக்கத்தில் உலகநாடுகளைப் பிரித்துக் கொண்டு சண்டையில்லாமல், சணடையிட்டுக் கொண்டும், மற்றுமொரு மாபெரும் சண்டைக்கும் தயாராகிக் கொண்டிருந்தன.

கத்தியின்றி யுத்தமின்றி எதிரியை அழிப்பதான ஆதிகாலத்து சாணக்கியத்தனத்தை, கால மாற்றத்தால் தவிர்க்க இயலாது போன பொருளாதார பலவீனத்தில் வீழ்ந்த இரஷ்யாவின் மேல் பிரயோகித்து, அமெரிக்கா தனது வெளிப்படையான எதிரியை தகுதியிழக்கச் செய்தது. எனவே, அமெரிக்காவிற்கு இவ்வுலகில் சரிசமமான வலுவான எதிரிகள் சற்றேறக்குறைய யாரும் இல்லாமல் போனார்கள். விளைவு, அமெரிக்க ஏகாதிபத்தியம் (American Hegemony). உலகப் போலீஸ்காரன் பட்டம். எங்கும் படையெடுத்து யாரையும் கொல்லும் யதேச்சதிகார உரிமை.

சரி, இதற்கும் ஆசியப் பனிப்போருக்கும் என்ன சம்பந்தம் ?

ஆசிய பனிப்போர் என்பது தற்போது தெளிவாக உருவகம் பெறவில்லை என்றாலும், அப்படி ஒரு விளைவு தற்போது அரசல் புரசலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆசியப் பனிப்போரில் இடம்பெறப்போகும் நாடுகள் யாவை? யார் யார் எந்தப் பக்கம்?

தற்போதைய காலகட்டத்தைக் கவனித்தோமானால் ஒன்று புலப்படும். அதாவது அமெரிக்காவின் மேலாண்மை ஆசியப் பகுதியில் பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. மட்டுமில்லாமல், மென்மேலும் பலவீனமாகிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான், இந்த ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். அமெரிக்கா இந்த மறைமுகப் போரில் வெல்லுமா வெல்லாதா என்பதற்கான முக்கியமான காரணியாக இந்தியா இருக்கிறது. ஆக இந்தியாவின் சௌத்பிளாக் அதிகாரிகள் இந்தப் பிராந்தியத்தின் தலைவிதியை மாற்றும் உபாயத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதை எவ்வாறு அவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த 20 ஆண்டுகளின் தலையெழுத்து மாறப்போகிறது.

கிழக்காசியாவின் தற்போதைய வலுவான, இராணுவத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி, இரண்டு நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான். சீனாவிற்கு இந்தப் பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இந்துமாக் கடலுக்குள் தன் ஆதிக்கம் இருந்தால் போதுமானது என்பதாகவே இன்றுவரை இருந்து வருகிறது. பனிப்போர் காலத்திலேயே அமெரிக்கா இந்தியாவின் அண்டை நாடுகளை ஆசைகாட்டி இழுக்க முயற்சி செய்தது. அதன் விளைவாகவே இந்தியாவிற்கு ஆதரவாக பங்களாதேஷ் உருவானது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு எத்தகையது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க முயற்சித்த போதுதான், இந்தியாவின் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுக் கொள்கை உருவானது. இதில் இன்னொன்றும் உள்ளது, அது, அப்போதைய தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பற்றியது. அதை நடுவன் அரசு சமாளித்த விதம் பற்றி வேறொரு பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது . பிற்பாடு வங்காளதேஷமும் சிட்டகாங்கில் அமெரிக்கத் தளம் அமைக்க இடம் கொடுத்து சோரம் போனது. ஆக இந்தியாவைச் சுற்றிலும் அமெரிக்க ஆதரவு நாடுகள்.

தற்போதைய அமெரிக்கப் பொருளாதார, இராணுவச் சிக்கல்களில் அமெரிக்கா ஆய்வாளர்களின் இந்தப் பிராந்தியத்தைப் பற்றிய கவனம் குறைந்ததால், வடகொரியா அணுகுண்டு வெடித்தவுடன், மேலும் இந்தப் பிரச்னை சிக்கலாகிப் போனது. இந்தியாவுடனான பொருளாதார ரீதியிலான தொடர்புகள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் வடகொரிய ஆதரவுச் சூழலில், மேலும் அமெரிக்கப் படையை இப்பகுதியில் குவிக்க முடியாத காரணங்களால், இந்தப் பனிப்போரைப் பற்றிச் சிந்திப்பது சரியானதாக இருக்கும்.

சீனாவின் ஆயுதக் குவிப்பு, உள்ளூர் ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதச் சந்தையில் வியாபாரம், இது போக வடகொரியாவிற்கான உதவி, இதையெல்லாம் கவனத்தில் கொண்டால், அமெரிக்காவின் மேலாதிக்க எண்ணத்திற்கு கிழக்காசியாவில் இடமில்லை என்பதாக சீனாவின் கிழக்காசியக் கொள்கை உள்ளது. தற்சமயம் அமெரிக்கா சீனாவின் பிரச்னையாக கருதுவது, தாய்வான் மற்றும் வடமேற்கில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினரும் தான். இதுவரை சீன இஸ்லாமியர்களால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், ஒரு சமூக மாற்றம் அங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சீனாவிற்கு பிற்பாடு தலைவலியாகத் தான் இருக்கப் போகிறது. அமெரிக்கா தாய்வானிற்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் வெளிப்படையாகவே செய்து கொடுத்து சீனாவை அவ்வப்போது சீண்டி வருகிறது. அதன் பிரதியுபகாரமாகத்தான் வடகொரியாவின் ஆதரவு நிலையை சீனா வெளித்தெரியாமல் அதேசமயம் மத்தியஸ்தர் போலக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே, உலகின் மாபெரும் இராணுவ பலமுடைய மற்றும் அணுஆயுத நாடுகள் அதிகம் இருக்கும், இந்தப்பிராந்தியத்தில் ஒன்று சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ தான் அமெரிக்கா சேர்ந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சீனாவுடனான தொடர்பை விட தற்சமயம் இந்தியாவுடனான தொடர்பு மிகச் சுமுகமாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்தியாவின் மௌனக்கொள்கை மற்றும் இலங்கை-அமெரிக்க இராணுவ கூட்டுப் பயிற்சிகளில் கண்ணை மூடிக்கொள்வது, இலங்கை அரசிற்கு பாகிஸ்தானின் உதவி போன்றவற்றை இந்தியா கண்டும் காணாது இருப்பது, நடுவன் அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிய கனமான கேள்வியை எழுப்பக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் கிழக்காசியக் கொள்கை என்ன என்பது இராணுவ ஆய்வாளர்களுக்கு இன்னும் சரியாக புரிபட்ட பாடில்லை.

ஆக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கிழக்காசியாவில் ஒரு பந்தயம் ஆரம்பமாகி விட்டது. யார் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவது என்பது தான் அது. இந்தப் பந்தயம் தான் ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். இனி, இந்த ஆசியப் பனிப்போரின் கதாநாயகர்கள், வில்லன்கள், துணைநடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

(தொடரும்)

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனை

இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு ஏற்கனவே பலமுறை மாற்றியெழுதியாகிவிட்ட அமெரிக்காவின் கிழக்காசியக் கொள்கையை மறுபடியும் மாற்றியெழுதும் வல்லமையைக் கொண்டதாகும். இப்பகுதியில் உள்ள ஜhம்பவான்களான ஜப்பானும் தென்கொரியாவும் இனி அணுஆயுதங்களை வாங்கப்போகிறhர்களா அல்லது செய்யப்போகிறhர்களா என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும். வடகொரியாவிற்கு உள்ள தைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஏன் என்பதை இக் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம் வடகொரியாவை,, ஒரு 56 வருடங்களுக்குப் பின்னால்.

இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டிருந்த சூழலில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் தொடங்கி உக்கிரமாக வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்த காலம் அது. போரில் தோற்கடிக்கப்படும் முன் ஜப்பான் கொரியா முழுமையும் தனது காலனியாக்கி வைத்திருந்தது. தோற்கடித்த அமெரிக்கா சீனாவின் மேல் கண்வைத்துக் கொண்டே கொரியாவைத் தான் அடைந்த பரிசாக நினைத்தது. கண்மூடித்திறப்பதற்குள், சத்தமில்லாமல் ரஷ்யா கொரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விழித்துப் பார்த்த அமெரிக்கா ரஷ்யாவுடன் சண்டையிடத் தயாரில்லை, எனவே சமரசம் உண்டாயிற்று. வடபக்கம் கொரியா கம்யூனிஸ நாடாகவும் தென் கொரியா சோஷலிஸ நாடாகவும் 38 நிலவரைக் கோடு என்ற எல்லைக்கோட்டைக் கொண்டு இரண்டாகப் பிரித்துக் கொண்டார்கள். இவ்வாறாக 1942ல் வடகொரியாவும் தென் கொரியாவும் உண்டாயிற்று. ஆனால் இரண்டு பக்கமும் ஒரே குடும்பத்தின் சொந்தக்காரர்கள் இருந்தனர். பிரிவினை பிரிவினை தான், யாரும் யாரையும் பார்க்க முடியவில்லை. மக்கள் ஒன்றுபட்ட கொரியா உருவாகும் என்ற கனவில் இருக்க, ஆட்சியாளர்கள் எல்லைக் கோடுகளில் படையைக் குவிப்பதாக இருந்தனர். அவ்வப்போது ஊடுருவி ஆயிரக்கணக்கில் மறுபக்கத்தினரைக் கைது செய்து போர்க்கைதிகளாக்கி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர் இருதரப்பாரும்.

1949ல் ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் நிலைகளை விட்டு பின்வாங்கின. ரஷ்யா உள்ளுர் மக்களைக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துடனான ஒரு பலமான இராணுவ அமைப்பை வடகொரியாவில் விட்டுச் சென்றிருந்தது. தென்கொரியாவிலோ அமெரிக்கா ஒரு ஜனநாயக அமைப்பை விட்டுச் சென்றிருந்தது. இதற்கிடையில் 1950ல் ஒரு கொரியப் போர் நடந்தது. வடகொரியா பெருமளவு தென் கொரியாவைக் கைப்பற்றிக் கொள்ள, அமெரிக்காவும் உதவிக்குப் போனது. தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுகாப்புச் சபையை உதவிக்குக் கூப்பிட்டது. ஒரு கூட்டமாக 14 நாடுகள் படைகளைக் கொண்டு வந்தன. போர் நடந்தது. ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்த வடகொரியாவை கூட்டணிப் படைகள் துரத்திச் சென்றன. சீனாவின் எல்லை வரைக்கும் போவதான திட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜெனரல் மெக்ஆர்தர் முன் வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் சீனாவைத் தேவையில்லாமல் சீண்டுகிறோமோ என்று தயங்கி அனுமதி அளிக்க மறுத்தார். கோபத்துடனிருந்த மெக்ஆர்தர் ஜனாதிபதி ஆணைக்கு எதிராக கருத்துச் சொல்ல அவர் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் சீனா தனது படையினரை எல்லையில் இரகசியமாக குவித்து வைக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எந்த எதிர்ப்புமில்லாமல் முன்னேறிச் சென்ற அமெரிக்க இராணுவம் திடீரென்று 1,80,000, பேர் கொண்ட சீனப் படையால் சுற்றி வளைக்கப்பட, போட்டது போட்டபடி பல ஆயிரம் உயிர்களை இழந்து அதே 38-நிலவரைக்கோடு வரை அமெரிக்க இராணுவம் திரும்பி ஓடியது. அன்றிலிருந்து இன்று வரை 38-நிலவரைக்கோடே இரண்டு கொரியாக்களுக்கும் எல்லையாகிப் போனது.

இதன்பின் வந்த பனிப்போர்க் காலங்களில் வடகொரியா சீனா, இரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகவும், தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்து வந்தன.

பனிப்போர்க்காலம் மறைந்தது.

பல உதவிகள் வடகொரியாவிற்குக் கிடைக்காமல் போயின. ஒரு பக்கம் இராணுவ அச்சுறுத்தல் மறுபக்கம் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம். வடகொரியா சமாளித்துத்தான் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சில சமயங்களில் ஆச்சரியமாக தென்கொரியா உணவுப் பொருள்கள் அனுப்பியெல்லாம் உதவி செய்திருக்கிறது. எதிரி நாடு ஆனால் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டால் கொடுத்து உதவுவது. சகோதரர்களுக்குள் ஏற்படுகின்ற என்ன என்று புரியாத ஒருவகையான பகை அது.

சரி,. அணு ஆயுதம் தயாரித்த கதையைப் பற்றிப் பார்ப்போமா..

வடகொரியாவிற்கு 1970-80களில் நிறைய நாடுகளுக்கு இருந்த ஆசையைப் போல அணுஆயுதம் தயாரித்தால் தன்னைத் தாக்க யாரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் இதற்கு வித்திட்டது. ரஷ்யா இருக்கும் வரை அரசல் புரசலாக தனது ஆதரவு நாடுகளுக்கு அது உதவிக் கொண்டிருந்தது. பிற்பாடு இந்தியா பட்ட சிரமம் போலவே வடகொரியாவிற்கும் அணுவிஞ்ஞானத்தை மேம்படுத்த வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் போனது. சில குறுக்கு வழிகளெல்லாம் கண்டு பிடித்து இந்தத் தொழில்நுட்பத்தை வளர்க்கலானார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையில் இந்த விஷயத்தில் எந்த அளவு வளர்ந்திருக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு இரும்புத்திரை கொண்ட நாடாக இருந்தார்கள். அமெரிக்கா எப்படியோ மோப்பம் பிடித்து பொருளாதாரத்தடை அந்தத்தடை இந்தத்தடை என்று விதித்து அணுஆயுத உற்பத்தி என்ற நிலையை அடைவதைத் தடுக்க எல்லா வகையிலும் முயற்சி செய்தது. ஆயினும் இந்த முயற்சி தங்கு தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இதில் முக்கிய உதவியாளர் யார் தெரியுமா.. தமது அணுவிஞ்ஞானத் தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா காப்பியடித்துள்ளது என்ற முஷ்ரப்பிற்கு தப்பான விளக்கம் கொடுத்து வைத்திருக்கும் கறிவாளி திருவாளர் ஏ.க்யூ.கான் தான். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களின் கண்களில் மண்தூவிவிட்டு இதைச் செய்திருக்கிறார். இதற்காக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து என்ன கைமாறு பெற்றதோ, யாமறியேன் பராபரமே.

1991-ல் அமெரிக்கா இராக்கை வல்லுண்டியாகப் போய்த் தாக்கியபோது ஒரு இந்திய ஜெனரல் சொன்னார். இராக்கிடம் அணுகுண்டு இருந்திருந்தால் இந்தப் போரே வந்திருக்காது என்று. அது எத்தனை தூரம் சத்தியமான வார்த்தை என்பது, வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குத் தெரியாமல் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு குழு போய் அணுகுண்டு வெடித்தபின் தானே நமக்குத் தெரிந்தது. அதே காரணம்தான் தற்போது வடகொரியா அணுகுண்டு வெடித்ததும், ஈரான் தான் தயாரிக்கப் போவதாக மிரட்டுவதும் அதற்காகத்தான்.

எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம், அதென்ன ஈராக்கை மட்டும் அணுகுண்டு வைத்திருக்கிறது என்று போய்த் தாக்கிய அமெரிக்கா, கண்கூடான ஆதாரங்கள் இருந்தும் வடகொரியாவைத் தாக்கவில்லையே என்பது தான். மிகச்சாதாரண விஷயம். வடகொரியா அணுகுண்டு வைத்திருக்கிறது என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் ஈராக்கிடம் அணுகுண்டு இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டுதான் அந்த நாட்டின்மீதே போர்தொடுத்தது.

வடகொரியாவிற்கு எப்போதும் ஒரு விபரீத ஆசை. இராணுவம் இல்லாத நாடான ஜப்பானை மிரட்டும் வகையில் அதன் கடல் பகுதியில் பலமுறை ஏவுகணைச் சோதனை செய்திருக்கிறது. வடகொரியாவால் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தான் அச்சுறுத்தல். ஏற்கனவே தாய்வான் பிரச்சினை பண்ணிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் வடகொரியாவுடன் வெளித்தெரியாத உறவு மற்றும் உதவிகள் செய்து சீனா அணுக்கமாக இருந்து வருகிறது.

வல்லவன் வகுத்ததுதான் வாய்க்கால், அமெரிக்கா எடுத்த அணுகுண்டு பூச்சாண்டியை எல்லா நாடுகளும் எடுக்கின்றன. பிற்காலத்தில், போரெல்லாம் வந்தால், ஒரு நாளுக்கு மேல் நடக்காது. ஏன் என்றால் எதையும் பார்ப்பதற்கு யாரும் உயிரோடு இருந்தால்தானே.

கிழக்காசியப் பிராந்தியத்தில் வலுமிக்க அமெரிக்க ஆதரவு நாடுகளாக நினைத்துக் கொண்டிருக்கிற ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது மேலாண்மையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை தலையைப் பிய்த்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருக்கின்றன. இது தற்போது ஒரு உடனடியான ஆயுதப் பந்தயத்திற்கு வழிவகுக்கும். ஆக, அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்கள் தனது நவீன விலையுயர்ந்த ஆயுதங்களை செழிப்பாக இருக்கும் கிழக்காசியச் சந்தையில் சந்தைப்படுத்த வழி பிறந்தாயிற்று.

அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் எதுவும் போடும் முன்பே வடகொரியா அணுகுண்டை வெடித்துவிட யார் யோசனை கூறியிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அணுகுண்டு வெடித்தால் போயிற்று அந்த நாட்டை அப்புறம் தாவா செய்து தான் அணுஆயுதப்பரவல் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யமுடியும். மிரட்டும் வேலையெல்லாம் அமெரிக்கா செய்யாது, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஒரிரு வினாடிகளில் செத்துப் போனதை வீடியோ எடுத்துப் பார்த்து ரசித்தவர்களல்லவா.. அதன் வீரியம் என்ன, விளைவு என்று தெரியாமலா இருக்கும்.

ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.

மாத்தையாவின் கதை - இறுதிப்பகுதி

மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் ஒற்று அமைப்பின் தலைவரான பொட்டு அம்மன் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனுக்கு, அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதிலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு உள்ளுக்குள்ளேயே ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. பொட்டு அம்மன்
இதில் தனிக் கவனம் செலுத்தி வந்தார்.

போதிய தகவல் அளிக்கப்பட்டபின் பிரபாகரன் மாத்தையா மீதான 10-பக்க குற்றப் பத்திரிகை ஒன்றை யாழ் மக்களுக்கு முன் வாசித்துக் காட்ட ஆணையிட்டார். அதன் விளக்கங்களை சூலை 31க்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப் படுத்தினார். யார் கொடுத்த தைரியத்தில் அப்படி அலட்சியப்படுத்தினார் என்பது குழப்பமாகவே இருந்தது. மாத்தையா தன்னிடம் வந்த இயக்கத்தினரிடம் "வேண்டுமானால் பிரபாகரன் இங்கு வந்து என்னுடைய விளக்கங்களைக் கேட்டுக் கொள்ளட்டும்" என்று சொன்னதாகத் தெரிகிறது. இந்த அலட்சியம், பொட்டு அம்மனின் கணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அதுவே அன்று முதல் மாத்தையாவின் இறக்கத்திற்கும் கடைசியில் இறப்பிற்கும் காரணமாக அமைந்து போனது.

அப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றhர். அந்த நெருக்கமே பிற்பாடு அவரின் நடத்தையில் மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

மேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு ஒரு அதிகாரமில்லாத பதவியை, அதாவது, அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணுவதுமான ஒரு துறை அளிக்கப்பட்டது. அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவும் அனுமதிக்கப்பட்டது.

இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். அதாவது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தைப் பெற்றார். இதன் பின் சில வினோத சம்பவங்கள் நடைபெற்றன. தெரிந்தோ தெரியாமலோ மாத்தையாவிற்கு அதில் தொடர்பு இருப்பதாகப் பட்டது. அந்த சம்பவங்களாவன.

1. கோப்பாய் அருகில் பொட்டு அம்மனும் அவரது ஆட்களும் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் பொட்டு அம்மன் பெருங்காயத்துடன் உயிர் பிழைத்தார்.

2. சென்னைக்கருகில் இந்தியக் கப்பற்படையினுடான மோதலில் கிட்டு மாண்டது.

கிட்டுவைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அந்த மாவீரனைப் பற்றிப் பேச நிறைய விஷயம் இருக்கிறது.

கிட்டுவின் மரணத்தில் மாத்தையாவிற்குத் தொடர்பு இருக்கிறது என்று முக்காலே மூணு வீசம் ஊகம் ஏற்பட்ட உடனேயே ஒரு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் கனடாவிலிருந்து வந்த மஞ்சரி என்ற இதழைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மஞ்சரி இதழின் ஆசிரியர் டிபிஎஸ் ஜெயராஜ் மாத்தையாவின் நிலையைப் பற்றி விரிவாக அவ்வப்போது சுடச்சுட செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் தமிழர்கள் மத்தியில் அந்தப் பத்திரிகை வெகு பிரபலமானது. பிற்பாடு இயக்கத்தினரின் நெருக்கடி தாங்காமல் அந்தப் பத்திரிக்கையை மூடவேண்டி வந்தது.

யாழ்ப்பாணத்தில் என்ஜினியர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகம் மகேந்திரராஜா என்பவர் மாத்தையாவின் தளத்திலிருந்து திரும்பும்போது பொட்டு அம்மன் குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்கோட்டை சமரில் காலிழந்தவர். என்ஜினியர் தான் மாத்தையாவின் கைது செய்வதற்கான உறுதி முடிவை எடுக்குமளவிற்கான செய்தியளித்தார். அது தனிக் கதை. "ரா" வைப் பற்றிப் பின்னப்பட்ட ஒரு பரபரப்புக் கதையது.

பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை மற்றும் இயக்கத்தினருடன் மார்ச் 31, 1993ம் நாளன்று கொக்குவில்லில் இருக்கும் மாத்தையாவின் இடத்திற்கு அதிகாலையில் சென்றனர். அவர்கள் மாத்தையாவின் ஆட்களை அதிக எதிர்ப்பின்றி வெற்றிகொண்டனர்.

அதிரடிப்படை மாத்தையாவைக் கைது செய்து சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அதே சமயம் சுரேஷ் என்ற மாத்தையாவின் வலது கரமானவர், புத்துர் அருகே பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட மாத்தையாவின் ஆளைச் சந்தித்து சில ஆணைகளைச் சொல்லச் சென்றிருந்தார். அது என்ன ஆணை, யாரந்த நபர் என்பது பொட்டு அம்மனுக்குத் தான் வெளிச்சம். சுரேஷ் மற்றும் அந்த மெய்க்காப்பாளர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

1995-ல் ஒரு இந்திய சுதந்திர தினத்தன்று வேலூர்ச் சிறையிலிருந்து 43 கைதிகள் 153-அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டித் தப்பித்தனர். அவர்கள் எப்படி அந்த மண்ணை அகற்றினர் எப்படித் தப்பித்தனர் என்பது யாராலும் நம்ப முடியவில்லை. 43 பேரும் பல்வேறு திசைகளில் தப்பிச் சென்றனர். அவர்களில் 12 பேர் மட்டுமே பிற்பாடு பிடிபட்டனர். மீதம் உள்ள 31-பேரைப் பற்றி தகவல் இல்லை. அதில் 14 இயக்கத்தினரை ஏற்றிச் செல்ல விரைவுப் படகு
அனுப்பப்பட்டிருந்தது. 14 பேருக்கும் யாழ் நகரில் ராஜமரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு செய்யப்பட்டிருந்தது. சில நாட்கள்தான். இயக்கத்தினரின் யாழ் அலுவலகத்திற்கு வந்த ஒரு கடிதம் நிலையைத் தலைகீழாக மாற்றியது. அவர்கள் 14 பேரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அதாவது "ரா" வின் உதவியோடுதான் அவர்கள் தப்பியதாகவும் 1994-லேயே கொல்லப்பட்டுவிட்ட மாத்தையாவை மீட்க அவர்களை 1995ம் வருடம் "ரா" அனுப்பியிருக்கிறது என்று ஒரு அருமையான கதை சொல்லப்பட்டது. இதில் ஒரு விஷயம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. மாத்தையா டிசம்பர் 28, 1994ல் கொல்லப்பட்டதாக
அடில் பாலசிங்கம் குறிப்பிடுகி்றர். ஆனால், இயக்கத்தினர் 1998-ம் ஆண்டு கூட மாத்தையாவைப் பார்த்ததாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பது இயக்கத்தினர் தம் வரலாற்றில் எழுதுவார்கள் என்று நம்புவோமாக.

ஒருவாராக மாத்தையா என்ற வீரனின் கதை ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் கடந்துபோன ஒரு காட்சியாகிப் போனது.

மாத்தையாவுடன் இணைந்து செயல்பட்ட ஒவ்வொருவரின் வாக்குமூலத்தையும் தனித்தனியாக வீடியோ எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பிற்பாடு இயக்க வரலாற்றில் கறையேற்படும்படியாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்.

ஆக, சிலரின் ஆசைவார்த்தையின் பேரில் குறுக்கு வழியில் அதிகாரம் அடைய ஆசைப்பட்டு எட்டப்பர்களில் ஒருவராய் போனது அந்த வீரனின் துரதிர்ஷ்டம் தான். தமிழர் வீர வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஒரு சிலர் தோன்றிக் கொண்டேயிருப்பது தான் தமிழர்களின் சாபம் போலும்.

அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அடக்கி ஆளும் அதிகாரவர்க்கம் மற்றும் எதேச்சதிகார, சர்வாதிகார ஆட்சியாளர்களின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட்டு சாதாரணன் தன்னுடைய கருத்துக்களை இணையம் வழி பகிர்ந்து கொள்ளவும்,

அதே சமயம் அநாகரிகமாக பின்னூட்டமிடும் அனானிகளுக்கும், கேவலப்படுத்தியும் கேவலப்படும்படும்படியும் முகமூடியின் பின் இருந்து கொண்டு எழுதும் போலியார்களுக்கும் தங்கள் முகம் தெரியாமல் வலையில் எழுத ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும், நாடுகள் இந்த முறையை தனது உளவாளிகளிடமிருந்து எதிரி நாட்டுக்குத் தெரியாமல் தகவல் சேகரிக்கவும் பயன்படுத்துகின்றன. சமீபத்தில் கூட மத்தியகிழக்கு நாடுகளில் அமெரிக்க இத்தகைய முயற்சியை ஆரம்பித்து வைத்தது. அதன் பலனாக, தீவிரவாதிகளும் அப்படியே அமெரிக்காவிற்கு எதிரான செய்திகளை இணையத்தில் பதிப்பித்தனர். ஆக எந்த ஒரு செயலையும் நல்ல விதமாகவும் தீய விதமாகவும் செய்ய முடியும் என்ற இயற்கை விதி மறுபடியும் நிருபிக்கப்பட்டது.

இது ஒரு உலாவியைப் (BROWSER) பற்றிய செய்தியாகும். இந்த உலாவி தீநரியை (FIREFOX) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலாவியாகும். இந்த உலாவி டார் (TOR - The Onion Router) என்ற வெங்காய வழிச்செயலியின் செயற்பாடு சார்ந்து உருவாக்கப்பட்ட உலாவி. தற்போது வெகுப் பிரசித்தமாகி வருகிற இந்த உலாவியைப் பற்றி சற்றே விளக்கமாகப் பார்க்கலாம்.

வெங்காய வழிச்செயலி என்றால் என்ன?

வெங்காய வழிச்செயலி அடிப்படையில் ஒரு இடத்தை அடைய பலவழியாக சுற்றிச் சென்று சேரும் விதமாக செயல்படுகிறது. உதாரணமாக, ஒருவன் திருச்சியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமானால், தேசிய நெடுஞ்சாலை 45ன் வழி சென்றால் ஒரே நேர்க்கோட்டில் சென்னை சென்றடைய முடியும். யாராவது அவனுடைய பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தால் அவன் எங்கிருந்து வருகிறான் என்று சுலமபமாக அறிய முடியும். அதே சமயம், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை ஒரு பேருந்து், நாமக்கல்லிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்து், சேலத்திலிருந்து சென்னை வரை ஒரு பேருந்து், இப்படி பல பேருந்துகளில் மாறிப் போனால் அவன் கடைசியாக வந்த பேருந்தின் பயணச்சீட்டை மட்டும் வைத்து அவன் எங்கிருந்து வந்தான் என்று அறிய முடியாது. பேருந்தின் நடத்துனரும் எந்த சாட்சியமும் அளிக்க முடியாது. ஆக அவன் எங்கிருந்து வந்தான் என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்க முடியாமல் போகும். அதே கதைதான் வெங்காய வழிச்செயலியும்.

நீங்கள் திருச்சியில் மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு இணைய உலாவல் மையத்திலிருந்து (BROWSING CENTRE) தமிழ்மணத்தின் மூலமாக வஜ்ராவின் ( வஜ்ரா மன்னிக்கவும் .. ) வலைப்பதிவிற்கு அனானியாக பதிவிட்டீர்களானால் அவர் உங்களின் இணையக்குறியீட்டு (IP Number) எண்ணைக் கண்டு நீங்கள் எந்த உலாவல் மையத்திலிருந்து வருகிறீர்கள் என்று கண்டுபிடித்து தனது பதிவில் போடுவார். அதே சமயம் இந்த உலாவியைக் கொண்டு அதே மாதிரி பதிவிட்டீர்களானால் வஜ்ராவிற்கு நீங்கள் இஸ்ரேலில் டெல்அவிவ் நகரிலிருந்தோ அல்லது ஜெர்மனியிலிருந்தோ பதிவிட்ட மாதிரியான இணையக்குறியீட்டு எண்தான் கிடைக்கும்.

இதைப்பற்றிய சில விளக்கப்படங்கள் இதோ. மேல் விவரம் பெற இங்கு செல்லலாம். (http://tor.eff.org/overview.html.en) இதற்கு மேலும் எளிய விளக்கம் வேண்டுவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (thiruvadiyan_AT_gmail_com)




























உங்களுக்கு அடுத்துத் தோன்றுகிற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். இந்த உலாவியின் பெயர் என்ன? அதை எப்படி எனது கணிணியில் இடுவது? பொது உலாவல் மையத்தில் இதை நான் எப்படி பயன்படுத்துவது? சரிதானே..

இந்த உலாவியின் பெயர் டோர்பார்க் (TORPARK) என்பதாகும். இது இங்கு கிடைக்கிறது. (http://torpark.nfshost.com/)

இதைக் கணிணியில் நீங்கள் இடத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் உங்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ, அப்பொழுது மட்டும் இதை கணிணியில் இடாமலேயே பயன்படுத்த முடியும்.

பொது உலாவல் மையத்தில் இதைப் பயன்படுத்த கைவட்டில் (USB Drive) சேமித்துக் கொண்டு உலாவல் மையத்தின் கணிணியில் இதை கைவட்டிலிருந்தே சுட்டிப் பயன்படுத்தலாம்.

முக்கிய அறிவுறுத்தல்

இந்த உலாவியை நல்ல விடயத்திற்கு மட்டுமே பயன் படுத்துமாறு வலைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு
புதிய கணிணி வார்த்தைகள்:

தீநரி (Firefox) - A browser (http://www.mozilla.org)
வழிச்செயலி - Router (http://en.wikipedia.org/wiki/Router)
வெங்காய வழிச்செயலி - The Onion Router(TOR) (http://en.wikipedia.org/wiki/Tor_(anonymity_network)
இணைய உலாவல் மையம் - Internet Browsing Centre
கைவட்டு - USB Drive