இலங்கைத் தமிழ் எம்பிக்களின் பயணம் தோல்வியா ?
இந்தியாவுடனான அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளும் முன் இயக்கம் இந்திய அரசு மற்றும் தமிழக சூழல் பற்றி மேல் விவரம் அறிந்து கொள்ளும் முகமாக, இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டனர். தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் சந்தித்து தமது மக்களின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்ல இருந்த அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றவாறு தமிழீழ ஆதரவாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு முன்னமே எனது வலைப் பதிவில் (http://thiruvadiyan.blogspot.com/2006/09/part-2.html) குறிப்பிட்டிருந்த தற்போதைய சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.
இதைப்பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. இந்தியாவிற்கு வந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழ் எம்பிக்கள் புலிகளின் அமைப்பின் அரசியல் பிரிவு எம்பிக்கள். அவர்கள் புலிகள் சார்பாகத்தான் ஈழப் பிரச்னை சம்பந்தமாக பேச வந்தனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
2. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலில் சந்திக்க மறுத்தாலும் பிரதமரின் சந்திப்புக்குப் பின்னால் சந்திக்கலாம் என்று சொன்னதாகத்தான் தெரிகிறது. அதாவது, பிரதமர் எடுக்கும் நிலையை தானும் எடுக்க அவர் நினைத்திருக்கலாம்.
3. பிரதமர் சந்திப்பு சௌத் பிளாக் அதிகாரிகளின் சந்திப்பிற்குப் பிறகு நடைபெற வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியிருக்கக் கூடும். அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் அரசின் தற்போதைய கொள்கைக்கு (என்ன கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்) எம்பிக்கள் இசைகிறார்களா என்பது. அப்படி அவர்கள் ஒருவேளை ஒத்துக் கொண்டிருந்தால் பிரதமரின் சந்திப்பு நடைபெற்றிருக்கலாமோ என்னவோ.
மற்றபடி,
வைகோ ஏற்பாடு செய்த சந்திப்பை கருணாநிதி தடுத்தார் என்பது தமிழக அரசியல் பாணி தாக்குதல். அவ்வாறு கருணாநிதி தடுத்திருப்பாரேயானால், ஏன் கருணாநிதியைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக்கூடாது. ஏன் இராமதாசைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக் கூடாது. கருணாநிதியின் மேல் குற்றஞ்சாட்டுவது, அவரின் இஸட் பிரிவு பாதுகாப்பை அதிகரிக்கவே உதவும்.
மேலும் விஜயகாந்த் தற்போது ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறார் (இவர் ஏற்கனவே வந்த, சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், பாக்கியராஜ், இராஜேந்தர், இராமராசன், மற்றும் இன்னபிற நினைவில் மறந்துபோன நடிகர்களைப் போல கரையப் போகிறாரா அல்லது நிலைத்து நிற்பாரா என்று காலம் மட்டுமே பதில் சொல்லும்). இவரின் அரசியல் சாணக்கியராக இருப்பவர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள். இவர்தான் 1987ல் பிரபாகரனை MGR-ன் உத்தரவின் பேரில் இராசிவுடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தவர். விஜயகாந்தின் வளர்ச்சியில் இயக்கத்திற்கு நன்மை இருக்கக்கூடும். திமுக ஆட்சியின் முழுமையான ஆளுங்காலத்திற்குள் எந்த ஆச்சரியத்தக்க விஷயமும் நடைபெறவில்லையென்றால், கேப்டன் (பிரபாகரன்) விஜயகாந்த் இது சம்பந்தமான முழு ஆதரவு தெரிவிக்க இன்னும் ஐந்தாண்டுகள் ஆகலாம். அது வரைக்கும் தமிழக அரசியலில் புலிகள் ஆதரவு என்பது ஈழத்தமிழர் ஆதரவு என்ற அளவிலேயேதான் இருக்கும்.
தற்சமயம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலை, கவர் ஸ்டோரி எழுதிக் காசாக்குவதற்குத் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தமிழக மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளால் கொல்லப்பட்ட போது கூட தமிழக மக்களிடையே கருத்து மாச்சரியங்கள் இருந்தன. அமைதிப்படையை வரவேற்கக் கூட கருணாநிதி செல்லாது எதிர்ப்பு காட்டினார். இராசிவைத் தமிழக மண்ணிலேயே வைத்துக் கொன்றதன் மூலம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி பயத்தால் உறைய வைத்துவிட்டனர். இயக்கத்தினரைப் பற்றிய ஒரு ஹீரோயிஸப் பார்வை பயத்துடனான பார்வையாக மாறிப்போய் இருப்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இது இயக்கத்தினரின் தமிழக மக்களுடனான, தமிழக அரசியல் களத்தினு}டான அணுகுமுறையில் தற்போது மாற்றம் தேவை என்று உணர்த்துகிறது.