கற்பாம்..காவியமாம்...

கற்பாம்..காவியமாம்...

இது ஒருபாடலின் தலைப்பு வரி... இந்தப்பாடல் வெளிவந்த காலத்தில் தடைசெய்யப்பட்ட பாடலாகும்.. இன்றளவும் அது மிகுந்த சர்ச்சைக்குரிய பாடலாகவே இருக்கிறது... இந்தப்பாடலை எழுதியவர் கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள்.... (முதலில் கண்ணதாசன் தான் இப்படி கவிப்பேரரசு என்று அழைக்கப்பட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு... இப்பட்டத்தை எடுத்து திரு வைரமுத்துவிற்குச் சூட்டிவிட்டார்கள்)..

சரி.. விஷயத்திற்கு வருவோம்....

கற்பு.. கற்பு என்கிறார்களே... அதை எத்தனை பெண்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.. இதை வெளிப்படையாக எந்தப் பெண்ணிடமும் பேசமுடியாததால்..இந்த வலையூட்டம் தேவையாகிப் போனது... அது மட்டுமில்லால் பெரியாரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தற்போது கற்பைப் பற்றியும் அனைவரும் பேசுகின்றனர்... நன்றி குஷ்பு.....

கற்பு என்பது கடைச்சரக்கா... இல்லை... அல்லது உடலின் ஒரு பாகமா..?? அதுவும் இல்லை... பின் என்னதான் கற்பு???

கற்புநெறி என்றுதான் தமிழிலக்கியம் சொல்கிறது... அதாவது நெறிப்படுத்தப்பட வேண்டியது கற்பு எனப்படுகிறது...கற்பு என்பது பெண்மைக்கு மட்டும் பொருந்துகிற விஷயமில்லை பலரும் இங்கு எழுதித்தள்ளியிருக்கின்றனர்.. ஆனால் கற்பென்றாலே பெண்ணை மட்டுமே
குறிப்பிடுகிறார்களே அது ஏன்? அதற்கு பெண்களும் உடந்தை வேறு...

ஒரு பெண் வன்பியல் புணர்ச்சிக்கு ஆளாகும் போது, தமிழச் சமுதாயம் அவளை கற்பிழந்தவள் என்கிறது... அதையே அந்தப் பெண்ணின் இசைவோடு நடக்கும் போது அது வெறும் புணர்ச்சி அல்லது சம்போகம் ஆகிறது....

ஆக கற்பு என்பது அந்தப் பெண்ணைப் பொறுத்த வி்ஷயம்.. அவள் கற்போடு
இருக்கிறாளா அல்லது கற்பழிந்து இருக்கிறாளா என்பது அந்தப் பெண் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகப் போகிறது...

இன்னும் ஒருபடி மேலே போய் சிந்தித்தோமானால்... கற்பு என்பது ஒரு பெண்ணின் RESPONSIBILITY.

தான் ஒரு பொறுப்புள்ளவளாக ஒரு பெண் எப்போதும் தம்மைக் கருதுகிறாள்... தாயாக, தமக்கையாக, தங்கையாக, தாரமாக, இப்படி
எத்தனையோ பொறுப்புக்கள்.. பொறுப்புக்கள் அவள் மேல் பலவாறு சுமத்தப்பட்டுள்ளது... பிறப்பு முதல் இறப்பு வரை....

தான் ஒரு மங்கையாக.. பெண்மையைச் சுமந்து நிற்பவளாக இருக்கும் காலகட்டத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒழுக்க ரீதியான
மிகப்பெரிய பொறுப்பு கற்புநிலை அல்லது கற்புநெறி என்பது.... இது நிச்சயமாக உடல் ரீதியான விஷயமில்லை.. மனரீதியான விஷயம்..

ஆனால் இந்த சமுதாயமே அதை ஒரு உடல் ரீதியான ஒரு விஷயமாக பார்ப்பதுடன் ஒவ்வொரு பெண்ணையும் அவ்வாறே பார்க்க
வைத்திருக்கிறது...

தவறு செய்வது என்பது அல்லது தவற்றிற்கு ஆளாவது என்பது... சாலையில் வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துப் போல... நாம் ஒழுங்காக சட்டப்படி சாலையில் செல்வோம்... ஆனால் எதிரில் வருபவர் அப்படி வரவில்லையென்றால் நம்மீது மோதி விட்டால் நமக்கு பாதிப்பு ஏற்படுமே அப்படித்தான்.... இது தானே ஏற்படுத்திக்கொண்ட விபத்தா அல்லது தம்மேல் ஏற்படுத்தப்பட்ட விபத்தா என்பதைப் பெண்கள் தெளிவாகச் சிந்தித்து உணரவேண்டும்...

ஒரு பெண் இவ்வாறான விபத்துக்கு உள்ளானவளானால் அவள் சற்றே சிந்திக்க வேண்டும்... தான் தன்னுடைய RESPONSIBILITY-யிலிருந்து தவறிவிட்டோமா என்று... மனசாட்சிப்படி தான் தவறவில்லை என்று ஒரு பெண் கருதுவாளேயெனில் அவளின் கற்பு நிலைபற்றி அவளே தீர்மானிக்க வேண்டும்...

கற்பைப் பற்றித் தீர்மானிப்பதை அப்பெண்ணிடமே இச்சமுதாயம் விடவேண்டும்... அதே சமயம் கற்பு என்பது ஒரு நெறி என்பதை
பெற்றோர்கள் ஊடகங்கள் சமுதாயம் ஆகியோர் பெண்களுக்கு உணர்த்தவேண்டும்... கற்பை நெறி என்று பரப்புவதை விட்டு அதை ஒரு
உடல்சார்ந்த விஷயமாக எல்லோரும் பார்க்கும் போது... பெண்கள் அது இரகசியமாக இருந்துவிட்டுப் போகும் வரை பிறருக்குத் தெரியாமல்
போகும் வரை தனக்கு எந்தத்தீங்கும் இல்லை என்றாய் நினைக்க வழி கோணுகிறது... இந்தக் கோட்பாட்டைக் கொண்டுதான் குஷ்பு
அம்மையார் தனது கற்பு நெறிக் கொள்கையைப் பற்றி விளக்கிக் கூற... மற்றவை தாங்கள் அறிந்ததே...

பெண்களும் மனித மனத்தினர்தான்.... தேவ, மனித, அசுர குணத்துடையோர் அவர்களுள்ளும் உள்ளோரே.... அவ்வாறானவர்கள் உண்மை மறுத்துரைத்தால் இது எப்படி... கற்பு நெறிபற்றி எப்படி அப் பெண்ணை நிரூபிக்கச் செய்வது... இது சற்று சிக்கலான கேள்விதான்... பெண்களுக்கும் மனசாட்சி உண்டு.... பிறழ்ந்து வாழும் அவர்களுக்கு அவர்களின் மனசாட்சியே அவர்களைக் கொன்றுபோடும் என்பது சாஸ்வதம்...

(இராமயணத்தில் சீதை தீக்குளிக்கவில்லையா...இன்றைக்கு எத்தனை சீதைகள் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறார்கள்... கோர்ட் படியேறி விட மாட்டார்கள்..?. அதே சமயம்... எவனோ ஒரு வண்ணான் சொன்னானேயென்று தன்னை தன் கணவன் தீக்குளிக்கச் செய்தானே என்ற கோபம் கொண்ட சீதை காட்டுக்குள் சென்றுவிட்டாள்... அவளுக்குத் தன் கணவன் தன்னைச் சந்தேகப்பட்டானேயென்பது தான் மிகப்பெரிய வருத்தம்...)

ஆக கற்பு என்பது ஒரு விவாதப் பொருளாகிவிட்ட நிலை மாறி அது பெண்களின் தன்னிலை சார்ந்த விஷயம் மற்றும் தன்னுடைய பொறுப்பு
என்கிற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டியது இன்றைய சூழலில் மிக முக்கியமாகும்...

விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்களை மணந்து கொள்ளுவோர்.. கற்பழிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறியப்பட்ட பெண்ணை
திருமணம் செய்து கொள்ளுவோர்.. இவர்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு உயரிய மரியாதை ஏற்படும்... அவர்கள் எப்படிப்பட்ட
உயர்ந்த மனநிலை உடையோராய் இருப்பர் என்று..

உண்மையில் கற்பென்றால் என்ன என்று இவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்திருக்கின்றனர்...

மேற்படி கற்பு பற்றிய தெளிவை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்... அனைத்துச் சகோதரிகளும் இதில் தவறிருந்தால் திருத்திச் சொல்லுங்கள்... சரியான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அடுத்த வலைப்பூவில்.... வன்பியல் புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்கள் ஏன் மிகுந்த மனவேதனைக்குள்ளாகிறாரகள் என்று பார்க்கலாம்...

4 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

Ada Pongada

said...

திருவடியான்,
நல்லதொரு பதிவு, பாராட்டுக்கள்
//இன்னும் ஒருபடி மேலே போய் சிந்தித்தோமானால்... கற்பு என்பது ஒரு பெண்ணின் RESPONSIBILITY.
//
மிகச் சரியான கருத்து !
//ஒரு பெண் வன்பியல் புணர்ச்சிக்கு ஆளாகும் போது, தமிழச் சமுதாயம் அவளை கற்பிழந்தவள் என்கிறது... அதையே அந்தப் பெண்ணின் இசைவோடு நடக்கும் போது அது வெறும் புணர்ச்சி அல்லது சம்போகம் ஆகிறது....
//
இது குறித்து ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. வன்பியல் என்ற வகையில் இல்லாமல், ஏதோ ஒரு கட்டாயத்தினால், உடலை மூலதனமாக்கி வாழ வேண்டி உள்ளவர்களையும், 'கற்பிழந்தவள்' என்று தானே சமூகம் வரையறுத்துள்ளது ??? அதே நேரம், பல ஆடவருடன், எவ்வித கட்டாயமுமின்றி, தொடர்பு வைத்திருக்கும் எலீட் வகை பெண்களை அவ்வாறு கூறுவதில்லை. இது முரண் தானே !!!
எ.அ.பாலா

said...

வருகைக்கு நன்றி சின்னத்தம்பி (உங்களுக்குத் தம்பி இருக்கிறாரா..??)..

//உண்மையான காதலுடன் மணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற உறுதியான மனநிலையில் ஒருமித்து புண‌ர்வது தப்பல்லவே.//

இது எல்லாம் ஒரு சப்பைக்கட்டு.. உண்மையில் அந்தப்பெண் மேல் காதலிருந்தால்... கல்யாணம் வரை பொறுத்திருக்க வேண்டியது தானே...கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டுபோகப் போகிறது... இதற்குப் பெண்களும் உடன்படுவதுதான் விநோதம்..

//அவ்வாறு நடந்த பிறகு சந்தர்ப சூழ்நிலையால் பிரிந்து வேறோருவ‌ருடன் திருமணம் நடக்கும் சூழலில் அப்பெண்ணை ஆனால் அப்பெண் நடந்தவற்றை மறந்து புதிய துணைக்கு உண்மையாக அன்பு செலுத்தும் பட்சத்தில்) ஏற்றுக்கொல்வதும் தவறில்லை.//

தப்பில்லைதான்... ஆனால், நீங்கள் எழுத்துப் பிழையாக "கொல்வது" என்று எழுதியிருக்கிறீர்களா.. அல்லது... கொலைசெய்யவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களா.... தமிழ் ஒரு நுட்பமான மொழி சின்னத்தம்பி.... கவனமாகக் கையாளுங்கள்...

said...

பாலா... வருகைக்கு நன்றி...

நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்...