பர்மாவும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானமும்

மியான்மரின் மேல் (பர்மா) ஐநா பாதுகாப்புச் சபை ஏற்றிய தீர்மானம் பல உள்நோக்கங்களைக் கொண்டது. அது என்ன என்று அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.

செப்டம்பர் 15ம் தேதியன்று ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய பர்மாவைப் பற்றிய தீர்மானம் அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையில் மாற்றம் தெரிவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா நாடு, இராணுவப் பிடியில் வெகு காலமாக இருக்கிறது. ஆசியான் நாடுகளிலேயே இராணுவ ஆட்சியாளர் உள்ள நாடு மியான்மர்தான். 1997ம் வருடம் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவுக்குப் பின் அனைத்து ஆசியான் நாடுகளும் கூடிச்சேர்ந்து மியான்மரையும் தமது உறுப்பினர் நாடாகச் சேர்த்துக் கொண்டன, ஒரு நிபந்தனையுடன். அதாவது, கூடிய சீக்கிரம் ஜனநாயக நாடாக மாறிவிட வேண்டும். மேற்படி நிபந்தனையால் ஆசியான் நாடுகளுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் மேற்கத்திய (அமெரிக்கா என்று கொள்க) நாடுகளுக்கு அப்படி ஒரு நிபந்தனையிடுவதற்கு ஒரு உள்நோக்கம் இருந்தது.

தெற்காசியப் பிராந்தியத்தில் சில SWEETSPOT-கள் உள்ளன, அவற்றில் ஒன்று, மியான்மார். மியான்மார், இந்தியாவையிம் சைனாவையும் எல்லையாகக் கொண்ட நாடு. ஜண்டா எனப்படும் இராணுவத் தலைமை ஆட்சி செய்யும் நாடு அது. இராணுவ ஆட்சி நடந்த போதும் கிழக்காசிய நாடுகளுக்கோ, தெற்காசிய நாடுகளுக்கோ அது ஒரு தொந்தரவாகவோ பிரச்னையாகவோ இருக்கவில்லை. யாருக்கும் பிரச்னையில்லாதபோது யார் அதைச் சீண்டப் போகிறார்கள்.

சுழற்சியின்படி ஆசியான் தலைமை மியான்மருக்கு வரவேண்டிய சூழலில் மலேசிய அமைச்சர் பேச்சு வார்த்தைக்குச் சென்று தோல்வியுற்றார். என்ன பேசுவது... ஜனநாயகத்துக்குத் திரும்பச் சொல்லித்தான். இராணுவத்தலைமை வந்தவர்களுக்கு டீ கொடுத்து உபசரித்து பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது.

தற்போது ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் போடுகிறதென்றhல் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
மேற்கொண்டு படிக்குமுன் ஐநா சபை என்பது அமெரிக்காவின் கைப்பாவை என்பதும், சில வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் தங்களையும் தங்களைச் சார்ந்தோரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். மற்றபடி அந்தத் தகுதி இல்லாதாவர்கள் சொல்லுவதெல்லாம் அம்பலம் ஏற இயலாத சூழல் இருப்பதும், அனைவரும் அறிந்ததே. ஐநா சபையை ஹேக் நகருக்கு மாற்ற ஒரு கோஷ்டி கோஷமிட்டு வருவதும் அறிந்ததே.

சரி.. விஷயத்திற்கு வருவோம்.

1. மியான்மரின் இராணுவத் தலைமை சைனா மற்றும் இந்திய இராணுவ அமைப்புகளுடன் நெருங்கிய மற்றும் சுமுகத் தொடர்பு வைத்துள்ளது.

2. மியான்மரில் சமீபத்தில் எண்ணெய் வயல்கள் இனங்காணப் பட்டன. அவற்றைத் தோண்டும் ஒப்பந்தம் பெறுவதில் சைனாவும் இந்தியாவும் அக்கறை காட்டியும், கடைசியில் சைனாவே அந்த எண்ணெய் வயல்களைப் பெற்றது.

3. புலிகள் சிறிது காலம்... ஏன் இப்போது கூட, தங்களின் டிரான்சிப்மென்ட் பாய்ண்ட் எனப்படும் வகையில் ஆயுதப் போக்குவரத்திற்கு மியான்மரை உபயோகிப்பதாகக் கேள்வி. (வலைஞர்கள் மேல் தகவல் தரலாம்.)

4. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மியான்மர் தனது அன்னியச் செலாவனியாக டாலரை விலக்கி ஈரோ என அறிவித்தது. மியான்மரிலிருந்து பெரிய அளவில் வணிகம் நடைபெறாவிட்டாலும், அமெரிக்காவிற்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது மீண்டும் மிகச் சமீபத்தில் தான் விதித்தது. சதாம் உசேன் செய்ய இருந்த தவறும் அதுதான் என்பது நாம் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஓபெக் அமைப்பில் டாலருக்குப் பதில் ஈரோவில் வர்த்தகம் செய்வது என வலியுறுத்துவது என்பது தான் சதாம் செய்த தவறு. அதற்கு ஆதரவளித்தோரில் வெனிசு{லா அதிபரும் ஒருவர், இன்று வரை அவரைக் காலி செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மேலும் சமீபத்திய ஐநா சபை பேச்சில் அவர் புஷ்ஷை வெளிப்படையாகவே சாத்தான் என்று விமர்சித்ததையும் அறிவீர்கள். இதைப்பற்றி தனி பதிவே போட வேண்டும்.

5. இந்துமகா சமுத்திரமும் மலாக்கா நீரிணையும் இன்று உலகின் பொருளாதார, வர்த்தக முக்கியத்தவம் வாய்ந்த ஒரு பகுதியாகிப் போனது. உலகின் சனத்தொகையில் பாதிக்குமேற்பட்டோர் வசிக்கும் பகுதியாகவும், சைனாவின் ஒரே வர்த்தகப் பாதையாகவும் உள்ள இந்தப் பகுதியில் கிழக்காசியா தவிர இந்துமகா சமுத்திரத்தில் போதுமான பிடியில்லாமல் இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது. மலாக்கா நீரிணையில் ரோந்து செல்வதாக அறிவித்த அமெரிக்கா இந்தியாவையும் சேர்த்தக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

6. சைனா, இந்தியாவின் அந்தமான் கப்பற்படைத்தளத்திற்கு ஈடு கொடுக்கும் படியான நடவடிக்கையாக மியான்மருக்கு உதவி செய்து அங்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. சைனாவின் இந்துமகா சமுத்திர கப்பற்படைத் தளம் மியான்மரில் அமைய அது முயற்சிக்கும். வெகு காலம் இதைக் கண்டும் காணாமல் இருந்த இந்திய அரசு, சமீபத்தில் மியான்மர் அதிகாரிகளைக் கூப்பிட்டு மரியாதை செய்ததற்குக் காரணம் அவர்களிடமிருக்கும் எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுப்பதற்குத்தான், ஆனாலும் பயனில்லை. சைனா தனது கப்பற்படைத் தளத்தை அங்கு கொணர முயற்சிக்கிறது, இந்தியா தனது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

7. இதற்கிடையில் இந்தப் பிராந்தியத்திற்கே சம்பந்தமில்லாத அமெரிக்கா தனது படைகளை மியான்மரில் நிலைநிறுத்தும் வகையாக ஐநா பாதுகாப்பு சபைத் தீர்மானம் என்ற ஆயுதத்தை இன்று எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆசியான் நாடுகளெதுவும் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எதிர்த்து முணுமுணுக்கக் கூட திராணியற்றவை. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப் போவது, இந்தியாவும் சைனாவும் தான். மேலும் இது வெறும் படை நிறுத்தும் ஒரு உத்தியாக மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் சைனா நாடுகளின் எண்ணெய்த் தேவை மற்றும் அதன் சார்ந்த வர்த்தகத்திலும் அது தலையிடுவதாக அமைகிறது.

மற்றபடி அமெரிக்காவிற்காவது ஜனநாயத்தை நிலைநிறுத்தும் அக்கறையாவது.

ஆக தெற்காசியப் பிராந்தியத்தில் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த பனி யுத்தம் தற்போது ஆரம்பமாகிவிட்டதாகவே தோன்றுகிறது. இதில் யார் யார் பக்கம் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியக்கூடும். அதாவது இந்தியாவும் சைனாவும் அமெரிக்காவிற்கு எதிராக கை கோர்க்குமா.. அல்லது இந்தியாவும் அமெரிக்காவும் சைனாவிற்கு எதிராக கை கோர்க்குமா என்று தெரியவில்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம். நாளை எதுவும் நடக்கலாம்.

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: