டியர் பிரின்சிபால்..

டியர் பிரின்சிபால்..

எப்படி இருக்கிறீர்கள். தற்போது தாங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள் என்று மாதேஸ்வரன் சொன்னான். உடம்புக்குச் சரியில்லாமல்தான் வீட்டில் இருக்கிறீர்கள் என்று சொன்னார்களே.. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்களை எங்களது தாய்தகப்பன்கூட அடிச்சதில்லை. ஆனா நீங்க பலபேருக்கு முன்னாடி வைச்சு எங்களை கன்னத்தில அறைஞ்சீங்க.. அவமானமாவும் அசிங்கமாகவும் இருந்துச்சு. ஏன் அடிச்சிங்க தெரியுமா? நைட் இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் வருஷம் 16 படம் பார்த்துவிட்டு லாரியின் உச்சிமேல் உக்கார்ந்து வந்தோமே.. அப்புறம் வாட்ச்மேன் கதவைத்திறக்கமாட்டேன்ன பிறகு.. அவனுக்குத் தெரியாமா பின்பக்கவழியாப் போய் ஹாஸ்டலுக்குள்ள சுவரேறிக் குதித்து உள்ளே போனதற்குத்தானே அடிச்சீங்க..

அந்த ராமச்சந்திரன் மட்டும் போட்டுக் கொடுக்கலைன்னா நாங்க இந்த மாதிரி வந்ததெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும். சரி விடுங்க... அடிச்சது அடிச்சுப்புட்டு நான் உங்களுக்கெல்லாம் தகப்பன் மாதிரி.. நான் உங்கள நல்வழிப்படுத்துறத்துக்குத்தான் அடிப்பேன்னு வேறு சொல்வீங்க..

உண்மைதாங்க...

நான் இன்னைக்கு இந்த வலைப்பூவை சிங்கையிலிருந்து எழுதுற அளவுக்கு நாங்கள்ளாம் வளர்ந்திருக்கோம்னா.. அதுக்கு நீங்க ஒரு முக்கியக் காரணம்ங்க...

நாங்கள்ளாம் ஒழுங்கா கிளாஸ்க்கு வர்றதில்லைன்னு காலையில ஏழே முக்கால் மணிக்கெல்லாம் ஹாஸ்டல் வந்து ஒவ்வொரு ரூமாப் போய் து[ங்கிக் கிட்டிருக்கவனையெல்லாம் எழுப்பிவிட்டு கிளாஸீக்கு ஓட வைப்பிங்களே... அது மட்டுமா.. உங்க கார் TCZ3265 வருதுன்ன உடனே தப்பி ஓடுவானே சுகுமாரு... அவனைத் தனிய கார்ல போய் விரட்டி கூட்டிட்டு வருவியளே.. அதெல்லாம் மறக்க முடியுமா..

ஒரு நா இராத்திரி மூனாவது மாடில திருச்சி சிராஜ ரூம்ல பாசித், ஜெயா, அஸ்பாக் இன்னும் அவங்க கோஷ்டியெல்லாம் சீட்டு விளையாடிக்கிட்டிருந்தாய்ங்க.. காலைல மூணு மணிக்கு வந்து இந்தப்பயலுக ஆட்ட மும்முரத்தில நீங்க பின்னாடிலருந்து ரம்மி எடுத்துக் கொடுத்தது கூட தெரியாம விளையாடிக்கிட்டிருந்தாயங்களே...


இறைவன் இப்ப என்முன்னாடி வந்து ஒரே ஒரு வரம் கொடுன்னு கேட்டா நான் என் காலேஜலே வாழ்ந்த அந்த நாள மறுபடி ஒருமுறை வாழனும்தான் கேட்பேன்..

உங்கள ஒரு ராட்சசனா நினைச்சுக்கிட்டிருந்த எங்களுக்கு பைனல் இயரில Heat and Mass Transfer கிளாஸ் எடுத்தப்போ உங்களப் பத்திய நினைப்ப ஒரு மரியாதைக்குரிய புரொபஸர்ங்கிற அளவில எங்களுக்கு உணர்த்தினிங்களே .. அது உண்மையிலேயே எங்களின் பொன்னான நேரம். We realised that you are a world-class teacher.

அரைக்கை வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு நாலு முழ வேட்டி கட்டிக்கிட்டு நெத்தி நிறைய பட்டை அடிச்சிக்கிட்டு அய்யர் மாதிரியே திரிவானே மாதேசு... அவந்தானே உங்களுக்குப் பெட்டு... எதாருந்தாலும் அவங்கிட்டதானே முதல்ல சொல்லுவிய... அந்தப் பய இப்ப என்ன பன்றான் தெரியுமா... அவன் இப்ப பிரின்சிபாலாம்... அதுவும் ஒரு இன்சினியரிங் காலேஜக்கு... ஆச்சரியாமாகவும் இருக்கு... இந்த சான்டிப் பயலைப் பாருங்க ... போடிமெட்டுலேருந்து வந்துட்டு இன்னைக்கு MITலே புரபஸரா இருக்கான்க... என்னன்னமோ பேப்பர் எழுதிக்கிட்டிருக்கான்... பெருமையா இருக்குங்க...

அவிங்க மட்டுமா... அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவரை நம்ம பயலுவ பரவிக்கிடக்கிறாய்ங்க தெரியுமா... இதுல முக்கியமா நாங்க எல்லோரும் ஒருத்தரோட ஒருத்தர் ஈமெயில் மூலமாவும் சாட்டிங்க மூலமாவும் தொடர்பு வச்சிக்கிறோம்... நாங்க நாலுபேர் கூடிப் பேசுனோம்னா.. உங்களைப்பத்திப் பேசாம இருக்கமாட்டோம்.

உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க... திருச்சிக்கு வந்து அவசியம் பார்க்கிறேன்ங்க. கண்டிப்பா எங்களையெல்லாம் மறந்திருக்க மாட்டியன்னுதான் நினைக்கிறேன்.. ஆனாலும் பராவாயில்லை... எங்களை நீங்க ஞாபகம் வச்சிக்கிற வேண்யதில்லை...குருவைத்தாங்க சிஷ்யன் ஞாபகம் வைச்சிக்கனும் தன் வாழ்நாள் வரை... குருவுக்கு அந்த கட்டாயமில்லை... தகப்பனுக்கு அப்புறம் உள்ள ஸ்தானம்ல உங்களுக்கு.. மாதா பிதா குரு அப்புறந்தானே தெய்வமெல்லாம்...

இன்னம் நிறைய எழுதனும்னு தோனுதுங்க... பாருங்க கண்ணெல்லாம் ஒரே கலங்கலாக இருக்கு... நீங்க நல்லாருக்கனும்..

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

Hello, which college, which principal, which year?