ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 3
விக்டர் தனது முதல் விமானச் சேவையை டென்மார்க்குக்கு பொதுவான சரக்குகளை ஏற்றி அனுப்பி ஆரம்பித்தார். அந்த வியாபாரம் கடுமையான போட்டிகளுக்கிடையில் நடத்த வேண்டியிருந்தது. சரியான ரேட் என்பதை விட சரியான லாபம் கிடைக்க வில்லை என்றே கூறலாம். அதனால, அதிகம் கூட்ட நெரிசல் இல்லாத பகுதியாக வியாபாரம் செய்யலாம் என்று ஆப்ரிக்க நாடுகளையும் மத்தியகிழக்கு நாடுகளையும் தேர்ந்தெடுத்தார். பிறகு வியாபாரம் வெகு சூடு பிடித்துவிட்டது. பிற்பாடுதான் துப்பாக்கி வியாபாரத்தில் நுழைந்தார்.
இவரது தொழில்முறை நண்பர்கள் வேறுமாதிரி கதை சொல்கிறார்கள். எது உண்மை என்று விக்டர் கூட சொல்லுவாரா என்று தெரியவில்லை. அவர் நண்பர்கள் சொல்லுவது இதுதான். ரஷ்ய ஜெனரல்களில் சிலர் கூட்டு சேர்ந்து கொண்டு அப்போதைய கேஜிபி துணையுடன் விக்டருக்கு சொற்பத் தொகைக்கு விமானங்களை விற்பதாகக் காட்டிக்கொண்டு அவற்றை வியாபாரத்தில் ஈடுபடுத்துவது. வரும் வருமானத்தில் பங்கு கொடுத்துவிடுவது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான விமானங்கள் சரியான பராமரிப்பில்லாமல் எரிபொருள் நிரப்பக் காசில்லாமல் காயலான்கடைக்குப் போகத் தயாராயிருந்தன. இந்தியாவில் கூட ரஷ்யத் தயாரிப்பு விமானங்களுக்கு ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காமல் கஷ்டப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலையில் காசு பார்ப்பதற்காக இரஷ்ய இராணுவ அதிகாரிகளும் உளவுத்துறையும் சேர்ந்து இதைச் செய்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆயுதக் கிடங்கிலும் தனியாக விமானம் வந்து இறங்கி ஏற்றிச் செல்ல ஓடுதளங்கள் உண்டு. அவற்றில் இரவோடு இரவாக காவலாளிகளைக் கையில் போட்டுக் கொண்டு ஆயுதங்கள் விக்டரின் விமானத்தில் ஏற்றப்படும். இந்தக் காட்சியை நீங்கள் தத்ருபமாக கற்பனைசெய்து பார்க்க விரும்பினால் லார்ட் ஆப் வார் (LORD OF WAR) என்ற இந்தப் படத்தைப் பாருங்கள். அப்படி பலப்பல ஆயுதச் சாலைகளில் ஆயுதங்கள் விமானங்களில் ஏற்றப்படுவதைக் காட்டியிருப்பார்கள். கதையின் நாயகன் நிக்கோலஸ் கேஜ், உக்ரேனியன் என்று தன்னைச் சொல்லிக்கொள்வார். இந்தப் படம் விக்டர் பௌட்டைப் பற்றியது என்ற ஒரு கூற்றும் உண்டு. ஆனால் அவரை நல்லவனாகப் படத்தில் காட்டியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
சரி விஷயத்திற்கு வருவோம்...
ஒரு விமானம் ஆயுதங்கள் கடத்துவது தெரிந்தால் அந்த நாட்டு விமான நிலையங்களிலோ அல்லது வேறு நாடுகளில் எரிபொருள் நிரப்பும்போதோ தடுத்து நிறுத்தி முடக்கமுடியுமே.. விக்டர் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்கு.? இதைப்பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் AIRCRAFT REGISTRY எனப்படும் விமானப் பதிவு பற்றிய விபரங்களைப் பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும். RTO ஆபிஸில்போய் வண்டியைப் பதிவு செய்வது மாதிரி, ஒவ்வொரு விமானத்தையும் ஏதாவது ஒரு நாட்டில் பதிந்து கொண்டாக வேண்டும். அந்த நாட்டின் சட்டதிட்டப்படிதான் அந்த ஊழியர்களைக் கைது செய்யவோ முடக்கவோ முடியும். வேறு நாட்டில் அந்த விமானத்தை ஒன்றும் செய்ய இயலாது. சட்டம் சரியாகத் தானே இருக்கிறது. ஆனால் இங்குதான் சு{ட்சுமம் இருக்கிறது. ஒரே விமானத்தை பல நாடுகளில் பல பெயர்களில் போலியான விபரங்களைக் கொடுத்து பதிந்து செய்து கொள்வது. இதனால், அதே விமானம் பல்வேறு நாடுகளில் உள்ளுர்ப் போலீஸ் எதுவும் செய்ய முடியாமல் சர்ரென்று பறந்து போய்விடும். இதே கதை கப்பலுக்கும் உண்டு. அதன் விவரஙகள் இதே தொடரில் வேறு சில புண்ணியவான்களைப் பற்றிச் சொல்லும்போது வரும். விக்டரின் விமானங்கள் இரண்டு நாடுகளில் பதியப்பட்டிருந்தன. ஒன்று லைபீரியா மற்றது ஈக்வெட்டோரியல் கினியா. இதில் லைபீரியாவின் AIRCRAFT REGISTRY எங்கிருந்தது தெரியுமா. லண்டனில் உள்ள கெண்ட் நகரத்தில், அதுவும் விக்டர் வாடகை கொடுத்துவரும் ஒரு அலுவலகத்தில். இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்குமே. லைபிரிய REGISTRY-க்கு நெருக்குதல் வந்தால் கினியா REGISTRY-யில் அதே விமானம் சில மணிநேரங்களுக்குள் பதிவாகி ஆணவங்கள் தயாராக இருக்கும்.
விக்டரின் விமானங்கள் லைபிரியாவிலோ அல்லது கினியாவிலோ பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா விதமான தனது விமானச் சேவைகளுக்கும் அலுவலகம் உட்பட இயங்குதளமாக பயன்படுத்திக் கொண்ட இடம் எது தெரியுமா...
ஆச்சரியப்படாதீர்கள்... ஆம்.. சார்ஜாவேதான்.
அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவிலிருந்துதான் விக்டர் பௌட்டின் விமான சேவை தொடரந்து நடந்து கொண்டிருந்தது. இவரின் விமானங்கள் ஒரு நாட்டிற்கே தேசிய விமானமாக பணியாற்றியதும் நடந்தது. அந்த ஏழை நாடு சென்ட்ரல் ஆப்ரிக்க குடியரசு. எப்படிப்பட்ட போர்வைகள்.. எப்படிப்பட்ட நெட்வொர்க்.
எங்கும் யார் கண்ணிலும் நுழைந்து வெளிவந்து கொண்டிருந்த விக்டரை, ஒரு இயக்கம் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிப் பார்த்தது. அந்த இயக்கத்திற்கு அடுத்தவர் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்றால் பொங்கல் சாப்பிடுவது மாதிரி.. முதலில் ரஷ்யாவின் கண்ணில், பிற்பாடு அமெரிக்காவின் கண்ணிலும்... இன்னேரம் புரிந்திருக்குமே...
இல்லையென்றால் பரவாயில்லை...
அது... தாலிபான்.
விக்டரின் முதல் ஆயுத வியாரத்திற்கு 1992-ல் பிள்ளையார் சுழியிட்டவர்கள் வடக்குக் கூட்டணி என்றழைக்கப்பட்டு வந்த தாலிபான்களின் எதிர்ப்புக் குழுவினர். ரஷ்யாவால் உருவாக்கப்பட்டிருந்த இந்த அமைப்பினரை அமெரிக்காவால் உருவாக்கப்பட்டிருந்த தாலிபான்கள் கடுமையாக எதிர்த்து ஒரு நாளில் ஆட்சியையும் பிடித்தனர் என்பது பிந்தைய வரலாறு. 1995ல் தாலிபானின் மிக் ரக போர்விமானமொன்று விக்டரின் ஆயுதவிமானத்தை மறித்து கந்தகாரில் தரையிறக்கி விமானத்தை முடக்கி வைத்துக் கொண்டது. அதன் சிப்பந்திகளையும் சிறையிலடைத்தது. விக்டர் என்னென்னமோ பேசிப்பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு தாலிபான்கள் சிலர் அசந்த வேளையில் அந்தச் சிப்பந்திகளெல்லாம் ஓடிப்போய் அவர்களது விமானத்திலேறி தப்பி வந்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அங்கு பேரம் ஒன்று நடந்தேறியதாகவும்,, இனி தாலிபான்களுக்கும் ஆயுதந்தருவதான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாகவும் சொல்லப்படுகிறது.
சார்ஜாவில் ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான்,. அதாவது 1995ல் சுதந்திர வர்த்தக வளாகம் (FREE TRADE ZONE) ஏற்படுத்தப்பட்டது. அச்சமயத்தில் துபாயில் ஜெபல் அலி சுதந்திர வர்த்தக வளாகம் (JAFZA - JEBEL ALI FREE TRADE ZONE AUTHORITY) பல்வேறு நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவித்த வண்ணம் இருந்தது. அதைப் பின்பற்றி ஏற்படுத்தப்பட்ட சார்ஜா வளாகம் விக்டருக்கும் தாலிபான்களுக்கும் ஆயுதங்களிலிருந்து குண்டுசி வரை, சாட்டிலைட் போனிலிருந்து குளிர்சாதனப் பெட்டி வாங்குவது வரை.. கொள்முதல் செய்யும் கிழமைச் சந்தையாகிப் போனது. சார்ஜாவில் கன ஜோராக தொழில் நடந்தேறியது. விரைவில் தாலிபான்களும் விக்டரும் மிகவும் அன்னியோன்யமாகிப் போனார்கள். விக்டரின் பொறியாளர்கள் ஆப்கானிஸ்தான் சென்று தாலிபான்களின் தேசிய விமானங்களைப் பழுது நீக்கி வரும் வேலையெல்லாம் செய்தனர். பின்னர் இது மென்மேலும் மெருகேறி ஆட்களை பயிற்றுவிக்க ஏற்றிச் செல்வது, போதைப்பொருள் ஏற்றிச் செல்வது போன்ற இன்ன பிற துஷ்ட காரியங்களுக்கெல்லாம் விக்டர் துணைபோனார்.. தாலிபான் விக்டருக்கு கொடுத்த தொகை ஐம்பது மில்லியன் டாலர்களுக்கும் மேல் இருக்கும். ஐம்பது மில்லியன் என்பது சிறியதொகையாக விக்டருக்குத் தெரிந்தாலும் அவர் விற்ற தளவாடங்களில் அவருக்குக் கிடைத்த லாபம் மிக மிக அதிகம். இந்த சின்ன மீன் இவரை பெரிய மீன் பிடிக்கத் தூண்டியது.
ஆயுதங்களை மட்டும் விற்றுக் கொண்டிருந்தால் தான் ரொம்ப காலம் பிஸினஸ் செய்ய முடியாது என்று நினைத்த விக்டர், மனிதாபிமான உதவிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்று பணம் பார்ப்பதில் குறியானார். இது அவருக்கு வெளிப்படையாக ஒரு நல்லவர் என்ற தோற்றத்தை பெற்றுத் தரும் என்று நம்பினார். அவர் 90-களில் மேற்கு ஆப்ரிக்காவில் அதிக கவனம் செலுத்தி வந்தார் பெரும்பாலான விமானங்கள் அரிசி மற்றும் உணவுப்பொருள்களை அகதிகளுக்குக் கொண்டு போய் கொடுத்துவந்தன. லைபீரியா, அங்கோலா, காங்கோ, சுடான் எல்லா இடத்திலும் பிரச்னைகள். அங்கு ஐநா சார்பாகவும் ஏனைய ஐநா உறுப்பினர்களுக்காகவும் விமானசேவை; மறுபுறம் பிரச்னை நடத்திக் கொண்டிருக்கும் இரு தரப்பினருக்கும் ஆயுதங்கள் கொடுப்பது என்று ஆப்பிரிக்க மக்கள் தொகையை பெருமளவில் அழித்ததில் பெரும்பங்காற்றியவர் இந்த விக்டர்.
இவரின் நேர்மையான சரக்கு விமானப் போக்குவரத்தில் ருவாண்டாவிற்கு பிரெஞ்ச்சுத் துருப்புகளை ஏற்றிச் சென்றது முதல், சுனாமியின் போது இலங்கைக்கு உதவிப்பொருள் கொண்டு வந்து சேர்த்த வரையில் அடங்கும்.
இந்த வகையில்தான் ஏற்கனவே நாம் கண்டிருந்தபடி விக்டர் பெண்டகனை தனது கஸ்டமராக்கியதும் நடந்தது. விக்டர் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், பெண்டகன் அதிகாரிகளின் மூலமே தொடர்ந்து காண்ட்ராக்ட் பெற்ற வித்தையைப் பற்றி அடுத்துப் பார்க்கலாம்.
0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
Post a Comment