ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி.

ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் புற்றுநோயால் பீணிக்கப்பட்டு இன்னுயிர் நீத்திருக்கிறார். அன்னாரை இழந்து வாடும் அடில் அம்மையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரைப்பற்றி சரியாக அறிந்திராதவர்களுக்காக பாலா அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்:

ஆன்டன் தனிஸ்லாஸ் பாலசிங்கம் என்ற பாலா அவர்கள் கொழும்புவிலிருந்து தற்போதும் வெளியாகும் வீரகேசரி என்ற தமிழ்ப்பத்திரிகையின் துணைஆசிரியராகப் பணியாற்றி வந்த, தமிழனுக்கென்று அடையாளமான தமிழ்இனஉணர்வு கொண்ட பத்திரிகையாளர். பிற்பாடு பிரிட்டிஷ் கவுன்சிலில் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக பணியேற்றுப் பின்னர் மேற்படிப்பிற்காக லண்டனுக்கு தம் அன்பு மனைவியுடன் கூடியேறினார்.

லண்டனில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றார். பிற்பாடு லண்டன் குடியுரிமையும் பெற்றார். இளம் வயதிலேயே சிறுநீரகக் கோளாருக்கான தமது மனைவியைக் கண்ணும் கருத்துமாகக் கூட இருந்தே கவனித்து வந்தார். அங்கு பணியாற்றிய அடில் என்ற அந்த ஆஸ்திரேலிய நர்ஸ், இப்படிக் கூட ஒரு கணவன் தன் மனைவியைக் கவனித்துக் கொள்ளமுடியுமா என்று வியந்து போவார். ஒருநாள், பிறப்புக்கும் சாவிற்கும் இடையிலான மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவை பாலாவிற்கு அளித்துவிட்டு, இறைவனடி சேர்ந்தார் அந்த அம்மையார். பிற்பாடு அடிலை மணம் புரிந்தார் பாலா அவர்கள். இந்தக் காலகட்டம் தான் பாலா அவர்களைத் தமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒத்த கருத்துடையோர் இணைந்து செயலாற்றுவதை யாராலும் தடுக்க இயலுமா..

பிற்பாடு பாலா அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் யாவரும் அறிந்ததே.

பாலாவைத் திருமணம் செய்து கொண்டபோது தனது எண்ண வெளிப்பாடை இவ்வாறாக வெளிப்படுத்தியிருக்கிறார் அடில் அம்மையார்("The Will to Freedom" by Adele Balasingham - pages 19-23).

"நான் வெறுமே பாலாவை மட்டும் திருமணம் செய்ததாக நினைக்கவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளை, ஒரு சமுதாயத்தின் வரலாற்றை, தமிழர்களின் இனஉணர்வை, அதன் பலத்துடனும், அதன் பலவீனத்துடனும், அதன் பெருமிதமான வரலாற்றுடனும், அதன் தோல்விகளுடனும் தான் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்."

எவ்வளவு பெரிய சிந்தனை....

பாலா அவர்களை இழந்து வாடும் அடில் அம்மையாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குவோம்.

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: