ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 2

விக்டரின் கடந்தகாலம், ஒன்று, சரியாக யாருக்கும் தெரியவில்லை.. இல்லையென்றால் விக்டர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பியிருக்கிறார் என்று அர்த்தம். ஏனென்றால், ஒவ்வொரு உளவுத்துறையும் வேறு வேறு விதமான கடந்தகால வரலாறுகளை வைத்திருக்கிறார்கள். அவருக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் அவரின் அண்ணன் அவர் கூடவே அவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் என்பதும் ஓரளவு ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல். மற்றபடி அவரைப் பற்றிய தனிப்பட்ட தவகல்கள் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட முடியாதவையாக வைத்திருக்கிறார். அவரின் ரஷ்ய பாஸ்போர்ட் அவர் தஜிகிஸ்தானில் ஜனவரி 13 1967ல் பிறந்ததாகச் சொல்கிறது, ஆனால் அவர் 2002ல் மாஸ்கோ ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் துர்க்மெனிஸ்தானில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். 2001ல் தென் ஆப்ரிக்க உளவுத்துறை அவர் ஒரு உக்ரேனியன் என்று பதிவுசெய்திருக்கிறது. அவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் இருப்பதும், அவற்றில் வாடிம் அமினோவ், விக்டர் அனடாலியேவிட்ச் பௌட் விகட் புலாகின் மற்றும் அமெரிக்கர்களால் அறியப்பட்ட விகட்ர பட் என்ற பெயர்களில் அவரிடம் பாஸ்போர்ட்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது போக உளவுத்துறையினருக்குத் தெரியாமல் என்னென்ன பெயரோ.. இன்னும் எத்தனை பாஸ்போர்ட்களோ... மனிதர் வெகு விவரம்...

திட்டமிட்டுத் தன்னைப் பற்றிய விபரங்களை ஒன்று மறைப்பது அல்லது பரப்புவது என்று மனிதர் வெகு சாதுரியமாக நடந்திருக்கிறார். தன்னை ஒரு முன்னாள் விமானப் படை அதிகாரி என்றும் சோவியத் இராணுவத்தின் பல்மொழி பயிற்றுவிப்பு மையத்தில் பயின்றவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் விக்டர் பௌட் ரஷ்யன், ஆங்கிலம் மற்றுமல்லாமல், ப்ரெஞ்ச், போர்ட்சுகீஸ், உஸ்பெக் மற்றும் சரிவர வெளித்தெரிந்திராத பல்வேறு தென் ஆப்ரிக்க மொழிகளைச் சரளமாகப் பேசுவதில் வல்லவராம். பிரிட்டிஷ் மற்றும் தென்ஆப்பரிக்க உளவுத்துறையினர் (இரு நாட்டு அதிகாரிகளும் பெரும்பாலும் பிரிட்டிஷார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது) அவர் இத்தாலியில் 1985 முதல் 1990 வரை கேஜிபி எனப்படும் ரஷ்ய உளவுத்துறைக்காகப் பணியாற்றியவர் என்று குறிப்பிடுகின்றன.

தன்னை எப்போதும் எந்த நாட்டின் உளவுத்துறைக்கும் தொடர்பிருப்பதாக ஒருபோதும் சொல்லியதில்லை மேலும் அப்படி ஒரு குற்றச்சாட்டு சாட்டப்படும்போதெல்லாம் கடுமையாக மறுத்துவந்துமிருக்கிறார். ஆனால் ரஷ்யாவின் பெரும்பாலான ஒருங்குபடுத்திய குற்றச்செயல்களை நடத்திவருவதாகக் குறை கூறப்படும் விக்டர், ரஷ்ய இராணுவத்தின் இரகசிய இராணுவப் பள்ளியின் முன்னாள மாணாக்கர் என்பதும், பனிப்போர் காலங்களில் பல்வேறு நாடுகளுக்கும் கம்யூனிசத் தோழர்களுக்கும் உதவியளிக்க இவர் பெரும் அளவில் பணிபுரிந்திருக்கிறார் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இந்த ஊகம் உண்மையோ இல்லையோ, பனிப்போர் முடிவுற்ற காலகட்டத்திற்குப் பின் சிதறுண்டுபோன இரஷ்யாவின் பல மாநிலங்களின் அவசர வருமானத்திற்கு வழிகோலிய ஆபத்பாந்தவனாகத் தெரிந்தார். உதாரணத்திற்கு, இரஷ்ய விமானப்படை எரிபொருள் நிரப்பக் கூட வழியின்றி இருந்த நேரம் அது. பைலட்டுகளுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கார்கோ விமானமான "ஆன்டனோவ்"கள் எல்லாம் அந்தந்த விமான நிலையங்களில் சீண்டுவாரின்றி காற்றிறங்கிப் போன டயர்களுடன் நின்றிருந்தது.

உடைந்துபோன ரஷ்யாவில், அந்தந்த மாநிலங்களுக்கு யார் பொருளாதார உதவி செய்வார்கள் என்பன போன்ற வயிற்றுப் பிரச்னைகளைப் பற்றி பேச யாரும் இருக்க வில்லை. எத்தனைநாள் சம்பளம் கொடுக்காமல் ஊழியர்களை வைத்திருப்பது. யோசித்தார்கள். ஏக்கர் கணக்கில் கட்டிடம் கட்டி சேர்த்து வைத்திருந்த இராணுவத் தளவாடங்கள் தேவையில்லா பொம்மைகள் போல அவர்களுக்குத் தோன்றின. இராணுவத் தளவாடங்கள் என்ற ஒரு பதத்தில் அடக்கி விட்டாலும் அதன் வகைவகையான உபபொருட்களான ஆயுதந் தயாரிக்கும் தொழிற்சாலைகள், துப்பாக்கிகள், டாங்க்குகள், வெடிபொருள்கள், விமானங்கள், இராக்கெட்டுகள், ஏவுகணைகள் என லிஸ்ட் பெரியது (அமெரிக்கா விவரமாக ரஷ்யாவின் அணுஆயுத உற்பத்தி பகுதிக்களை தனது நேடிக் கண்காணிப்பில் வைத்திருந்தது). ஆக இவர்களுக்கெல்லாம் இதை உலகெங்கும் இரகசியமாக நம்பிக்கையுடன் விற்றுக் காசு கொடுக்க ஒரு நம்பகமான நபர் தேவைப்பட்டார். அந்த நபர்தான் விக்டர் பௌட்.

சற்று முன் பார்த்தோமே.. ஆன்டனோவ் கார்கோ விமானங்கள்... விமானமும் ஓட்டக் கற்றிருந்த விக்டர், ஒரு புண்ணிய நாளில் யோசிக்க யாருக்கும் அவகாசமின்றி மூன்று ஆண்டனோவ் ரக விமானங்களை $120,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான்.

உங்களுக்கு உங்களின் 25 வயதில் மூன்று மிகப்பெரிய கார்கோ விமானங்களைக் கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

விக்டர் என்ன செய்தார் தெரியுமா..

2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

திரு,

பிளாக்கரில் பெரியார், பார்ப்பன விவகாரங்களையே படித்துக் கொண்டு இருந்த எனக்கு இது வித்தியாசமாக உள்ளது ( உபயோகமானதும் கூட ) இது போன்ற தொடர்களை மேலும் எழுதுங்கள் )

said...

பார்ப்பனீயம் திராவிடம் பற்றி மட்டுமா என்ன... ஒரு அமைப்பாகவே சிலபேர் இஸ்லாமியர்களை வம்புக்கு இழுப்பதும், பிறகு அரபுநாடுகளில் வேலைசெய்துகொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் புராணங்களிலிருந்தெல்லாம் விளக்கம் அளிப்பதும்... ஒரே ஸ்ட்ரீயோடைப்பாக அல்லவா இருக்கிறது.

ஆமா... நீங்க ஏன் அனானியாவே வந்து எழுதிக்கிட்டிருக்கீங்க.. என்ன பயம்?