ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 5
டிசம்பர் 17, 1995 - சரியாக 11 வருடங்களுக்கு முன்னாள் கல்கத்தாவின் அருகில் உள்ள புருலியா மாவட்டத்தின் 7 கிராமங்களில் நள்ளிரவில் ரஷ்ய ஆண்டனோவ் ரக விமானம் (Antonov-21) தாழப்பறந்து பாராசூட்கள் மூலம் எதையோ இறக்கிவிட்டுச் சென்றது. நல்ல தூக்கத்தில் இருந்த கிராமத்து மக்கள் தாழப் பறந்த விமானத்தின் இரைச்சலால் தூக்கம் விழித்தனர். இளைஞர்கள் சில தாழப்பறந்த விமானத்தைத் துரத்தி ஓடினர். அப்போதுதான் வெள்ளை நிறத்தில் குடைவிரித்து பாராசூட் இறங்குவதைக் கவனித்து, அந்தப் பாராசூட்டை நெருங்கிப் பார்த்தால் ஒரு கள்ளிப் பெட்டி. தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டுவந்து அந்த நள்ளிரவிலும் அதை உடைத்துப் பார்த்தனர். அப்போது என்ன சத்தம் என்று கேட்டுக் கொண்டு அரைகுறையாக விழித்திருந்த கிராமத்தினர், அந்தப் பெட்டியிலிருந்த பொருளைக் கண்டவுடன் சுத்தமாக தூக்கம் கலைந்தனர். அது, எப்போவோவது உள்ளுர்ப் பொதுத் தொலைக்காட்சியில் வரும் சினிமாவில் வில்லன்கள் கோஷ்டி வைத்திருக்கும் அதே கலானிஷ்கோவ் ரக துப்பாக்கிகள்.
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கண்டனங்கள் கண்டபடி பறந்து செய்தித்தாள்களில் அல்லோலகலப்பட்டுக் கொண்டிருக்க, அந்த விமானம் கல்கத்தாவிலிருந்து பாங்காக் போய் மீண்டும் கல்கத்தா திரும்பி வரும்போது வானிலை சரியில்லாத காரணத்தால் சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டது. சென்னையிலிருந்து கராச்சி நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த விமானம் தரையிறங்க இரண்டு மணிநேரம் இருக்கும்போது மும்பையின் விமானக்கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளால் பறக்க அனுமதி வாங்காத வான் எல்லையில் பறப்பதாகக் கூறி மும்பைக்குத் திரும்பச் சொல்ல வேறுவழியின்றி, ஐந்து நாள் இடைவெளியில் ஆயுதந்தூவிய அதே ஆண்டனோவ் விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. பிறகென்ன மாமியார் வீட்டு வாசம் தான். இந்த ஐந்து நாள்களில் அந்த விமானம் பலமுறை இந்திய வான் வெளியில் பறந்து சென்றிருக்கிறது. யாரும் அதைத் தரையிறக்க ஏன் சொல்லவில்லை என்பது மர்மமாகவே இருந்தது.
விமானத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படிடையில் ஓட்டவந்த லாட்விய விமானச்சிப்பந்திகளும், அந்த விமானப் பயணத்தை முன்னின்று நடத்தி வந்த பீட்டர் பிளீச் என்ற முன்னாள் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியும் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த விமானப்பயணத்தை மற்றும் ஆயுதங்களை போடுவதற்கு ஏற்பாடு செய்த (டேவி) நீல்ஸன் என்பவரும் அதே விமானத்தில்தான் பயணம் செய்திருந்தார். ஆனால்... என்ன ஆனால்... இல்லையென்றhல் அவர் எப்படி சரியான வில்லனாக இருக்க முடியும். ஆம், போலீஸிற்கு டிமிக்கியோ.. கடுக்காயோ கொடுத்துவிட்டுத் தப்பி விட்டார்.
விமானச் சிப்பந்திகளையும் பீட்டர் பிளீச்சையும் விசாரித்ததில் ஒரு விஷயமும் புலப்படவில்லை. பத்திரிகைகளும் அவர்கள் இஷ்டத்திற்கு கண் காது மூக்கு வைத்து எழுதினார்கள். பீட்டர் பிளீச்சின் வாக்குமூலத்தை லண்டனிலிருந்து உளவுத்துறை உண்மைதான் என்று உறுதி செய்தது. அதன்படி ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பிற்கு அந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனந்தமார்க்கம் என்ற அமைப்பு மலைவாசி மக்களுக்காக போராட ஏற்படுத்தப்பட்ட ஒரு அமெரிக்க பிராக்ஸி அமைப்பு. இந்திய உளவுத்துறையின் கணிப்பின்படி ஆனந்த மார்க்கத்திற்கு ஆயுதந்தாங்குவது மாதிரியான நோக்கமில்லை என்பதில் உறுதிபட இருந்தார்கள். ஆக யார், செலவு செய்து இந்த ஆயுதத்தூவலைச் செய்திருக்கின்றனர் என்பது சரியாகப் புரியவில்லை. குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட அனைவருக்கும் இந்தியச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குச் சென்றனர். அப்பீல்கள் ஒன்றும் வேலைக்காகவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் லாட்விய விமானச் சிப்பந்திகள் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்பட்டு ஊருக்கு அனுப்பப்பட்டனர். மற்றுமொரு வருடங்கழித்து பீட்டர் பிளீச்சும் அதே முறையில் விடுதலைசெய்யப்பட்டார். ஆயுதமழைக்கான காரணம் மட்டும் இன்னமும் இருட்டுக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே வரவில்லை.
பீட்டர் பிளீச் என்ற முன்னாள் பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி ரிடையர் ஆன காலத்தில் ஆயுத வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார். அதன்படி தனது தொடர்புகளின் மூலம் இதைச் செய்வது என்றபின் ஒரு கண்டிஷன் போட்டிருந்தது பிரிட்டிஷ் உளவுத்துறை. அது என்ன வென்றhல் எந்த விதமான ஆயுத வியாபாரமும் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிவிக்கப்படாமல் நடத்தக் கூடாது. அப்படி நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரியென்றெல்லாம் பார்க்காமல் கம்பியெண்ண வேண்டியதுதான். இந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு பிளீச் ஆயுத வியாபாரத்தில் இறங்கினார். அதிகாரியெல்லாம் வியாபாரம் செய்வதில் அவ்வளவு நுணுக்கம் இல்லாதவர்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதை பிளீச் நிருபித்தார். விக்டரைப் போல கண்ணாமூச்சி விளையாடத்தெரியாமல், இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சில வருடங்கள் கல்கத்தா சிறையிலிருந்தபின், டோனி ப்ளேர் அத்வானியிடம் பேசுமளவிற்கு இந்த விஷயம் போய் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
பிளீச்சை விடுவிக்க டோனி பிளேர் பேசினாரென்றhல்.. லாட்விய விமானச் சிப்பந்திகளை விடுவிக்க யார் பேசியிருப்பார்கள்... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்று கண்டுபிடித்திருந்தால் உங்களைக் கண்ணாடியில் நின்று ஒருமுறை பாராட்டிக் கொள்ளுங்கள். லாட்வியா ரஷ்ய எல்லையில் உள்ள ஒரு மிகச் சிறு நாடு... பெரும்பாலான நேரம் பனிபெய்து கொண்டிருக்கும் அந்த நாடு, இந்தியாவிற்கு மாலத்தீவு மாதிரி;, ரஷ்யாவின் சிஷ்யகோடி நாடு.
இந்திய உளவுத்துறை இந்த சம்பவத்தைப் பற்றிய விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அளிக்க வில்லை.
அது அவர்களின் சௌகரியம் அல்லது வழக்கமான நடைமுறையாக இருக்கும்..
நாம் என்னதான் நடந்தது என்று சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.
(விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட்டதால் இந்தத் தொடரில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. இனி தொடர் வாரமிருமுறை தொடர்ந்து வெளிவரும்)
1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
Very interesting. Keep it up!
Post a Comment