ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 4

புதிது புதிதாக கம்பெனிகளை உருவாக்கி அதன்பேரில் இருக்கின்ற விமானங்களையே மீண்டும் மீண்டும் பதிவு செய்து உளவுத்துறையினரைத் திணறடித்துக் கொண்டிருந்தார் விக்டர். இந்தமாதிரியான சூழலில் ஈராக்கில் ஹாலிபர்ட்டன் என்ற நிறுவனத்தினரிடம் ஒரு கான்ட்ராக்ட் பெற்றுவிட்டிருந்தார். ஹாலிபர்ட்டன் என்பது அமெரிக்காவில் அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்குப் பெற்ற ஒரு கம்பெனி. அதன் டைரக்டர்கள் பெரும்பாலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளாகவோ.. அல்லது தற்போதைய செனட்டர்களாகவோ இருப்பார்கள்.

அமீரகம் அமெரிக்காவின் அன்புடன் கூடிய கண்டிப்பால் விக்டர் சார்ஜா மண்ணில் காலூன்றாதவாறு பார்த்துக்கொள்ள உறுதியளித்திருந்தது. ஆனால்.. ஈராக்கிற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் அந்தக் கான்ட்ராக்டை எப்படியும் விக்டரின் கம்பெனி பெற்றுக் கொண்டிருந்தது. விக்டர் பற்றித் தொடர்ந்து துப்பு துலக்கிவரும் அதிகாரி அவ்வப்போது தனது மேலதிகாரியினருக்கு விக்டர் தற்போது எந்தப் பெயரில் கம்பெனி தொடங்கியிருக்கிறார் என்று விபரமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், சார்ஜாவில் ஈராக் சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் அதிகாரி விக்டரின் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். அதற்குச் சொல்லப்ட்ட காரணம் என்ன தெரியுமா.. அவசரமாக ஏற்றியனுப்பச் சொல்கிறீர்கள்.. என்ன செய்வது.. யார் என்ன என்ற பின்னணியையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. அப்படி ஆராய்ந்துதான் அனுப்ப வேண்டுமென்றால் எல்லாப் பொருள்களும் சற்று தாமதமாகவே வந்து சேரும் பராவாயில்லையா... என்று கேட்க.. சரியான நேரத்தில் சரக்குகள் வரவில்லையென்றால் துருப்புகள் துப்பாக்கியைத் திருப்பிப்பிடித்துவிட்டால் என்ன செய்வது... சரி சரி.. எப்படியோ தொலை.. அதை அந்த பென்டகன் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும். என்று.. இப்படியாக..இது வழக்கமாகிப்போனது.

எப்படியும் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி தப்பித்து விடும் விக்டர் பௌட்டை இன்றைக்கு உளவு நிறுவனங்கள் கண்டுகொள்வதை நிறுத்தி விட்டதாகவே தோன்றுகிறது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ விக்டரைப் பற்றி உளவறியும் அதிகாரியை வேறுவேலைபார்க்க பணித்துவிட்டது. பெல்ஜியத்தில் சரியான ஆதாரங்களுடன் விக்டர் சிக்கியிருக்க.. அதை விசாரிக்கும் அதிகாரிக்களுக்கிடையில் சில மோதல்களால் அந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட.. பிரிட்டிஷ் உளவு நிறுவனம் மட்டும் இதுபற்றி விடாக்கொண்டனாக தொடர்ந்து கவனித்துவருகிறது. தற்போது பிரிட்டனில் இறந்து போன முன்னாள் ரஷ்ய கேஜிபி உளவாளி ஒருவரைப் பற்றி பிரிட்டிஷ் அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதின் பிண்ணனியில் விக்டர் பௌட்டை சிக்க வைக்கும் சூட்சுமம் இருப்பதாக சர்ச்சை உள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது போகப்போகத் தெரியும்.

இவ்வளவு கூத்துக்கிடையிலும் விக்டர் மாஸ்கோவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்துவருகிறார். அவரின் பாஸ்போர்ட் காப்பிகூட இன்டர்நெட்டில் இருக்கிறது. ஆனால் அவரை சமீபத்தில் பெய்ருட்டில் பார்த்ததாக சில ஒற்றர்கள் தகவலனுப்பியருந்தனராம். ரஷ்ய அரசு ஒரு முறை அவர் ரஷ்யாவில் இல்லை என்றே இன்டர்போலுக்குத் தகவல் அனுப்ப. புத்திசாலித்தனமாக அவர்கள் சிறிது காலத்திற்குமுன்னர் ரஷ்ய வானொலிக்கு விக்டர் பௌட் என்றே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அளித்த பேட்டியின் ஒலிநாடாவைக் கொடுத்தபின்னர்.. எங்களுக்குத் தெரியாமல் இங்கிருக்கலாம் என்று சொல்லி மழுப்பியது தனிக்கதை.

விக்டருக்கு அப்படி என்ன நோக்கம். அப்பாவி மக்களைக் கொல்வதற்கு ஆயுதம் விற்பதும் ஒரு பிழைப்பா.. ஏதாவது மனசாட்சி என்று ஒன்று அந்த மனிதருக்கு இருக்குமா.. மனசாட்சியைக் கொன்று விட்டு செயல்படத் தூண்டியது... கொழுத்த லாபமா?... இல்லை.. ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு சாகசம் செய்வதில் ஈடுபடா.. எது விக்டரை இப்படி ஒரு மோசமானவராக்கத் தூண்டியது... வேலு நாயக்கரைக் கேட்டது போல் நீங்க நல்லவரா அல்லது கெட்டவரா என்று இவரைக் கேட்க எந்தப் பேரனும் இன்னும் வரவில்லை..

ஆயுதம் விற்போருக்கும் கலகம் செய்வோருக்கும் ஒரு நாட்டைச் சீரழிக்க நினைக்கும் சில பெரிய மனித நாடுகளுக்கும் விக்டர் பௌட் மாதிரியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். இவர் இவ்வளவு காலம் யார் பிடியிலும் சிக்காமல் இருக்கும் இரகசியம் என்னவென்று கேட்டால்... நல்ல செய்தியோ.. கெட்ட செய்தியோ.. யாராவது போஸ்டமேனைச் சுடுவார்களா.. விக்டர் போஸ்டமேன் மாதிரி;. அவர் வேலை டெலிவரி செய்வது. அவ்வளவு தான். அவரைப் போய்ப் பகைப்பானேன். என்று அவரின் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இந்த ஒரு விஷயம் தான் விக்டரை இன்றுவரை எந்த வில்லங்கத்திலும் மாட்டாமல் தப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதை மிக லாவகமாகத் தனக்குப் பயன்படுத்திக் கொள்வதில் விக்டர் வல்லவராக இருக்கிறார்.

ஒரு வகையில் விக்டர் போன்ற தனி மனித ஆயுத வியாபார அமைப்புகள் இருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகள் சுலபமாக நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடிகிறது. விக்டர் போன்ற ஒருங்கிணைக்கும் ஆட்கள் இல்லையென்றால்.. ஆயுத வியாபாரம் ஒன்றும் படுத்துவிடப்போவதில்லை. ஆயுதத் தொழிற்சாலைகள் இயங்கியாக வேண்டுமே.. உற்பத்தியை விற்றாக வேண்டுமே... சிறுசிறு குழுக்களாக ஆயுதம் விற்பவர்கள் சிதறிப்போனால், யார் யார் ஆயுத வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிப்பது சாத்தியமாகது. ஏனெனில் அப்படி சிறு சிறு குழுக்களாக ஆயுத வியாபாரம் செய்தால், ஒன்று என்ன, எத்தனை அரசுகள் முன்வந்தாலும் சரியான முறையில் துப்புச் சேகரிப்பது முடியாமல் போகும். அரசுகளுக்கே ஆபத்தாகப் போகும். ஆகையால்.. விக்டர் போன்ற ஆயுத வியாபாரிகள் இன்னும் செழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விக்டர் போனால் இன்னொரு ராபர்ட் வருவார்... ஆக ஆயுதத் தொழிற்சாலைகள் இருக்கும் வரை ஆயுத வியாபாரிகள் இருக்கத்தான் போகிறார்கள்.

விக்டரின் பராக்கிரமத்தைப் பற்றி எழுதியது இப்போதைக்குப் போதும் என்று நினைக்கிறேன். இனி வேறு சில புண்ணியவான்களைப் பற்றிப் பார்க்கலாமா...

அடுத்து நாம் பார்க்கப் போவது...

1995 வாக்கில் மேற்கு வங்காளத்தில் புருலியா என்ற இடத்தில் நள்ளிரவில் ஒரு விமானம் துப்பாக்கிகளைத் தூவிவிட்டுச் சென்றதே நினைவிருக்கிறதா... தமிழ்ப்பத்திரிகைகளில் கூட.. புருலியா ஆயுதமழை என்று வர்ணித்தனவே... அதைப் பற்றித்தான்.

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

திரு... என்ன ஆச்சு.. உங்க தொடர்... விடுமுறைக்குப் போயிட்டிங்களா?